|
கேள்வி-பதில் |
|
1.
கேள்வி: இரு தரப்பினரைக் குறிப்பிட்டு அரசியல்
தலைவர்கள் பேசும்போது, சிலரைப் 'பங்காளிகள்' என்றும், சிலரை 'மாமன் மச்சான் போன்றவர்கள்' என்றும்
சொல்கிறார்கள். அரசியலில் இந்த உறவுகளுக்கு என்ன அர்த்தம்? பதில்: 'நாங்கள்
பங்காளிகள்' என்றால், 'எங்களுக்குள்
முன்பு போட்ட சண்டையை ஒரு பரஸ்பர ஆதாயத்திற்காக ஒத்தி வைத்திருக்கிறோம்' என்று அர்த்தம். நாங்கள் 'மாமன் மச்சான் போல்
இருக்கிறோம்' என்று சொன்னால், 'எங்களுக்குள்
உள்ள புகைச்சல் கனன்றபடி இருக்கிறது, இன்னும் தீரவில்லை'
என்று அர்த்தம். |
|
2.
கேள்வி: திமுக தலைவர் ஸ்டாலின் தன் கட்சித்
தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
"வரும் சட்டசபைத் தேர்தல் ஆரிய-திராவிடப் போரின் மற்றொரு
களம்" என்று சொல்லி இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? பதில்: அவருக்கே அர்த்தம்
தெரியாது. ஆரிய பூதம், திராவிட பூதம் என்று இரண்டு பூதங்களைத் திமுக
கற்பனையாக உருவாக்கி, அதில் திராவிட பூதம் நல்ல பூதம்,
ஆரிய பூதம் கெட்ட பூதம் என்றும் கதை கட்டி, அந்த
பூதங்கள் நிஜமானவை என்று மக்கள் நம்பவேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது.
மக்கள் நம்பவில்லை. இருந்தாலும், ஸ்டாலினுக்கு அரசியலில்
பதட்டம் ஏற்படும்போது -
அதுவும் தேர்தல் வரும் காலத்தில் - அந்த இரண்டு பூதங்களுக்குள் பெரிய மோதல்
இருந்து வருகிறது, திராவிட
பூதத்திற்குத் திமுக துணையாக நின்று ஆரிய பூதத்தை வீழ்த்தும் என்று வசனம் பேசி,
தனது பதட்டத்தைத் தணித்துக் கொள்வார். இல்லாத இரண்டு பூதங்களில்
எதுவும் வெல்வதில்லை, தோற்பதுமில்லை. |
|
3.
கேள்வி: "தேசபக்தி குறித்து எங்களுக்கு
யாரும் பாடம் எடுக்கவேண்டாம்" என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
பேசி இருக்கிறாரே? பதில்: முதல்
விஷயம்: திமுக-வினருக்கு தேசபக்தியில் நாட்டம் இல்லை. ஹிந்தி எதிர்ப்புப்
போராட்டத்தில் உயிர் நீத்தவர்ககளை நினைவு கூர்வதற்காக, ஆண்டு தோறும் 'மொழிப்போர் தியாகிகள் நினைவு
தினத்தை'க் கருப்பு உடையில் அனுசரிக்கின்றனர் ஸ்டாலினும்
மற்ற திமுக-வினரும். தேச விடுதலைக்காகத் தியாகங்கள்
செய்து போராடியவர்களை - அவர்களில் தமிழரான காமராஜையாவது - திமுக உள்ளார்ந்து
போற்றுவதில்லை, பெருமிதத்துடன் நினைவு கூர்வது இல்லை. ஜீவ காருண்யம்
குறித்து கசாப்புக் கடைக்காரனுக்கு யார் பாடம் எடுப்பார்கள்? அவனுக்கு யாரிடம் பாடம் கேட்கப் பிடிக்கும்? |
|
4.
கேள்வி: தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக-வை நீக்கிவிட்டுத் தனது கட்சி ஆட்சிக்கு வரும் என்றும்,
"நான் ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டேன், எனக்கு அது தேவையும் அல்ல" என்றும் பேசி இருக்கிறார். அவர் பேச்சு
நம்பிக்கை தருகிறதா? பதில்: திமுக-வும் ஊழலும்
பிரிக்க முடியாதவை என்பது சரிதான். ஆனால் இதுவரை ஆட்சிக்கு வராதிருந்து, திமுக-வைத்
தேர்தலில் எதிர்ப்பதால் மட்டும் ஒரு கட்சி ஊழலுக்கு எதிரானது என்று ஆகாது.
முதலில் விஜய் கட்சி ஆட்சிக்கு வருகிறதா, பார்க்கலாம். மற்றவை பிறகு. இன்னொன்று. இன்றுவரை விஜய் வெளிப்படுத்தி இருப்பது வீர வசனங்கள், மார்
தட்டல்கள், விசில் சத்தம் மட்டுமே. ஊழலை நிராகரித்து, நேர்மையாகவும்
திறமையாகவும் ஆட்சி செய்ய முடிகிற ஒரு தலைவரிடம், அவரது
பேச்சிலும் உடல்மொழியிலும், நிதானம், முதிர்ச்சி மற்றும் சமநிலைப் பார்வை ஆகிய பண்புகள் தென்படும். பூதக்
கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் விஜய்யிடம் அந்தப் பண்புகள் தெரியவில்லை. |
|
5.
கேள்வி:
கணவன் முக்கியமானவன் என்பதைச் சொல்லும் பழமொழி, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்.' மனைவி முக்கியமானவள் என்று
சொல்கிற பழமொழி இருக்கிறதா? பதில்: அதே
விதத்தில் புதுமொழியாகச் சொல்லலாம்: மண்ணானாலும் மனைவி, பூண்டானாலும் பொஞ்சாதி. |
|
பகுதி 43 // 25.01.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |