Wednesday, 21 January 2026

கேள்வி-பதில் (20.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: இந்தியா வந்த அமீரக அதிபருக்கு, பிரதமர் மோடி ஒரு குஜராத் ஊஞ்சலைப் பரிசாக அளித்திருக்கிறார். நமது பிரதமர், லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஏதாவது பரிசு தர நினைத்தால் என்ன பொருளைத் தரலாம்?

 

பதில்: தொட்டில்.

 

 

2. கேள்வி: புதுச்சேரியில் மாதாமாதம் குடும்பத் தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து, இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தப் படுவதாக அம்மாநில முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: தேர்தலுக்கு முன்பாக அரசியல் தலைவர்கள் பலரும் இப்படி 2,000, 3,000 என்று வரப்போகும் அரசின் சார்பில் பண விநியோகத்தை அறிவிப்பது, ஓடியாடும் விளையாட்டில் ஸ்கோர் எடுப்பது மாதிரி. இந்த ஸ்கோர்களை முன்கூட்டியே அறிவிப்பது மட்டும் இந்தத் தலைவர்கள் செய்வது. இவர்களில் ஒருவரின் கட்சி, தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால் அப்போதைய நோஞ்சான் அரசு அந்தத் தலைவருக்காக வேர்க்க விறுவிறுக்க நாக்குத் தள்ள ஓடி அவர் அறிவித்த ஸ்கோரை எட்ட வேண்டும். அதில் அந்த நோஞ்சான் நிலைகுலைந்து உட்கார்ந்தாலும் உட்கார்ந்ததுதான். தலைவர் நலுங்காமல் குலுங்காமல் தனது வருமானத்தைப் பெறுவார்.

 

ஆட்சியில் அமர்ந்திருக்கும் தீய கட்சியை அகற்றி நல்லாட்சி தர விரும்பும் வேறொரு கட்சியும் இந்த நோயை ஏற்று, முள்ளை முள்ளால் எடுக்கவேண்டி இருக்கிறது. ஆட்சிக்கு வரும் கட்சி சிறப்பாக நிர்வாகம் செய்து அதன் தலைவர்கள் பணம் சேர்க்காமல் இருந்தால் மற்றது சரி என்று போகவேண்டிய காலம் இது.

 

 

3. கேள்வி: "கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மாநிலங்களைப் போல், தமிழகத்தில் ஏன் காங்கிரஸை வளர்க்கவில்லை?" என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல் காந்தி கேள்வி கேட்க, அவர்கள் பதில் அளிக்கமுடியாமல் திணறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது, என்று தினமலர் பத்திரிகை சொல்கிறதே?

 

பதில்: இந்தச் செய்தி நூற்றுக்கு நூறு நம்பகத் தன்மை கொண்டதா என்று நமக்குத் தெரியாது. ஆனால் ராகுல் காந்தியின் நிலையில், இப்படி அசட்டுத்தனமாகக் கேள்வி கேட்கக் கூடியவர் அவர்.

 

2013-க்குப் பிறகு, டெல்லி சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கோட்டை விட்டுக் கொண்டே வருகிறதே, 2014-லிருந்து லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் கேவலமாகத் தோற்கிறதே, என்று கேட்டால் ராகுல் காந்தி திணறாமல் பதில் சொல்வாரா? 'ஓட்டுத் திருட்டு' பதிலைக் கேட்டால் காங்கிரஸ் தலைமையக பியூன் கூடச் சிரிப்பான்.

 

இந்திரா காந்தி குடும்பத்துக்குச் சலாம் போட்டுப் பொழுதுபோக்கும் மாநில நிர்வாகிகள் தான் பெரும்பாலும் காங்கிரஸுக்குக் கிடைப்பார்கள்.

 

 

4. கேள்வி: "நான் எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்தியதற்காக உங்கள் நாடு எனக்கு  அமைதிக்கான நோபல் பரிசைத் தரவில்லை. எனவே, இனி அமைதி பற்றி மட்டுமே நான் சிந்திக்கத் தேவையில்லை" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், நார்வே நாட்டுப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாரே?

 

பதில்: உலகில் அமைதிக்காக அதிபர் டிரம்ப் அதிகப் பங்களிப்பு செய்தவர் என்று ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். இருந்தாலும், அவர் தன் கடிதத்தில் எழுதிய சொற்களின் ஆணவத்தை, கிறுக்குத்தனத்தை, இவ்விதம் புரிந்துகொள்ளலாம்.

 

ஒரு கர்நாடக இசைப் பாடகர் அவருடைய துறை சார்ந்த உயர்ந்த விருதை எதிர்பார்க்கிறார், ஆனால் அது அவருக்கு வழங்கப்படவில்லை என்றால், அந்தப் பாடகர் "எனக்கு அந்த விருது கிடைக்காதபோது, இனிமேல் நான் அபஸ்வரமாகவும் பாடுவேன்" என்று அறிவிக்கலாமா?

 

 

5. கேள்வி: புலி வாலைப் பிடித்தவன் கதை என்பது என்ன?

 

பதில்: எலி வாலைக் கூட, எலி செத்த பின்புதான் பிடிக்க முடியும். புலி வாலை ஒருவன் பிடித்தால் அவன் கதை அந்த நொடியே முடிந்தது. பிறகு ஏது கதை அவனுக்கு?

 

பகுதி 41 // 20.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

Sunday, 18 January 2026

கேள்வி-பதில் (18.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: வேறு சில இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்குத் தமிழக அரசு சார்பில் தேசிய அளவிலான விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரே?

 

பதில்: இது திராவிட மாடல் ஆட்சியின் இயல்புக்கு மாறான எதிர்பாராத அறிவிப்பு. ஆனால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உரம் சேர்க்கக் கூடியது, வரவேற்கத் தக்கது. சரி, இந்தியாவின் மற்ற மாநில மொழிகளில் சிறந்த புத்தகங்களைத் தேடிப் பரிசளிக்க அரசுக்கு மனம் இருக்கும்போது, அந்த மொழிகளில் மாணவர்கள் விரும்பும் ஒன்றைப் பள்ளியில் ஒரு பாடமாக அவர்கள் பயில உதவும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஸ்டாலின் அரசு எதிர்க்க வேண்டும்? அந்த எதிர்ப்பு திமுக-வுக்கு உளமானதா, அல்லது இந்த அறிவிப்பு அக்கட்சிக்கு உளமானதா?

 

 

2. கேள்வி: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு வாக்குறுதியாக, 'குலவிளக்கு திட்டம்' என்று ஒன்றை அதிமுக அறிவித்து, அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பப் தலைவியின் வங்கிக் கணக்கிலும் அரசு மாதம் 2,000 ரூபாய் செலுத்தும் என்று அந்தக் கட்சி சொல்லி இருக்கிறதே?

 

பதில்: அரசியல் கட்சிகள்  நடத்தும் இலவசக் கூத்து எங்கு போய் முடியுமோ? அதிமுக-வுக்குப் போட்டியாக இன்னொரு கட்சி, 'குல இரட்டை விளக்கு திட்டம்' என்று ஒன்றை அறிவித்து, அதன் கீழ் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் அகல் விளக்குத் தொகை ரூபாய் 2,000, குடும்பத் தலைவனுக்கு லாந்தர் விளக்குத் தொகை ரூபாய் 2,000 - ஆக மொத்தம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூபாய் 4,000 - என்று ஒரு தேர்தல் வாக்குறுதி அளிக்க நினைக்கலாம். அரசு இலவசங்களில் நியாயமானவை சொற்பம், நியாயமற்றவை அதிகம்.

 

 

3. கேள்வி: "கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசின் சார்பில் இடம் வாங்கி வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் கட்டி இலவசமாக வழங்கப்படும்" என்று அதிமுக ஒரு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியை இப்போது அளித்திருக்கிறதே?

 

பதில்: "மக்கள் வேலை செய்து தங்கள் சம்பாத்தியத்தில் வீடு வாங்கும்படி செய்ய, மாநிலத்தில் தொழில்வளத்தைப் பெருக்கவேண்டும், வேலைவாய்பைக் கூட்டவேண்டும். தமிழகத்தில் இரண்டையும் செய்ய எங்களுக்குத் திராணி இல்லை. எங்களால் முடிவது, திமுக-வை மிஞ்சி அரசு கஜானாவை அதிவிரைவில் ஓட்டாண்டி ஆக்குவோம்" என நேரடியாகச் சொல்லக் கூச்சப் படுகிறது அதிமுக.

 

 

4. கேள்வி: ராணுவத்தை அனுப்பியாவது கிரீன்லேண்டைக் கைப்பற்றி அமெரிக்காவோடு இணைக்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பைத் தடுக்க வழியே இல்லையா?

 

பதில்: இருக்கிறது. டிரம்ப் ராணுவ நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்து, கிரீன்லேண்ட் இணைப்புத் திட்டத்தையும் கைவிட்டால், டிரம்ப் தொடங்கவிருந்த போரை அவரே நிறுத்தியவர் என்ற பெருமை அவரைச் சேரும், அது அவர் தடுத்து நிறுத்தும் 9-வது போராகும், ஆகையால் அவருக்கு அமைதிக்கான 2026ம் வருட நோபல் பரிசு அளிக்கப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் கிரீன்லேண்ட் தப்பிக்கலாம்.

 


5. கேள்வி: சிலர் பார்த்தும் பார்க்காதது போல் இருப்பதாக, அல்லது கேட்டும் கேட்காதது போல் இருப்பதாக, வழக்கில் சொல்கிறோம். யாரும் பேசியும் பேசாதது போல் இருப்பதாக நாம் வழக்கில் சொல்வதில்லையே?

 

பதில்: நாம் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அது உண்டு. பலதைப் பேசியும் பேசாதது போல் இருப்பது அரசியல். பேசியது என்னவென்றால்: (1) தேர்தல் வாக்குறுதிகள்; (2) முன்பு எதிரிக் கட்சியில் இருந்தபோது, தற்போது தஞ்சம் அடைந்துள்ள கட்சியின் தலைவரை நார்  நாராகக் கிழித்தது.


பகுதி 40 // 18.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

 

 

 


Saturday, 17 January 2026

கேள்வி-பதில் (17.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முந்தைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெருமைப்படுத்தும் புதிய திரைப்படம், பராசக்தி. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து, திமுக தரப்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகம் செய்திருக்கும் படம். தமிழகத்தில் அதற்கு ஏன் பெரிதாக வரவேற்பில்லை?

 

பதில்: இன்றையத் தமிழ்நாடு, ஹிந்தி எதிர்ப்பை உள்ளூர எதிர்க்கிறது. அன்றைய ஹிந்தி எதிர்ப்பைப் பெருமையாகக் காண்பித்து, இன்றையத் தமிழ் மக்களுக்கும் ஹிந்தி எதிர்ப்பைப் புகட்ட முனையும் படம் பராசக்தி. படத்தின் இந்த அம்சம் முன்கூட்டியே பரப்பப்பட்டு, அது அனைவராலும் உணரப்பட்டது.  அதனால் பெருவாரியான மக்களுக்கும் பராசக்தி முன்கூட்டியே ரசிக்காமல் போய்விட்டது என்று நினைக்கிறேன்.

 

 

2. கேள்வி: ஹிந்துக்கள் சூரியனை வழிபடும் விழா, பொங்கல் திருவிழா. அதற்குச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு, பொங்கல் சமைத்து உண்ணும் விழாவாக மட்டும் அதைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி இருக்கிறார். ஹிந்துக்கள் தொடர்பான வேறு எந்த தினத்தைத் திமுக சமத்துவப் படுத்தலாம்?

 

பதில்: ஹிந்து உணர்வுகளை உதாசீனப்படுத்தி, திமுக எந்த அக்கிரமத்தையும், எந்த அசட்டுத்தனத்தையும், கோணல் சிந்தனையுடன் செய்யும். ஆகையால் இப்போதய திராவிட மாடல் அரசு, சந்திரன் தொடர்பான அமாவாசை தினத்தை "சந்திரன் மறையும் அமாவாசை அனைவருக்கும் பொதுவானது. இனி தமிழகத்தில் அந்த தினம் சமத்துவ அமாவாசை என அழைக்கப்படும்" என்று அறிவித்து, அரிசி கார்டு வைத்திருக்கும் எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அமாவாசைக்கு அமாவாசை இருநூற்றி ஐம்பது ரூபாயை 'அமாவாசை அன்பளிப்பாக' தமிழக அரசு வழங்கும் என்று அறிவித்தால் ஆச்சரியம் இல்லை. சட்டமன்றத் தேர்தலும் வரப் போகிறது.

 

 

3. கேள்வி: வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாதோ, அமைதிக்காகத் தனக்குக் கிடைத்த 2025 நோபல் பரிசுப் பதக்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட டிரம்ப் "நான் ஆற்றிய பணிக்காக மச்சாதோ அந்தப் பதக்கத்தை என்னிடம் கொடுத்தார்" என்று சொல்லி மச்சாதோவைப் பாராட்டி இருக்கிறாரே?

 

பதில்:  அமைதிக்கான அந்த நோபல் பரிசு அறிவிக்கப்படும் முன், அது தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று குதித்தவர் டிரம்ப். தான் பெற்ற நோபல் பதக்கத்தை இப்போது பித்துக்குளி டிரம்பிடம் மச்சாதோ கொடுத்திருப்பது ஒரு மதியூகமாக இருக்கும். இனி அந்தப் பதக்கத்திற்காக டிரம்ப்பின் ராணுவம் தன்னைக் கைது செய்து நாடுகடத்தி வழக்குப் போட்டுத் தன்னைத் துன்புறுத்தாது என்ற நிம்மதி மச்சாதோவுக்கு   வந்திருக்குமே!

 

 

4. கேள்வி: மஹாராஷ்டிராவில் மொத்தம் 29 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில், 25ஐ பாஜக கூட்டணி கைப்பற்றும் நிலையைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. யாரால், அல்லது எதனால், பாஜக கூட்டணிக்கு இந்த அபார வெற்றி கிடைத்திருக்கிறது?

 

பதில்: மோடியினால், அவர் ஈர்த்த சிறந்த மனிதர்களால்.

 

தூய சிந்தனை கொண்ட பேராற்றல் மிக்க தலைவர், பிரதமர் மோடி. அவர் நாட்டின் பல பகுதிகளில் ஆற்றலும்  அர்பணிப்பும் கொண்ட பிரதேசத் தலைவர்களை ஈர்த்து, தனது உதாரணத்தால் அவர்களுக்கு உத்வேகம் அளித்து, அந்த அந்தப் பிரதேசங்களில் அவர்களின் வளர்ச்சிக்கும் தேர்தல் வெற்றிகளுக்கும் மறைமுக வித்தாக இருக்கிறார். சில பிரதேசங்களில் இந்த நிகழ்வு ஏற்பட நாள் பிடிக்கும்.

 

 

5. கேள்வி: "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்பது பழமொழி. காற்று இருக்கும்போது மட்டும்தான் தூற்ற வேண்டுமா?

 

பதில்: கட்சி மாறினாலும் தூற்றலாம். வெளியேறிய, அல்லது வெளியே அனுப்பிய, கட்சியின்  தலைவரைத் தூற்றினால், புதிதாகச் சேர்ந்த கட்சியின் தலைவர் மகிழ்வார்.

 

பகுதி 39 // 17.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 


Friday, 16 January 2026

'சோ'வுடன் ஐந்து நிமிடங்கள்

 

-- ஆர். வி. ஆர்

 

எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு சமயம் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேயிடம் ஒரு கட்டுரை எழுதித்தரக் கேட்டார். பாலகுமாரனே தன்னிடம் கேட்டது, தனக்கு எவ்வளவு உத்வேகம் தந்தது என்று பாண்டே ஒரு மேடையில் சொல்கிறார். அதுபோல் எனக்கும் ஒரு உத்வேகம் அளித்தவர், 'துக்ளக்' ஆசிரியர் சோ. அது நிகழ்ந்தது 1988 வாக்கில் - அப்போது துக்ளக், மாதம் இருமுறை.

 

அன்றைய ரங்கராஜ் பாண்டே அளவு கூட நான் அறியப்படாத நாளில், நான் எழுதிய சில அரசியல் கட்டுரைகளைத் துக்ளக்கிற்காக அந்தப் பத்திரிகையின் அலுவலகத்தில் கொடுத்திருந்தேன். அவற்றைப் படித்த சோ, அடுத்த முறை இன்னொரு கட்டுரையுடன் நான் துக்ளக் அலுவலகம் சென்றபோது என்னை அவர் அறைக்கு அழைத்தார். எதற்கு என்ற ஆவலுடன் மாடியேறி அவர் முன் சென்ற என்னிடம், என் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன, ஆனால் துக்ளக்கில் அவற்றுக்குப் பக்கங்கள் இல்லை என்று அவர் எடுத்துச் சொன்னார். எதுவாக இருந்தாலும் என் எழுத்தைப் பற்றிய நல்வார்த்தையை அவரிடம் நேர்முகமாகக் கேட்டபோது, உற்சாகத்தில் சடாரென்று என் நாற்காலியில் நான் காற்றாகிப் போனேன். அப்போது சோ ஒரு படி மேலே போய், "So please excuse me" என்றும் சொல்லி என்னை உருக்கி என் எழுத்தின் மீது எனக்கிருந்த நம்பிக்கையைக் காலத்திற்கும்  கெட்டிப் படுத்தினார்.

 

எனது ஒரு கட்டுரையைச் சோ துக்ளக்கில் பிரசுரித்துவிட்டு, என்னைக் கூப்பிட்டுப் பேச அவசியம் இல்லை என்று நினைத்திருந்தால் ('அதான் ஒரு கட்டுரை போட்டாயிற்றே! எல்லாக் கட்டுரைகளையும் போட முடியுமா?') எனக்கு அவரிடமிருந்து ஒரு வாழ்நாள் டானிக் கிடைத்திருக்காது. அது மட்டுமல்ல. ஒரு எழுத்தாளனின் பெருந்தன்மையையும் அன்று எனக்கு தரிசனம் செய்துவைத்தார் சோ.

15.01.2026

Thursday, 15 January 2026

கேள்வி-பதில் (13.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-வின் வஜ்ராயுதம், உதயநிதி" என்று அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் பேசியிருக்கிறாரே?

 

பதில்: இந்திரனின் ஆயுதமான வஜ்ராயுதம் சக்திமிக்க எதிரிகளையும் அழிக்க வல்லது. உதயநிதி டைப் வஜ்ராயுதம் வேறு. மாற்றுக் கட்சி எதிரிகளைப் பெரிதாக எதுவும் செய்யாது. சொந்தக் கட்சி திமுக-வின் சீனியர் தலைவர்களையும் உதயநிதியின் காலடியில் கிடத்தி அவரை வணங்கிப் புகழச் செய்யும்.

 

 

2. கேள்வி: ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா?

 

பதில்: ஒரு ஆட்டத்தில் பங்கு பெறும் இரு தரப்பினரும், பங்கேற்கும் அனைவரும், ஆர்வத்தோடு பங்கு கொண்டால் அது விளையாட்டு. நீங்கள் ஒரு நாயுடன் ஓடியாடினால் அதில் இருவருக்கும் ஆர்வம் இருக்கும், அது இருவருக்கும் விளையாட்டு. ஜல்லிக்கட்டு அப்படியல்ல.

 

ஜல்லிக்கட்டு காளைமாட்டை மற்ற நேரத்தில் பாருங்கள். அதன் உடல் உயர்ந்து வலுவாகத் தெரியும். அதன் கண்களில் சாந்தம் இருக்கும், திமிர் இருக்காது. தனது உடல் வலிமையை அது மனிதர்களிடம் காட்ட விரும்பாது.

 

ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைமாடுகள், மிரட்சியுடன் மனிதர்களிடமிருந்து தப்பி ஓடுகின்றன. அதற்குத் தடையாக மாடுபிடி வீரர்கள் குறுக்கே வந்தால் அவர்களை முட்டி விலக்கித் தப்பி ஓட முயல்கின்றன. ஜல்லிக்கட்டில் வீரம் இல்லை. விளையாட்டு இல்லை. மற்றது உண்டு.

 

 

3. கேள்வி: அயலகத் தமிழர் தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் விதைத்தது" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: திராவிட மேடைகளிலிருந்து மக்களிடம் சொல்லப்படும் வெற்று அலங்கார வார்த்தைகள் அவை.

 

தமிழகத்தில் திமுக ஆட்சிகளின் லட்சணம் நாம் அறிந்தது. அதன் பரவலான தாக்கத்தில் மக்களிடம் சாதாரணத் தமிழ் தடுமாறுவதும் நம் செவிகள் அறிந்தது. ஆக, திமுக ஆட்சியாளர்கள் தங்களைப் பற்றி, தமிழ் வளர்ச்சிக்குத் தாங்கள் செய்தது பற்றி, ரகசியமாக இப்படிச் சொல்லிக் கொள்ளலாம்: 'தாழ்வது நாமாக இருந்து தவழ்வது தமிழாக இருக்கட்டும்.'

 

 

4. கேள்வி: "தற்போது இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் என வெளிநாடுகளில் தமிழர்கள் குடும்பத்தோடு வசிக்கின்றனர். இதுதான் திமுக அரசின் சாதனை" என்று துணை முதல்வர் உதயநிதி பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒருவேளை, 'தமிழ்நாட்டு இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற நன்கு படித்த சமூகம் பெரும்பாலும் திமுக-வுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள், அவர்கள் தமிழ்நாட்டில் ஓட்டுப்போட முடியாமல் குடும்பத்துடன் வெளிநாடுகளில் இருக்கட்டும்' என்ற நினைப்பை உதயநிதி இப்படிச் சொல்கிறாரோ? என்ன இருந்தாலும் அசட்டுப் பேச்சு.  

 

 

5. கேள்வி: சிரிப்பதற்கு ஒன்று சொல்ல முடியுமா?

 

பதில்: ஒன்று


பகுதி 38 // 13.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr