Friday, 12 June 2026

கேள்வி-பதில் (12.06.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக வாங்கிய கமிஷனைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும், கூட்டணி தர்மத்திற்காக அதை வெளியில் சொல்லவில்லை" என்று இப்போது கூறுகிறாரே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்?

 

பதில்: 2021 சட்டசபைத் தேர்தலின்போது, காங்கிரஸ் திமுக-வுடன் தேர்தல் கூட்டணியில் இருந்தது, ஆனால் திமுக வென்று அமைத்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு தரப்படவில்லை. இப்போது தவெக-வுடன் புதிதாகக் கூட்டணி உறவு கொண்டு, விஜய் ஆட்சியில் அமைச்சர் பதவிகளையும் பெற்றிருக்கிறது காங்கிரஸ். ஆகையால் தற்போது காங்கிரஸ் அனுஷ்டிக்கும் கூட்டணி தர்மம் இன்னும் உயர் ரகம். இன்றைய விஜய் ஆட்சியைப் பாராட்டிப் பேசுகின்ற -- சமயத்தில் எதுவும் பேசாமல் மவுனம் காக்கக் கூடிய -- காங்கிரஸின் கூட்டணி தர்ம சிந்தனையை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

 

 

2. கேள்வி: "சட்டசபைத் தேர்தலில் திமுக சின்னத்தில் மதிமுக-வினர் போட்டியிட்டது துரதிருஷ்டமானது" என்று மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: துரை வைகோ வெளியில் என்ன சொன்னாலும், அவர் மனதில் ஓடிய எண்ணம் இதுவாக இருக்கும்: 'நான்கு தொகுதிகளில் திமுக சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு, இரண்டில் ஜெயித்தாலும் மதிமுக-வுக்கு துரதிருஷ்டம் தான். காரணம், அநேகர் எதிர்பார்ப்புக்கு மாறாக தவெக அதிக இடங்களில் ஜெயித்து அதன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டது. திமுக ஜெயித்து மறுபடியும் திராவிட மாடல் ஆட்சி வந்திருந்தால், 'திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது இரண்டு கட்சிகளுக்கும் பெருமை' என்று தில்லாகக் காக்கா வசனம் பேசி இருக்கலாம்'.

 

 

3. கேள்வி: "தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக, தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வீரபாண்டியன் திரும்பத் திரும்பச் சொல்கிறாரே?

 

பதில்: 'தவெக ஆட்சியை கெட்டியாக ஆதரிக்கும் எங்கள் கட்சியும் பிற கட்சிகளும் தங்கள் ஆதரவை விலக்கி அந்த ஆட்சியைக் கவிழ்த்தால், அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களில் கெத்தாக வென்று எங்களைச் செல்லக் காசாக ஆக்கி விடும்' என்று வெளிப்படையாகப் பேச வீரபாண்டியன் என்ன, வடிகட்டின அசடா?

 

 

4. கேள்வி: பாஜக-விலிருந்து, தான் விலகுவதாக அண்ணாமலை அளித்த கடிதத்தில் "தேசியக் கட்சிகள், தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில் பேசவில்லை" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது சரியா?

 

பதில்: சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதன் தலைவர் மம்தா பானர்ஜியும் அவர் தொகுதியில் தோற்றார். அவர் கட்சி, அந்த மாநில மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசவில்லை என்று ஆகாது. அதைப் போல், தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக மற்றும் பிரதான எதிர்க் கட்சி அதிமுக இரண்டுமே பெரும் தேர்தல் தோல்வியைச் சந்தித்தன. திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதியில் ஜெயிக்கவில்லை. இந்த இரு கட்சிகளும் தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசவில்லை என்று ஆகாது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை, தேசியக் கண்ணோட்டத்தை ஒதுக்கியும் பல வகைகளில் இழித்தும் வளர்ந்த கட்சி திமுக. அதனால் தேசியக் கட்சிகள் என்ன பேசினாலும் அது நமது மாநிலத்தில் பெரிதாக எடுபடாமல் போனது. தேசியக் கட்சிகள் தமிழகத்திற்கு ஏற்றவாறு பேசவில்லை என்பது பத்து அல்லது இருபது சதவிகித விஷயம். தேசியத்தின் மீது, தேசியக் கட்சிகளின் மீது, பெருவாரியான தமிழர்களுக்குப் பிடிப்பு வராமல் திமுக தனது நலன்களுக்கான பிரசாரத்தை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது என்பது எண்பது அல்லது தொண்ணூறு சதவிகித விஷயம்.

 


5. கேள்வி: "திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் விதமாக எந்தச் செயலையும் அனுமதிக்க மாட்டோம்" என்று தமிழகத்தின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்திருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?

 

பதில்: 'இந்த விவகாரம் கோர்ட்டில் இருக்கிறது. அது சுப்ரீம் கார்ட் வரை கூடப் போகலாம். கோர்ட்டின் இறுதி உத்தரவுப்படி அரசு செயல்படும்' என்று அமைச்சர் பேசி இருந்தால், அது சரி, அது நியாயம். அதுவல்லாமல் அவர் பேசிய பேச்சு, கெக்கே பிக்கே.


பகுதி 102 // 12.06.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment