முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதன்படி, உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வர் ஆகிவிட்டார். சிறையிலிருந்து பெயிலில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி இருக்கிறார்.
செந்தில்
பாலாஜி அதிமுக-வில் இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கிக் கொடுக்க அவர் பலரிடம் லஞ்சம் வாங்கி பணச் சலவை செய்ததாக
அமலாக்கத் துறை பதிந்த ‘மணி லாண்டரிங்’ வழக்கில் கைதானார். கைதான போது அவர் கட்சி மாறி திமுக மந்திரிசபையில்
அமைச்சராக இருந்தார். பிறகு சிறையில் இருந்த போது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து,
இப்போது உச்ச நீதிமன்றத்தில் பெயில் கிடைத்து வெளி வந்திருக்கிறார்.
சிறையிலிருந்து
திரும்பிய செந்தில் பாலாஜி வீட்டில் குளித்தாரோ இல்லையோ, உடனே அவருக்கு மீண்டும் தமிழக
அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது. அதே மதுவிலக்குத்
துறையும் மின்சாரத் துறையும் இப்போது அவர் வசம். கைதாவதற்கு முன்பே அந்தத் துறைகளில்
அவர் தனித் திறமை காண்பித்தவர்.
உதயநிதி
ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆகிய இருவர் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கருத்து
சொல்லி அவர்களை வாழ்த்தி இருக்கிறார். திமுக வழி, திராவிட மாடல், ஸ்டாலின் ஸ்டைல் எல்லாம்
அதில் பளிச்சிடுகின்றன.
உதயநிதி
பற்றி, “அவர் கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்க்கிறார். அவர்களை
திராவிடக் கொள்கையில் கூர் தீட்டுகிறார். முதல்வரான
எனக்குத் துணையாக அல்ல, இந்த நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார்”
என்றார் முதல்வர் ஸ்டாலின்.
செந்தில்
பாலாஜிக்கு பெயில் கிடைத்தவுடன் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அவரை உவகை
பொங்க இப்படிப் பாராட்டினார்: “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றத்தால்
471 நாட்களுக்குப் பிறகு பிணை கிடைத்திருக்கிறது. ......... அவரை வருக வருக என்று வரவேற்கிறேன்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!”. இந்தப் பாராட்டுடன் செந்தில் பாலாஜிக்கு
மீண்டும் மந்திரி பதவி அளித்திருக்கிறார் ஸ்டாலின்.
முன்பு செந்தில் பாலாஜி அதிமுக அமைச்சராக இருந்தபோது அவரது கரூர் மாவட்டத்திற்குச் சென்ற மு. க. ஸ்டாலின், ஒரு பொதுக்கூட்டத்தில் அவரை இப்படிக் கண்டனம் செய்து பேசி இருந்தார்:
“அதிமுக
அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் நெருக்கமாக இருந்தவர்.
அதிமுக அமைச்சரவை பதினைந்து முறை மாற்றி அமைக்கப்பட்ட போது சீனியர் அமைச்சர்கள் கூட
மாற்றப் பட்டனர். ஆனால் செந்தில் பாலாஜியை மாற்றவில்லை. அப்படி முக்கியத்துவம் வாய்ந்தவர்
அவர். இடையில் ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனபோது
யாரை முதல்வராகப் போடலாம் என்று அவர்கள் ஆலோசித்தபோது, அந்தப் பட்டியலில் இவர் பெயரும்
இருந்தது. இவர் கெட்ட கேடு, செந்தில் பாலாஜி பெயரும் அதில் இருந்தது”
ஆனால்
செந்தில் பாலாஜி திமுக-வில் சேர்ந்த பின், முன்பு ஜெயலலிதாவுக்கு வேண்டியவராக இருந்ததை
விட அதிகமாக ஸ்டாலினுக்கு வேண்டியவராக இருக்கிறார். முன்பு அதிமுக-வில் இருந்தபோது
அவர் ஸ்டாலின் பார்வையில் குற்றங்கள் செய்தவராக, கேடு கேட்டவராக இருந்தார். இப்போது,
அந்தப் பழைய குற்றங்கள் தொடர்பாக வந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைதாகி பெயிலில் வந்தபின்,
அவர் ஸ்டாலினுக்குத் தியாகம் செய்தவராக, உறுதி மிக்கவராகத் தோன்றுகிறார்.
செந்தில்
பாலாஜி அதிமுக அமைச்சராக இருந்தபோது, பல சீனியர் அமைச்சர்களுக்குக் கிடைக்காத சலுகையை
ஜெயலலிதா அவருக்கு வழங்கினார் என்று முன்பு குற்றம் சாட்டிய ஸ்டாலின், இப்போது அதே செந்தில் பாலாஜிக்கு அதுபோன்ற விசேஷ கவனிப்பை அளிக்கிறார். “தியாகம் செய்தவர், உறுதி மிக்கவர்” என்றெல்லாம் தன்னுடன்
பணிபுரியும் வேறு ஒரு இரண்டாம் கட்ட திமுக தலைவரை, வேறு ஒரு சக அமைச்சரை, ஸ்டாலின்
பாராட்டி இருக்கிறாரா?
ஸ்டாலின்
இப்போது செந்தில் பாலாஜிக்கு அளித்த பாராட்டு உளமானது, உண்மையானது என்றால், அத்தகைய
உயர்ந்த பாராட்டைப் பெறாத உதயநிதிக்கு எதற்குத் துணை முதல்வர் பதவி? அதை செந்தில் பாலாஜிக்கே
கொடுத்திருக்கலாமே? ஆக, செந்தில் பாலாஜியை முன்பு இகழ்ந்துவிட்டு இப்போது ஸ்டாலின்
அவரைப் பாராட்டுவது ஒரு நாடகம், திராவிட மாடல் நாடகம். அதற்குக் காரணம் இருக்கிறது.
செந்தில்
பாலாஜி அதிமுக-வில் இருந்தபோது அவரால் ஸ்டாலினுக்கு எந்தப் பயனும் இல்லை. அப்போது செந்தில்
பாலாஜியினால் உருவான பயன்கள் அவருக்கும் வேறு யாரோ சிலருக்கும் மட்டும் கிடைத்திருக்கும்.
செந்தில் பாலாஜி திமுக-வுக்குக் கட்சி மாறி
திமுக மந்திரிசபையில் இடம் பெற்றவுடன், செந்தில் பாலாஜியினால் ஏற்படும் பலாபலன்கள்
அவரைத் தவிர வேறு யாருக்கு அபரிதமாகக் கிடைத்திருக்கும்?
இந்தக் கேள்விகளைக் கேட்டால், எல்லா விடைகளும் தானாக சுளையாக வந்து விழுகிறதே!
* * * * *
Logically analyzed. My compliments to Shri RVR
ReplyDeleteSarathy