Sunday, 25 January 2026

கேள்வி-பதில் (25.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: இரு தரப்பினரைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் பேசும்போது, சிலரைப் 'பங்காளிகள்' என்றும், சிலரை 'மாமன் மச்சான் போன்றவர்கள்' என்றும் சொல்கிறார்கள். அரசியலில் இந்த உறவுகளுக்கு என்ன அர்த்தம்?

 

பதில்: 'நாங்கள் பங்காளிகள்' என்றால், 'எங்களுக்குள் முன்பு போட்ட சண்டையை ஒரு பரஸ்பர ஆதாயத்திற்காக ஒத்தி வைத்திருக்கிறோம்' என்று அர்த்தம். நாங்கள் 'மாமன் மச்சான் போல் இருக்கிறோம்' என்று சொன்னால், 'எங்களுக்குள் உள்ள புகைச்சல் கனன்றபடி இருக்கிறது, இன்னும் தீரவில்லை' என்று அர்த்தம்.

 

 

2. கேள்வி: திமுக தலைவர் ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "வரும் சட்டசபைத் தேர்தல் ஆரிய-திராவிடப் போரின் மற்றொரு களம்" என்று சொல்லி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: அவருக்கே அர்த்தம் தெரியாது.

 

ஆரிய பூதம், திராவிட பூதம் என்று இரண்டு பூதங்களைத் திமுக கற்பனையாக உருவாக்கி, அதில் திராவிட பூதம் நல்ல பூதம், ஆரிய பூதம் கெட்ட பூதம் என்றும் கதை கட்டி, அந்த பூதங்கள் நிஜமானவை என்று மக்கள் நம்பவேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. மக்கள் நம்பவில்லை. இருந்தாலும், ஸ்டாலினுக்கு அரசியலில் பதட்டம் ஏற்படும்போது - அதுவும் தேர்தல் வரும் காலத்தில் - அந்த இரண்டு பூதங்களுக்குள் பெரிய மோதல் இருந்து வருகிறது, திராவிட பூதத்திற்குத் திமுக துணையாக நின்று ஆரிய பூதத்தை வீழ்த்தும் என்று வசனம் பேசி, தனது பதட்டத்தைத் தணித்துக் கொள்வார். இல்லாத இரண்டு பூதங்களில் எதுவும் வெல்வதில்லை, தோற்பதுமில்லை.

 

 

3. கேள்வி: "தேசபக்தி குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கவேண்டாம்" என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: முதல் விஷயம்: திமுக-வினருக்கு தேசபக்தியில் நாட்டம் இல்லை.

 

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்ககளை நினைவு கூர்வதற்காக, ஆண்டு தோறும் 'மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை'க் கருப்பு உடையில் அனுசரிக்கின்றனர் ஸ்டாலினும் மற்ற திமுக-வினரும். தேச விடுதலைக்காகத் தியாகங்கள் செய்து போராடியவர்களை - அவர்களில் தமிழரான காமராஜையாவது - திமுக உள்ளார்ந்து போற்றுவதில்லை, பெருமிதத்துடன் நினைவு கூர்வது இல்லை.

 

ஜீவ காருண்யம் குறித்து கசாப்புக் கடைக்காரனுக்கு யார் பாடம் எடுப்பார்கள்? அவனுக்கு யாரிடம் பாடம் கேட்கப் பிடிக்கும்?

 

 

4. கேள்வி: தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக-வை நீக்கிவிட்டுத் தனது கட்சி ஆட்சிக்கு வரும் என்றும், "நான் ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டேன், எனக்கு அது தேவையும் அல்ல" என்றும் பேசி இருக்கிறார். அவர் பேச்சு நம்பிக்கை தருகிறதா?

 

பதில்: திமுக-வும் ஊழலும் பிரிக்க முடியாதவை என்பது சரிதான். ஆனால் இதுவரை ஆட்சிக்கு வராதிருந்து, திமுக-வைத் தேர்தலில் எதிர்ப்பதால் மட்டும் ஒரு கட்சி ஊழலுக்கு எதிரானது என்று ஆகாது. முதலில் விஜய் கட்சி ஆட்சிக்கு வருகிறதா, பார்க்கலாம். மற்றவை பிறகு.

 

இன்னொன்று. இன்றுவரை விஜய் வெளிப்படுத்தி இருப்பது வீர வசனங்கள், மார் தட்டல்கள், விசில் சத்தம் மட்டுமே.  ஊழலை நிராகரித்து, நேர்மையாகவும் திறமையாகவும் ஆட்சி செய்ய முடிகிற ஒரு தலைவரிடம், அவரது பேச்சிலும் உடல்மொழியிலும், நிதானம், முதிர்ச்சி மற்றும் சமநிலைப் பார்வை ஆகிய பண்புகள் தென்படும். பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் விஜய்யிடம் அந்தப் பண்புகள் தெரியவில்லை.

 


5. கேள்வி:  கணவன் முக்கியமானவன் என்பதைச் சொல்லும் பழமொழி, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்.' மனைவி முக்கியமானவள் என்று சொல்கிற பழமொழி இருக்கிறதா?

 

பதில்: அதே விதத்தில் புதுமொழியாகச் சொல்லலாம்: மண்ணானாலும் மனைவி, பூண்டானாலும் பொஞ்சாதி.


பகுதி 43 // 25.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Saturday, 24 January 2026

கேள்வி-பதில் (23.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால், ஆண்களும் அரசு பஸ்களில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்த பின், "இனிமேல் மனைவியோடும் காதலியோடும் ஆண்கள் அரசு பஸ்ஸில் சினிமா செல்லலாம், ஊர் சுற்றலாம்" என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி இருக்கிறாரே?

 

பதில்: தத்துப்பித்து பேச்சு.  "எங்கள் ஆட்சியில் அரசு பஸ்களில் இலவசமாக ஊர் சுற்றுகிறவர்களின் கூட்டம் வழியும் என்பதால், ஜேப்படிக்காரர்களுக்கு வருமானம் பெருகும்" என்று ராஜேந்திர பாலாஜி கூடுதலாகப் பிதற்றவில்லை. அது ஆறுதல்.

 

 

2. கேள்வி: ஒரு அரசியல் கட்சியின் முக்கிய இரண்டாம் கட்டத் தலைவர்கள் மீது அடுக்கடுக்காக 500 கோடி, ஆயிரம் கோடி, பல்லாயிரம் கோடி ரூபாய் என்ற கணக்கில் லஞ்ச ஊழல் புகார்கள் வருகின்றன, ஆதாரங்களும் அம்பலமாகின்றன. அதுபற்றி அந்தக் கட்சியின் தலைவர் கண்டுகொள்ளவே இல்லையே? என்ன அர்த்தம்?

 

பதில்: தங்கள் மீது மெகா லஞ்ச ஊழல் புகார்கள் வந்தாலும், கட்சியின் தலைவர் கண்டுகொள்ள மாட்டார் என்று அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. சாதாரண மக்கள் பலருக்கும் இதுபற்றி, இதன் உள்விஷயங்கள் பற்றி, புரியாது. இதுபற்றி அவர்களுக்குக் கவலையில்லை.

 

உதாரணமாக, சாதாரண மக்கள் பலருக்கு பங்கு மார்க்கெட் புரியாது. பங்கு பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள்தான் மிகப் பெருவாரியான மக்கள். அதுபோல் அவர்களுக்கு இந்த விஷயமும் புரியாது. புரிகிறவர்களுக்குப் புரியும்.

 

 

3. கேள்வி: மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரிய பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அந்தக் கூட்டணி வென்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று ஒருதடவைக்கு மேல் சொன்னார். அடுத்துப் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் அமையப் போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி என்று அடிக்கடி குறிப்பிட்டார். ஏன் இந்த மாறுபட்ட பேச்சுகள் தொடர்கின்றன?

 

பதில்: பழனிசாமியை இரண்டு எண்ணங்கள் தொந்தரவு செய்கின்றன. ஒன்று, ஓ.பி.எஸ்-ஸை அதிமுக-வில் சேர்த்துக் கொண்டால், கட்சிக்குள்  தனக்கென்று பழனிசாமி பிடித்து வைத்திருக்கும் இடம் ஆட்டம் காணலாம் என்ற அச்சம். இன்னொன்று, தேர்தலில் வென்ற பின் பாஜக-வுக்கு மாநில ஆட்சியில் பங்களித்தால், தான் விரும்பியபடி ஆட்சி செய்யமுடியாது, தமிழகத்தில் அதிமுக-வுக்கு எதிர்ப்புறமாக பாஜக வேகமாக வலுப் பெறும் என்ற கவலை. மற்றபடி தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள் என்று பழனிசாமி சொல்வது (அல்லது ஸ்டாலின் சொன்னாலும்), கப்ஸா.

 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து கூட்டணி பலத்தில் ஜெயித்து, ஆட்சியை அதிமுக மட்டும் தனியாக அமைக்கும் என்றால் மக்கள் அவ்விதம் வாக்களித்து திமுக-வை விரட்டுவார்கள்; ஆனால் வெல்லப் போகும் ஜனநாயகக் கூட்டணியே மாநிலத்தில் ஆட்சியும் அமைக்கும் என்றால், மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மெஜாரிட்டி அளிக்க மாட்டார்கள் என்பது சரியல்ல. தேர்தல் வேலைகள் நடக்கட்டும். மற்றவை பின்னர்.

 

 

4. கேள்வி: பிரதமர் மோடியின் மதுராந்தகம் பொதுக்கூட்டம் பற்றி கருத்து சொன்ன முதல்வர் ஸ்டாலின், "பிரதமர் சொல்லும் 'டபுள் என்ஜின்' எனும் 'டப்பா என்ஜின்' தமிழ்நாட்டில் ஓடாது" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஸ்டாலின் தன்னை மக்களிடம் நெருக்கப்படுத்திச் சொல்லும் 'அப்பா' என்ஜின் அதிக பெட்ரோல் குடித்து, பெரிய சத்தம் எழுப்பி, கரும்புகை வெளியேற்றுகிறது, அதோடு ரிவர்ஸில் மட்டும் ஓடுகிறதே!

 


5. கேள்வி: நான் ஆவிகளைப் பார்க்க ஆசைப்படுகிறேன். அவற்றை வரவழைக்க என்ன வழி?

 

பதில்: வென்னீர் வைக்கவும்.


பகுதி 42 // 23.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Wednesday, 21 January 2026

கேள்வி-பதில் (20.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: இந்தியா வந்த அமீரக அதிபருக்கு, பிரதமர் மோடி ஒரு குஜராத் ஊஞ்சலைப் பரிசாக அளித்திருக்கிறார். நமது பிரதமர், லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஏதாவது பரிசு தர நினைத்தால் என்ன பொருளைத் தரலாம்?

 

பதில்: தொட்டில்.

 

 

2. கேள்வி: புதுச்சேரியில் மாதாமாதம் குடும்பத் தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து, இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தப் படுவதாக அம்மாநில முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: தேர்தலுக்கு முன்பாக அரசியல் தலைவர்கள் பலரும் இப்படி 2,000, 3,000 என்று வரப்போகும் அரசின் சார்பில் பண விநியோகத்தை அறிவிப்பது, ஓடியாடும் விளையாட்டில் ஸ்கோர் எடுப்பது மாதிரி. இந்த ஸ்கோர்களை முன்கூட்டியே அறிவிப்பது மட்டும் இந்தத் தலைவர்கள் செய்வது. இவர்களில் ஒருவரின் கட்சி, தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால் அப்போதைய நோஞ்சான் அரசு அந்தத் தலைவருக்காக வேர்க்க விறுவிறுக்க நாக்குத் தள்ள ஓடி அவர் அறிவித்த ஸ்கோரை எட்ட வேண்டும். அதில் அந்த நோஞ்சான் நிலைகுலைந்து உட்கார்ந்தாலும் உட்கார்ந்ததுதான். தலைவர் நலுங்காமல் குலுங்காமல் தனது வருமானத்தைப் பெறுவார்.

 

ஆட்சியில் அமர்ந்திருக்கும் தீய கட்சியை அகற்றி நல்லாட்சி தர விரும்பும் வேறொரு கட்சியும் இந்த நோயை ஏற்று, முள்ளை முள்ளால் எடுக்கவேண்டி இருக்கிறது. ஆட்சிக்கு வரும் கட்சி சிறப்பாக நிர்வாகம் செய்து அதன் தலைவர்கள் பணம் சேர்க்காமல் இருந்தால் மற்றது சரி என்று போகவேண்டிய காலம் இது.

 

 

3. கேள்வி: "கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களைப் போல், தமிழகத்தில் ஏன் காங்கிரஸை வளர்க்கவில்லை?" என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல் காந்தி கேள்வி கேட்க, அவர்கள் பதில் அளிக்கமுடியாமல் திணறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது, என்று தினமலர் பத்திரிகை சொல்கிறதே?

 

பதில்: இந்தச் செய்தி நூற்றுக்கு நூறு நம்பகத் தன்மை கொண்டதா என்று நமக்குத் தெரியாது. ஆனால் ராகுல் காந்தியின் நிலையில், இப்படி அசட்டுத்தனமாகக் கேள்வி கேட்கக் கூடியவர் அவர்.

 

2013-க்குப் பிறகு, டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கோட்டை விட்டுக் கொண்டே வருகிறதே, 2014-லிருந்து லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் கேவலமாகத் தோற்கிறதே, என்று கேட்டால் ராகுல் காந்தி திணறாமல் பதில் சொல்வாரா? 'ஓட்டுத் திருட்டு' பதிலைக் கேட்டால் காங்கிரஸ் தலைமையக பியூன் கூடச் சிரிப்பான்.

 

இந்திரா காந்தி குடும்பத்துக்குச் சலாம் போட்டுப் பொழுதுபோக்கும் மாநில நிர்வாகிகள் தான் பெரும்பாலும் காங்கிரஸுக்குக் கிடைப்பார்கள்.

 

 

4. கேள்வி: "நான் எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்தியதற்காக உங்கள் நாடு எனக்கு  அமைதிக்கான நோபல் பரிசைத் தரவில்லை. எனவே, இனி அமைதி பற்றி மட்டுமே நான் சிந்திக்கத் தேவையில்லை" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், நார்வே நாட்டுப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாரே?

 

பதில்: உலகில் அமைதிக்காக அதிபர் டிரம்ப் அதிகப் பங்களிப்பு செய்தவர் என்று ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். இருந்தாலும், அவர் தன் கடிதத்தில் எழுதிய சொற்களின் ஆணவத்தை, கிறுக்குத்தனத்தை, இவ்விதம் புரிந்துகொள்ளலாம்.

 

ஒரு கர்நாடக இசைப் பாடகர் அவருடைய துறை சார்ந்த உயர்ந்த விருதை எதிர்பார்க்கிறார், ஆனால் அது அவருக்கு வழங்கப்படவில்லை என்றால், அந்தப் பாடகர் "எனக்கு அந்த விருது கிடைக்காதபோது, இனிமேல் நான் அபஸ்வரமாகவும் பாடுவேன்" என்று அறிவிக்கலாமா?

 

 

5. கேள்வி: புலி வாலைப் பிடித்தவன் கதை என்பது என்ன?

 

பதில்: எலி வாலைக் கூட, எலி செத்த பின்புதான் பிடிக்க முடியும். புலி வாலை ஒருவன் பிடித்தால் அவன் கதை அந்த நொடியே முடிந்தது. பிறகு ஏது கதை அவனுக்கு?

 

பகுதி 41 // 20.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Sunday, 18 January 2026

கேள்வி-பதில் (18.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: வேறு சில இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்குத் தமிழக அரசு சார்பில் தேசிய அளவிலான விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரே?

 

பதில்: இது திராவிட மாடல் ஆட்சியின் இயல்புக்கு மாறான எதிர்பாராத அறிவிப்பு. ஆனால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உரம் சேர்க்கக் கூடியது, வரவேற்கத் தக்கது. சரி, இந்தியாவின் மற்ற மாநில மொழிகளில் சிறந்த புத்தகங்களைத் தேடிப் பரிசளிக்க அரசுக்கு மனம் இருக்கும்போது, அந்த மொழிகளில் மாணவர்கள் விரும்பும் ஒன்றைப் பள்ளியில் ஒரு பாடமாக அவர்கள் பயில உதவும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஸ்டாலின் அரசு எதிர்க்க வேண்டும்? அந்த எதிர்ப்பு திமுக-வுக்கு உளமானதா, அல்லது இந்த அறிவிப்பு அக்கட்சிக்கு உளமானதா?

 

 

2. கேள்வி: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு வாக்குறுதியாக, 'குலவிளக்கு திட்டம்' என்று ஒன்றை அதிமுக அறிவித்து, அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பப் தலைவியின் வங்கிக் கணக்கிலும் அரசு மாதம் 2,000 ரூபாய் செலுத்தும் என்று அந்தக் கட்சி சொல்லி இருக்கிறதே?

 

பதில்: அரசியல் கட்சிகள்  நடத்தும் இலவசக் கூத்து எங்கு போய் முடியுமோ? அதிமுக-வுக்குப் போட்டியாக இன்னொரு கட்சி, 'குல இரட்டை விளக்கு திட்டம்' என்று ஒன்றை அறிவித்து, அதன் கீழ் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் அகல் விளக்குத் தொகை ரூபாய் 2,000, குடும்பத் தலைவனுக்கு லாந்தர் விளக்குத் தொகை ரூபாய் 2,000 - ஆக மொத்தம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூபாய் 4,000 - என்று ஒரு தேர்தல் வாக்குறுதி அளிக்க நினைக்கலாம். அரசு இலவசங்களில் நியாயமானவை சொற்பம், நியாயமற்றவை அதிகம்.

 

 

3. கேள்வி: "கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசின் சார்பில் இடம் வாங்கி வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் கட்டி இலவசமாக வழங்கப்படும்" என்று அதிமுக ஒரு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியை இப்போது அளித்திருக்கிறதே?

 

பதில்: "மக்கள் வேலை செய்து தங்கள் சம்பாத்தியத்தில் வீடு வாங்கும்படி செய்ய, மாநிலத்தில் தொழில்வளத்தைப் பெருக்கவேண்டும், வேலைவாய்பைக் கூட்டவேண்டும். தமிழகத்தில் இரண்டையும் செய்ய எங்களுக்குத் திராணி இல்லை. எங்களால் முடிவது, திமுக-வை மிஞ்சி அரசு கஜானாவை அதிவிரைவில் ஓட்டாண்டி ஆக்குவோம்" என நேரடியாகச் சொல்லக் கூச்சப் படுகிறது அதிமுக.

 

 

4. கேள்வி: ராணுவத்தை அனுப்பியாவது கிரீன்லேண்டைக் கைப்பற்றி அமெரிக்காவோடு இணைக்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பைத் தடுக்க வழியே இல்லையா?

 

பதில்: இருக்கிறது. டிரம்ப் ராணுவ நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்து, கிரீன்லேண்ட் இணைப்புத் திட்டத்தையும் கைவிட்டால், டிரம்ப் தொடங்கவிருந்த போரை அவரே நிறுத்தியவர் என்ற பெருமை அவரைச் சேரும், அது அவர் தடுத்து நிறுத்தும் 9-வது போராகும், ஆகையால் அவருக்கு அமைதிக்கான 2026ம் வருட நோபல் பரிசு அளிக்கப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் கிரீன்லேண்ட் தப்பிக்கலாம்.

 


5. கேள்வி: சிலர் பார்த்தும் பார்க்காதது போல் இருப்பதாக, அல்லது கேட்டும் கேட்காதது போல் இருப்பதாக, வழக்கில் சொல்கிறோம். யாரும் பேசியும் பேசாதது போல் இருப்பதாக நாம் வழக்கில் சொல்வதில்லையே?

 

பதில்: நாம் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அது உண்டு. பலதைப் பேசியும் பேசாதது போல் இருப்பது அரசியல். பேசியது என்னவென்றால்: (1) தேர்தல் வாக்குறுதிகள்; (2) முன்பு எதிரிக் கட்சியில் இருந்தபோது, தற்போது தஞ்சம் அடைந்துள்ள கட்சியின் தலைவரை நார்  நாராகக் கிழித்தது.


பகுதி 40 // 18.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr