Thursday, 5 March 2026

கேள்வி-பதில் (03.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் வாழ்த்தரங்கில் பேசிய கமல் ஹாசன், "மக்களைக் குடும்பமாக நினைக்கும் தலைவர்கள் எல்லாம் குடும்ப அரசியல்தான் செய்கிறார்கள் அதுதான் தொடர வேண்டும்” என்று பேசி இருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: "மக்களைத் தன் குடும்பமாக நினைத்து அவர்களுக்காக ஒரு தலைவர் ஆட்சி செய்தால் அது நல்லது; ஆனால் தன் குடும்பத்தை மட்டும் மக்களாக நினைத்து அவர்களுக்காக அவர் ஆட்சி செய்வது நல்லதல்ல" என்று கமல் பேச்சை நாம் முழுதாக அர்த்தம் கொள்ளலாம். எப்போதும் அவர் பேசுவதில் பாதிதான் வெளிப்படையாகப் புரியம். மீதிப் பாதியை நாமாக நல்ல விதத்தில் அர்த்தம் செய்து கொள்வோம்.

 

 

2. கேள்வி: ''இண்டி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலினை தேசிய அரசியலில் களம் காண வைப்போம்'' என்றும் கமல் பேசி இருக்கிறாரே?

 

பதில்: அதிமுக தலைவர் ஜெயலலிதாவிடம், "நான் உங்களுக்கு அடங்கிக் கட்டுப்படுகிறேன்" என்று சொல்ல நினைத்தவர்கள் அவரை நோக்கித் தரையில் விழுந்தார்கள். அதையே திமுக தலைவர் ஸ்டாலினிடம் சொல்ல நினைப்பவர்கள் அவரை நோக்கிச் சொல்லில் விழுகிறார்கள். இரண்டு வந்தனங்களின் ஸ்டைல் வேறு. நோக்கம் ஒன்றுதான் - க்ளியர் கம்யூனிகேஷன்.

 

 

3. கேள்வி: திமுக மற்றும் காங்கிரஸ் இடையே, தமிழக சட்டடசபைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு இழுபறியாக இருக்கிறது. இந்தக்  கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா என்பது இதுவரை கேள்விக்குறி. இந்த நிலையில் ப.சிதம்பரம் ஸ்டாலினை சந்தித்துப் பேசி இருக்கிறார். சிதம்பரத்தின் முயற்சி என்னவாக இருக்கும்?

 

பதில்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் பொதுமக்கள், அது தேச விடுதலைக்காகப் போராடிய கட்சி; காந்தி, நேரு, காமராஜ் இருந்த கட்சி என்று பெருமையாக நினைப்பவர்களும், அவர்களின் பேச்சை மதிக்கும் குடும்ப உறுப்பினர்களும் ஆவர். அந்த ஆதரவாளர்களை ஒரு தலைவராக ஆகர்ஷிக்கிறவர் அல்ல சிதம்பரம் - அல்லது மற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களும்.

 

ஆட்சியில் திமுக என்ன முறைகேடுகள் செய்தாலும், என்ன ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், அதன் அரசியல் பலத்தைச் சார்ந்து இருந்தால் தமிழக காங்கிரஸ் மூச்சு விட்டுக் கொண்டிருக்குமே, அதை விட்டு தவெக-வோடு கூட்டணி வைத்தால் காங்கிரஸின் நிலை என்ன ஆகுமோ, அதோடு தனது, தனது மகனின், அரசியல் மதிப்பு என்ன ஆகுமோ, என்று நினைக்கிறவர் சிதம்பரம்.

 

காங்கிரஸ் கட்சியின்  செல்வாக்கை தேசநலனுக்காக வளர்க்கும் தலைவர்கள் மத்தியிலும் தமிழகத்திலும் பல வருடங்களாகக் காணவில்லை என்பது அதன் தலைவிதி. அதைத் திமுக தனது வளர்ச்சிக்காகப் பெரிதும் பயன்படுத்தியது. அதில் சிதம்பரமும் எளிதான பலன் கண்டார். இதன் காரணமாகவும் ஸ்டாலினும் சிதம்பரமும் சந்தித்துத் திமுக-காங்கிரஸ் கூட்டணியைக் காப்பாற்ற முயற்சிக்கலாம்.

 

 

4. கேள்வி: ஈரான் நாடு அணு ஆயுதம் தயாரிக்க முனைந்தாலும் அது தவறா? அது அப்படி முனைகிறது, அதை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்தது சரியா?

 

பதில்: இந்தக் கேள்விகளுக்குப் பாரபட்சமற்ற பதில்கள் கிடைப்பது கடினம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், மனிதனின் ஆறாம் அறிவு மனித குலத்துக்கு ஆதரவாக மட்டுமல்ல, எதிராகவும் நன்றாக வேலை செய்கிறது. எந்தப் பக்கம் அது இறுதியில் வெல்லும் என்று தெரியாது.

 

 

5. கேள்வி: தேர்தல் நேரத்தில் பல காரணங்கள் சொல்லி அரசுக் கருவூலம் மூலமாக மக்களுக்குப் பணத்தை வாரி இறைக்கிறது திமுக அரசு. இந்தப் பண விநியோகம் அனைத்தையும் சிலாகித்துச் சுருக்கமாக திமுக-வுக்காக எப்படி விளம்பரம் செய்யலாம்?

 

பதில்: பழைய தங்க நகைகளை வாங்கும் ஒரு நிறுவனத்திற்காக டிவி விளம்பரங்களில் தோன்றும் நடிகை ரம்யா கிருஷ்ணனை, ஒரு விளம்பர வீடியோவில் இவ்வாறு பேச வைக்கலாம்: "தேர்தல்னா காசு, அதை வாங்கணும்னா திமுக!"

 

பகுதி 62 // 03.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Tuesday, 3 March 2026

கேள்வி-பதில் (28.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: மூன்று முறை அதிமுக முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், கடைசியில் அதிர்ச்சிகரமாகத் திமுக-வில் சேர்ந்துவிட்டாரே?

 

பதில்: திமுக-வில் கருணாநிதி, எம்.ஜி.ஆர் இடையேயான தனிப்பட்ட விரோதத்தின் பிரதான காரணமாக எம்.ஜி.ஆர் துவக்கிய கட்சி, அண்ணா திமுக. மற்றபடி இந்த இரண்டு கட்சிகளுக்கும் நாளடைவில் - குறிப்பாக அவர்கள் ஆட்சியில் வெளிப்படைத் தன்மை மற்றும் நீதி நேர்மையைக் கடுகளவு மட்டும் வைத்திருப்பதில் - வித்தியாசம் இல்லை என்றானது.

 

இரண்டு கட்சிகளிலும் உள்ள முன்னணி இரண்டாம் கட்டத் தலைவர்கள் அரசியலுக்கு வந்த நோக்கம் ஒன்றுதான். ஆகையால் திமுக தலைமையிடம் உள்ள ஹிந்து மத அலர்ஜி, பிரிவினையைத் தொடும் மாநில சுயாட்சிப் பற்று, ஆகியவை அக்கட்சியின் பெருவாரியான இரண்டாம் மற்றும் அடுத்த கட்டத் தலைவர்களுக்குப் பொருட்டல்ல - அரசியலில் அந்தத் தலைவர்களின் பிரதான நோக்கம் நிறைவேறினால் அது போதும் அவர்களுக்கு.

 

பன்னீர்செல்வம் திமுக-வில் சேர்ந்தது அவரைப் பொறுத்து, திமுக-வைப் பொறுத்து, முரண்பாடானதோ நினைத்துப் பார்க்க முடியாததோ அல்ல. அதுவும் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இல்லாத இந்த நாளில், திமுக மற்றும் அதிமுக இடையே அதிக வலிமை கொண்ட கட்சி மற்ற கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களை ஈர்க்கும் - இந்த முறை திமுக அடுத்த கட்சியிலிருந்து ஒரு முன்னாள் முதல்வரையே கூட்டிக் கொண்டது. இரண்டில் எந்த ஒரு கட்சியின் தலைவர் மற்ற கட்சிக்குத் தாவினாலும், "பெரியார், அண்ணாவின் கொள்கைகளை இந்தக் கட்சிதான் பின்பற்றுகிறது" என்று நமுட்டுச் சிரிப்போடு காரணம் சொல்லலாம்.

 

 

2. கேள்வி: "அண்ணா தொடங்கிய தாய்க் கழகமான திமுக-வில்" பெருமகிழ்ச்சியோடு இணைவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அதிமுக-வில் இருப்பவர்களுக்கு, திமுக தங்களின் தாய்க் கழகம் என்ற உணர்வு இருக்குமா?

 

பதில்: தாய்க் கழகம், சேய்க் கழகம் என்பதெல்லாம் காரியம் ஆக உதவுகிற வார்த்தைகள். இரண்டு கழகங்களையும் ரத்தினச் சுருக்கமாக "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் சொன்னார் காமராஜ். அதற்கு ஒரு அர்த்தம்: ஒரு மட்டையில் அமர்ந்திருக்கும் சில ஈக்கள் - அதாவது தலைவர்கள் - அடுத்த மட்டையில் உட்கார, உட்கார்ந்து உண்ண, வசதியாக இருந்தால் அந்த மட்டைக்குப் பறக்கும், அவ்வளவுதான்.

 

 

3. கேள்வி: அதிமுக-வை விட்டுத் திமுக-வில் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக-வின் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுக-வை அழிவுப்பாதையை நோக்கிக் கொண்டு செல்கிறார்" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: பாவம். தான் சேர்ந்த திமுக-வை திருப்திப் படுத்த எண்ணி, ஓ.பி.எஸ் திமுக-வைச் சாடுகிறார்.

 

ஒரு கற்பனையாகப் பாருங்கள்: பழனிசாமி, திமுக-வை அரசியல் களத்தில் மிகவும் பலவீனப்படுத்தி உள்ளார். ஏன், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடித்து அதிமுக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வழி செய்துவிட்டார் பழனிசாமி. அல்லது, 2024 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணியைத் தமிழகத்தில் வீழ்த்தி அதிமுக கூட்டணி மிக அதிக லோக் சபா தொகுதிகளைக் கைப்பற்ற அவர் உதவினார். நிஜத்தில் இப்படி நடந்திருந்தால், பழனிசாமி அதிமுக-வை அழிவுப் பாதையில் கொண்டு சென்றதாக யாரும் சொல்லமுடியாது. மாறாக, தனது இயலாமையால் பழனிசாமி திமுக-வை மேலும் பலம் கொள்ளச் செய்தார், திமுக-வுக்கு அதிக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் கிடைக்கும் அளவுக்கு அதிமுக-வை அவர் திமுகவிடம் கேவலமாகத் தோற்கச் செய்தார் என்பதால் தான், அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது என்கிறார் ஓ.பி.எஸ்.

 

அதாவது, திமுக ஒரு தீய அரசியல் சக்தி, அதை எடப்பாடி பழனிசாமி கட்டுப்படுத்தவில்லை, தேர்தல்களில் தோற்கடிக்கவில்லை என்பதை அல்லவா பழனிசாமியின் குறையாகச் சொல்கிறார் ஓ.பி.எஸ்? திமுக-வில் சேர்ந்தவுடன், அதிமுக தலைவரைக் குறை சொல்ல நினைத்துத் திமுக-வையே தீய கட்சி என்று சொல்லாமல் சொல்லித் தாக்குகிறாரே ஓ.பி.எஸ்!

 

 

4. கேள்வி: அதிமுக-வில் மூன்று முறை முதல்வர் ஆக்கப் பட்டவர் ஓ. பன்னீர்செல்வம். தனது கட்சியை விட்டு அவரால் எப்படித் திமுக-வில் சேர முடிந்தது?

 

பதில்: மூன்று தருணங்களில் அதிமுக முதல்வராக ஆக்கப் பட்ட ஓ.பி.எஸ்-சை பழனிசாமி தலைமையிலான அதிமுக முற்றிலும் நிராகரித்தது. தன்னை நிராகரித்த அதிமுக-வைத் தற்போது அரசியல் ரீதியாக அடக்கி வைத்திருக்கும் திமுக-வில் இணைந்ததன் மூலம் ஓ.பி.எஸ் சற்று நிம்மதி அடைவார்.

 

திமுக-வில் ஓ.பி.எஸ்-க்கு முடிவுகள் எடுக்கும் இடம் எதுவும் தரப்படாது, அவரும் எதிர்பார்க்க மாட்டார். திமுக-வின் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றால், அவருக்கு ஒரு முக்கிய நாற்காலி தரப்படலாம். மற்றபடி திமுக-வுக்குள் அவருக்கான பெரிய மதிப்பு என்னவென்றால், அவர் வருகை அதிமுக முகத்தில் கரி பூச உதவியது என்பது.

 

என்ன இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு சமர்த்து போதாது.

 

 

5. கேள்வி: அதிமுக-வில் இருந்தபோது ஓ. பன்னீர்செல்வம் 'தர்ம யுத்தம்' என்று ஏதோ நடத்தினாரே, அதன் பொருள் என்ன?

 

பதில்: பெரிதாக ஒன்றுமில்லை. ஏதோ தர்மத்துக்கு செய்யப்பட்ட யுத்தம்!

 

பகுதி 61 // 28.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Thursday, 26 February 2026

கேள்வி-பதில் (26.02.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: மாநிலத்தின் கடன்களைக் குறைத்து வருவாயை அதிகரித்தால், அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதியான "ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக பத்தாயிரம் ரூபாய்" வழங்குவது சாத்தியம் என்று, நிருபர்கள் கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளாரே?

 

பதில்: சிலர் தங்கள் சகோதரர், சகோதரி செய்யும் பெரிய தவறு அல்லது அநியாயம் பற்றி வெளியில் பேச முடியாது. அது பற்றி மூன்றாம் மனிதர்கள் பேசக் கேட்டால் மௌனமாக இருக்க வேண்டும். காரணம், நெருங்கிய உறவுகளை விட்டுக் கொடுக்க முடியாது. அரசியல் கூட்டணி உறவு என்றால், கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் தவறு அல்லது அநியாயத்தைக் கூட்டணியின் மற்ற கட்சிகள் குறைசொல்லக் கூடாது - அதை ஒருவாறு நியாயப் படுத்தவும் வேண்டும். அண்ணாமலை அதை லாவகமாகச் செய்கிறார்.

 

அதிமுக-வின் பைத்தியக்கார தேர்தல் வாக்குறுதி பற்றி நிருபர்கள் வீசிய கேள்வியை அண்ணாமலை நேர்த்தியாக 'லெக் கிளான்ஸ்' ஆட முடியும் என்றால், அவர் ஆட்சியில் ஒரு முக்கியப் பொறுப்புக்கு வந்தால் எந்தப் பந்துக்கும் அவுட் ஆகாமல் நல்ல ஸ்கோர் எடுப்பார்.

 

 

2. கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணுவின் உடலுக்குக் கலங்கிய கண்களுடன் இறுதி மரியாதை செலுத்திய ரஜினிகாந்த், "ஒருவர் நல்லவராக, நேர்மையானவராக, எளிமையானவராக இருந்தால் அவருக்கு மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு உதாரணம் நல்லக்கண்ணு" என்று கூறி இருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து?

 

பதில்: நமது மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பு எதையும் நல்லக்கண்ணு வகித்ததில்லை. இருந்தாலும் அவருடைய நல்லதனம், நேர்மை மற்றும் எளிமை பற்றி, முக்கியமாக நேர்மை பற்றி, ரஜினிகாந்த் குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் - அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் பேசாவிட்டாலும், அவரது ஆழ்மனதிலிருந்து தானாக வெளிவந்த காரணம் - தமிழகத்தின் ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டிய, ஆனால் துளியும் இல்லாத நேர்மை, அத்துடன் நல்லதனம் மற்றும் எளிமை, நல்லக்கண்ணு என்ற அரசியல்வாதியிடம் இருந்தது. இந்த வேறுபாடு அனைவரையும் நல்லக்கண்ணு பற்றிக் கூடுதலாக நெகிழ வைக்கும்.

 

 

3. கேள்வி: "திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களுக்கு வேண்டிய அதிகத் தொகுதிகளைக் கேட்பார்கள். அதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுவது சகஜம். அதன் காரணமாக கூட்டணிக்குள் பிளவு ஏற்படாது, கூட்டணிக் கட்சிகள் கூட்டணியை விட்டு விலகாது. திமுக தலைவர் ஸ்டாலின் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண்பார்" என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்கிறார். இது எப்படி சாத்தியமாகிறது?

 

பதில்: இன்றைய நிலையில், திமுக-வை விட்டால் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு பெரிய வழி இல்லை,  வேறிடத்தில் பெரிய பலன்கள் இல்லை. திமுக-வும் அவைகளைச் சார்ந்து கூட்டணியாகத்தான் தேர்தலில் வெல்ல முடிகிறது. இருந்தாலும், திமுக கூட்டணியில் அதிகத் தொகுதிகள் கிடைக்காததால், ஆட்சியில் பங்கு உண்டு என்ற உத்தரவாதம் தரப்படாததால், கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகினால் அதற்குப் பெரிய நஷ்டம், திமுக-வுக்குச் சிறிய நஷ்டம்.

 

அதிகத் தொகுதிகளுக்காக முரண்டு பிடித்துக் கூட்டணியிலிருந்து வெளியேறி பெரிய நஷ்டத்தைச் சந்திக்க, திமுக-வின் கூட்டணிக் கட்சி எதுவும் விரும்பாது. காங்கிரஸ் மட்டும், கூட்டணி மாறித் தவெக-வுடன் சேர்ந்து அதிகத் தொகுதிகளில் போட்டியிடுவது லாபமா நஷ்டமா, மாறிச் சேரும் கூட்டணி அமைக்கும் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்றாலும் அது ஆட்சிக்கு வருமா இல்லையா, என்று தெரியாமல் இருக்கிறது.

 

இந்தக் காரணங்களால், சலசலப்பு ஏற்படுத்தும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் பேசி தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிக்கிறார் - என்பதைத் திருமாவளவன் மிருதுவாகச் சொல்கிறார்.

 

 

4. கேள்வி: 'கோடைக்கால சிறப்புத் தொகுப்பு' என்று, தமிழக அரசு சார்பில் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அடுத்து, அனைத்துக் குடும்பங்களுக்கும் 'கருணைத் தொகை' என்று பத்தாயிரம் ரூபாயை அதிமுக அரசு வழங்கும் என்று ஒரு புதிய தேர்தல் வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். வாக்காளர்களின் ஓட்டை மேலும் கவர, இனி திமுக மற்றும் அதிமுக வேறு என்ன வாக்குறுதி தர முடியும்?

 

பதில்: ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் மக்கள் மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக, அந்த அந்த மாதத்தின் முதல் தேதியன்று, "மாதப்பிறப்பு மகிழ்வுத் தொகை" என்று குடும்பத் தலைவர்களுக்கு ஒரு மாதம், குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம், என்று மாற்றி மாற்றி - வருடத்தில் பெண்களுக்கு ஆறு மாதம், ஆண்களுக்கு ஆறு மாதம் கிடைக்கும்படி - அவர்களுக்கு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தால் போயிற்று!

 


5. கேள்வி: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பாரதப் பிரதமர் மோடி தோன்றியபோது, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 'மோடி மோடி' என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினார்களே, அது ஏன்?

 

பதில்: இதற்கான காரணத்தை ராகுல் காந்திதான் தெளிவாகச் சொல்வார். அதாவது: இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்!


பகுதி 60 // 26.02.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr