Thursday, 31 October 2024

நான் காளை

    -- ஆர். வி. ஆர்

 

 

 

என்

பேராண்மையில்

திமிர் மேனியில்

கொழு கழுத்தில்

ராஜ திமிலில்

கூர் கொம்புகளில்

வலு கால்களில்

நான் காளை

ஜல்லிக்கட்டுக் காளை

 

 

அந்நியன் ஒருவன்

வலுவாய் எனது

திமிலை அணைத்து

என்னை ஆள்வது

எனக்கவமானம்

 

 

என்னை மறித்து

என்னைப் பிடிக்க

என்மேல் தாவும்

பிள்ளைகள் எவரையும்

குறியாய் விரட்டி

குத்திக் கிழித்து

விண்ணில் சேர்க்க

நொடிகள் போதும்

 

 

எனினும் எவர்க்கும்

காயம் செய்யாது

மானம் காக்க

வீரம் ஒளித்து

விலகி ஓடும்

என் நற்செயலை

யாரறிவாரோ?

 

                          முதல் பிரசுரம்: பூபாளம், அக்டோபர் 2024

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2024

Wednesday, 30 October 2024

கட்சி மேடையில் விஜய். நடிப்பைத் தவிர வேறு உண்டா?

 

-- ஆர். வி. ஆர்

 

          நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி அருகே நடத்தியது. 

 

          மாநாட்டு மேடையில் விஜய் பேசிய தோரணையும், ஏற்றி ஏற்றி இறக்கிய அவரது குரலும் அவர் வசனம் பேசினார் என்று அறிவித்தன. பேசும்போது அடிக்கடி இரு கைகளை இரண்டு பக்கமும் விரித்து, ஒரு விரல் அல்லது இரண்டு விரல்களை உயர்த்தி, இடுப்பில் இரு கைகளை வைத்தபடி சில ஸ்டைலான போஸ்கள் காண்பித்தார்.  கூடுதலான எஃபெக்ட் இருக்கட்டும் என்று அவ்வப்போது அவர் ஆங்கில வாக்கியங்களை உரத்துப் பேசினார். மொத்தத்தில் விஜய் ஒரு அனுபவ நடிகராகத் தென்பட்டார்.   

 

        விஜய்  தமிழ்நாட்டின்  முதல் அமைச்சர் ஆக ஆசைப்படுகிறார் என்பது மேலும் புரிந்தது. வேறு எதையும் அவரது மாநாட்டுப் பேச்சு பெரிதாக வெளிப்படுத்தவில்லை - சில கட்சிகளுக்குக் கிலியையும் சில கட்சிகளுக்குக் புதிய கூட்டணி ஆசையையும்  கொடுத்தார் என்பதைத் தவிர.

 

        இரண்டு  சக்திகளை  விஜய் தனக்கு அரசியல் எதிரிகள் என்று மாநாட்டில் சொன்னார். ஒன்றை, ‘பிளவுவாத சக்திகள்’ என்று குறிப்பிட்டார். இன்னொன்றை, ‘கரப்ஷன் கபடதாரிகள்’ என்று பெயரிட்டார். பாஜக-வையும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக-வையும் தான் அவர் மனதில் வைத்து அப்படிப் பேசியிருக்க முடியும்.

 

       பாஜக-வை நினைத்து விஜய் நீட்டி முழக்கி எதையெல்லாமோ தொட்டுப் பேசியது இது: “பிளவு சக்திகள் – அதாவது மத, சாதி, இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன்னு சூழ்ச்சி செய்து பிரித்து ஆளும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் நமக்கு ஒரு எதிரி”.

 

          திமுக-வை ஒரு எதிரியாக வைத்து விஜய் பேசியது இது: “ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் நமது இரண்டாவது எதிரி..... கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், கலாசார பாதுகாப்பு வேஷமும் போடும், முகமூடி அணிந்த கரப்ஷன் கபடதாரிகள் தான் இப்ப நம்ம கூடவே இருந்து நம்மளை ஆண்டுகிட்டு இருக்காங்க.”

 

          அவர் அறியாமலே விஜய் பாஜக-வுக்கு ஒரு நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார். அதாவது, மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக-வின் ஆட்சியின் மீது அவர் ஊழல் குற்றச்சாட்டு சொல்லவில்லை. காரணம், அப்படி எதையும் அவரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பாஜக-வை ஒரு ‘பிளவுவாத சக்தி’ என்று மட்டும் ஏதோ சொல்லி வைத்தார். அதற்கு என்ன அர்த்தம் என்று அவருக்கே தெரியாது.

 

          நிர்வாகத்தில் ஊழலைக் கண்டும் காணாமல் இருக்கும் கட்சிகளாக பாரதத்தில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் ஒன்றாக திமுக-வைப் பார்த்தார் விஜய் என்று அவர் பேச்சு காண்பிக்கிறது.  இதனால் மட்டும் விஜய் தூய்மையான  அரசியல் தலைவராக, மக்கள் நலனை முக்கியமாக மனதில் நிறுத்திப் பணி செய்யும் கட்சித் தலைவராக, உருவெடுப்பார் என்பது சிறிதும் நிச்சயமல்ல.

 

     ஏறக் குறைய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சொல்வதைத்தான் விஜய்யும் சொல்கிறார் – அதே நாடகத் தனத்துடன், ஆனால் உக்கிரம் குறைந்து, சற்று கௌரவமான வார்த்தைகளில்.  அவர்கள் இருவரும் வெளிப்படைத் தன்மை அற்றவர்கள் தான்.

 

          எம். ஜி. ஆர் மற்றும் ஆந்திராவின் என். டி. ராம ராவ், இருவரையும் முன்னுதாரணங்களாகச் சொல்லியும் விஜய் தனது மாநாட்டில் பேசினார்.  ஆனால் அவர்கள் கதை வேறு.

 

          எம். ஜி. ஆரைப் பொறுத்தவரை, அவர் திமுக-வில் பல வருடங்கள் இருந்தார். அப்போது அவர் திமுக-வின் முக்கிய அரசியல் முகமாகவும் விளங்கினார். அவரைப் பிரதானமாக வைத்து திமுக தேர்தலில் வாங்கிய ஓட்டுக்கள் ஏராளம்.

 

        எம். ஜி. ஆர்  திமுக-விலிருந்து  விலக்கப்பட்டு   அதிமுக-வை ஆரம்பித்த போது, திமுக-வில் இருந்த பல தலைவர்கள் அதிமுக-விற்கு வந்தனர்.  எம். ஜி. ஆர் ஓட்டுக்களும்  அதிமுக-வுக்கு மாறி திமுக-வுக்குப் பெரிய இழப்பைத் தந்தன. விஜய் நிலைமை அப்படியானது அல்ல. அந்த அளவுக்கான பாதிப்பை விஜய் திமுக-வுக்குக் கொடுத்து அவரும் ஆட்சிக்கு வருவது இன்றைய தமிழகத்தில் சாத்தியமாகத் தெரியவில்லை.

 

    இன்னொன்று. திறமையை, தன்னலமற்ற சேவை மனப்பான்மையை, நாட்டுக்காக அல்லது மாநிலத்துக்காக  ஈர்க்கும் முகமாக, தலைமைப் பண்புள்ளவராக, விஜய் தென்படவில்லை.  மேடையில் நின்று ஏற்ற இறக்கத்துடன் டயலாக் டெலிவரி செய்யும் ஒரு கலைஞராக மட்டுமே அவர் தென்படுகிறார். சில சினிமாக் கதைகளில் காணப்படும் பெரிய ஓட்டைகளும் அவரது மாநாட்டுப் பேச்சில் இருந்தன.

 

       நடிப்புத் தொழிலில் வரும் வருமானத்தை இழந்து விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால் மட்டும் அவர் ஒரு நல்ல, நேர்மையான, திறமையான, நாட்டு நலனில் அக்கறை கொண்ட, தலைவராக இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு மாறான அறிகுறிகள்தான் அவரிடம் தெரிகின்றன.

 

          விஜய் கட்சி மாநாட்டிற்கு இரண்டரை லட்சம் பேர் வந்திருக்கலாம் என்கிறார்களே – அவர் அரசியலில் பெரிய சக்தியாக, ஆட்சியைப் பிடிக்கும் சக்தியாக, வந்துவிடுவாரோ, என்று யாரும் அச்சப்பட அவசியமில்லை.

 

          ஒரு புறம் முப்பத்தி இரண்டு வருடமாக சினிமாவில் நடித்த விஜய் தன் ரசிகர்களைப் பிரதானமாக வைத்து இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். இன்னொரு புறம், முப்பத்தி ஆறாவது வயதில் தனது ஐ. பி. எஸ் வேலையை விட்டுவிட்டு அண்ணாமலை என்னும் இளைஞர் மோடியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்து, பாஜக-வில் சேர்ந்து, மளமளவென்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறார் – வயதும் வற்றாத முனைப்பும் அசாத்தியத் திறமையும் அர்ப்பணிப்பும்  அவர் பக்கம் இருக்கின்றன.

 

        விஜய்யை மீறி எதிர்காலத் தமிழக அரசியலில் நல்லது நடக்க நாம் நம்பிக்கை வைக்கலாம்.

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

Wednesday, 2 October 2024

ஸ்டாலின் பார்வையில் செந்தில் பாலாஜி. முன்பு – கேடு கெட்டவர். இப்போது – தியாகி!


           -- ஆர். வி. ஆர்

 

          முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது  அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வர் ஆகிவிட்டார். சிறையிலிருந்து பெயிலில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி இருக்கிறார். 

 

செந்தில் பாலாஜி அதிமுக-வில் இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கிக்  கொடுக்க அவர் பலரிடம் லஞ்சம் வாங்கி பணச் சலவை செய்ததாக அமலாக்கத் துறை பதிந்த ‘மணி லாண்டரிங்’ வழக்கில் கைதானார்.  கைதான போது அவர் கட்சி மாறி திமுக மந்திரிசபையில் அமைச்சராக இருந்தார். பிறகு சிறையில் இருந்த போது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, இப்போது உச்ச நீதிமன்றத்தில் பெயில் கிடைத்து வெளி வந்திருக்கிறார்.

 

சிறையிலிருந்து திரும்பிய செந்தில் பாலாஜி வீட்டில் குளித்தாரோ இல்லையோ, உடனே அவருக்கு மீண்டும் தமிழக அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது.  அதே மதுவிலக்குத் துறையும் மின்சாரத் துறையும் இப்போது அவர் வசம். கைதாவதற்கு முன்பே அந்தத் துறைகளில் அவர் தனித் திறமை காண்பித்தவர்.

 

உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆகிய இருவர் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கருத்து சொல்லி அவர்களை வாழ்த்தி இருக்கிறார். திமுக வழி, திராவிட மாடல், ஸ்டாலின் ஸ்டைல் எல்லாம் அதில் பளிச்சிடுகின்றன.

 

உதயநிதி பற்றி, “அவர் கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்க்கிறார். அவர்களை திராவிடக் கொள்கையில் கூர் தீட்டுகிறார்.  முதல்வரான எனக்குத் துணையாக அல்ல, இந்த நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

 

செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடைத்தவுடன் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அவரை உவகை பொங்க இப்படிப் பாராட்டினார்: “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றத்தால் 471 நாட்களுக்குப் பிறகு பிணை கிடைத்திருக்கிறது. ......... அவரை வருக வருக என்று வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!”. இந்தப் பாராட்டுடன் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மந்திரி பதவி அளித்திருக்கிறார் ஸ்டாலின்.  

 

முன்பு செந்தில் பாலாஜி அதிமுக அமைச்சராக இருந்தபோது அவரது கரூர் மாவட்டத்திற்குச் சென்ற மு. க. ஸ்டாலின், ஒரு பொதுக்கூட்டத்தில் அவரை  இப்படிக் கண்டனம் செய்து பேசி இருந்தார்:

 

“அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் நெருக்கமாக இருந்தவர். அதிமுக அமைச்சரவை பதினைந்து முறை மாற்றி அமைக்கப்பட்ட போது சீனியர் அமைச்சர்கள் கூட மாற்றப் பட்டனர். ஆனால் செந்தில் பாலாஜியை மாற்றவில்லை. அப்படி முக்கியத்துவம் வாய்ந்தவர் அவர். இடையில் ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனபோது யாரை முதல்வராகப் போடலாம் என்று அவர்கள் ஆலோசித்தபோது, அந்தப் பட்டியலில் இவர் பெயரும் இருந்தது. இவர் கெட்ட கேடு, செந்தில் பாலாஜி பெயரும் அதில் இருந்தது”

 

ஆனால் செந்தில் பாலாஜி திமுக-வில் சேர்ந்த பின், முன்பு ஜெயலலிதாவுக்கு வேண்டியவராக இருந்ததை விட அதிகமாக ஸ்டாலினுக்கு வேண்டியவராக இருக்கிறார். முன்பு அதிமுக-வில் இருந்தபோது அவர் ஸ்டாலின் பார்வையில் குற்றங்கள் செய்தவராக, கேடு கேட்டவராக இருந்தார். இப்போது, அந்தப் பழைய குற்றங்கள் தொடர்பாக வந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைதாகி பெயிலில் வந்தபின், அவர் ஸ்டாலினுக்குத் தியாகம் செய்தவராக, உறுதி மிக்கவராகத் தோன்றுகிறார்.

 

செந்தில் பாலாஜி அதிமுக அமைச்சராக இருந்தபோது, பல சீனியர் அமைச்சர்களுக்குக் கிடைக்காத சலுகையை ஜெயலலிதா அவருக்கு வழங்கினார் என்று முன்பு குற்றம் சாட்டிய  ஸ்டாலின், இப்போது அதே செந்தில் பாலாஜிக்கு அதுபோன்ற விசேஷ கவனிப்பை அளிக்கிறார். “தியாகம் செய்தவர், உறுதி மிக்கவர்” என்றெல்லாம் தன்னுடன் பணிபுரியும் வேறு ஒரு இரண்டாம் கட்ட திமுக தலைவரை, வேறு ஒரு சக அமைச்சரை, ஸ்டாலின் பாராட்டி இருக்கிறாரா?

 

ஸ்டாலின் இப்போது செந்தில் பாலாஜிக்கு அளித்த பாராட்டு உளமானது, உண்மையானது என்றால், அத்தகைய உயர்ந்த பாராட்டைப் பெறாத உதயநிதிக்கு எதற்குத் துணை முதல்வர் பதவி? அதை செந்தில் பாலாஜிக்கே கொடுத்திருக்கலாமே? ஆக, செந்தில் பாலாஜியை முன்பு இகழ்ந்துவிட்டு இப்போது ஸ்டாலின் அவரைப் பாராட்டுவது ஒரு நாடகம், திராவிட மாடல் நாடகம். அதற்குக் காரணம் இருக்கிறது.

 

செந்தில் பாலாஜி அதிமுக-வில் இருந்தபோது அவரால் ஸ்டாலினுக்கு எந்தப் பயனும் இல்லை. அப்போது செந்தில் பாலாஜியினால் உருவான பயன்கள் அவருக்கும் வேறு யாரோ சிலருக்கும் மட்டும் கிடைத்திருக்கும்.  செந்தில் பாலாஜி திமுக-வுக்குக் கட்சி மாறி திமுக மந்திரிசபையில் இடம் பெற்றவுடன், செந்தில் பாலாஜியினால் ஏற்படும் பலாபலன்கள் அவரைத் தவிர வேறு யாருக்கு அபரிதமாகக் கிடைத்திருக்கும்? இதைத் தவிர, விசாரணை ஏஜென்சிகளிடமும் கோர்ட்டிலும் செந்தில் பாலாஜி ஏதோ விரக்தியில் வேண்டாத எதையும் பேசாமல் இருப்பதும் பலருக்கு நல்லதல்லவா?

 

இந்தக் கேள்விகளைக் கேட்டால், எல்லா விடைகளும் தானாக சுளையாக வந்து விழுகிறதே! 

* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai