Friday, 25 September 2026

கேள்வி-பதில் (22.09.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டசபை, தவெக-வினரால் அதன் மாண்பை இழந்து நிற்கிறது. இந்தக் கொடுமையைப் பார்க்க நான் சட்டசபையில் இல்லை. இதற்காகக் கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொளத்தூர் மக்களுக்குக் கோடானு கோடி நன்றி" என்று சட்டசபைத் தேர்தலில் தான் தோல்வியுற்றது குறித்து மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறாரே?

 

பதில்: சென்ற சட்டசபைத் தேர்தலில் தனது தொகுதியில் ஜெயிக்காத ஸ்டாலின், அடுத்த தேர்தலில் அங்கு வெல்கிற வழியைப் பார்க்க வேண்டும். அதில்லாமல், முன்பு தனக்கு வெற்றி தராத  வாக்காளர்களை நையாண்டி செய்து அவர் பேசியது, விபரீத அர்த்தத்தைக் குறிக்கும்.

 

கொளத்தூர் தொகுதி மக்கள் ஸ்டாலினைத் தோற்கச் செய்து, தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவை ஜெயிக்க வைத்தனர் என்றால், ஸ்டாலின் பார்வையில் அது எதற்காம்? சட்டசபையின் மாண்பு குலைய வி.எஸ். பாபு தன்னால் முடிந்ததைச் செய்யட்டும் என்று அந்த மக்கள் விரும்பினார்களா? அல்லது, மாண்பை இழக்கும் சட்டசபையை ஸ்டாலினுக்குப் பதில் வி.எஸ். பாபு காணட்டும் என அந்த மக்கள் ஆசைப்பட்டார்களா? வாக்காளர்களை ஸ்டாலின் இப்படியா கேவலப் படுத்துவார்?

 

 

2. கேள்வி: 'மகளிர் வெற்றிப் பயணம்' எனப் பெயரிடப்பட்ட மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டம், இனி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகள் மற்றும் புறநகர்ப் பேருந்துகளிலும் விரிவாக்கம் ஆவதை அக்டோபர் 2ம் தேதி முதல்வர் விஜய் துவங்கி வைக்கிறாராமே?

 

பதில்: தவெக-வின் தேர்தல் அறிக்கை ஒருபுறம் இருக்கட்டும். வருகின்ற இரண்டு இடைத் தேர்தல்களில் தவெக எதிர்பார்க்கும் வெற்றி இலக்கு; ஒரு கையால் விஜய் அரசின் கையை நட்புடன் பற்றி, இன்னொரு கையால் அரசின் கழுத்தில் கத்தியை லேசாக வைத்தபடி இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் கத்தியைப் பிடுங்கி எறியும் யுக்தி; தவெக-வுக்கான பெண்கள் ஆதரவை மேலும் உறுதிப்படுத்தி எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலரை அவரவர் கட்சியை உதைத்துவிட்டுத் தவெக-வுக்குத் தாவிவர சங்கேத அழைப்பு, என்ற முக்கியப் பேருந்து நிறுத்தங்கள் கொண்டது இந்த மகளிர் வெற்றிப் பயணத்தின் விரிவாக்கம்.

 

தன்னுடைய நாற்காலியை ஆடாமல் வைத்திருப்பது, எளிதான இலவசங்கள் மூலம் அதிக வாக்காளர்களை ஈர்ப்பது, ஆகியவைதான் விஜய்க்கு முக்கியம். தமிழ்நாட்டின் சீரான ஒட்டுமொத்த வளர்ச்சி அவருடைய குறிக்கொள் அல்ல, அதை அடைவதற்கான தொலைநோக்குப் பார்வை மற்றும் நிர்வாகத் திறன் அவரிடம் இல்லை.

 

 

3. கேள்வி: மறைந்த ஈ.வெ.ரா பெரியாரின் பிறந்த தினத்தன்று சமீபத்தில் அவரைப் போற்றித் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, பின்னர் அதுபற்றி மேலும் விளக்கித் தனது 'வீ த லீட்ஸ்' அமைப்பினர் மத்தியில் இவ்வாறு பேசி இருக்கிறார்:

 

"தமிழ்நாட்டில் இருக்கும்போது நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும் அருமைச் சொந்தங்களே. ஒரு அரசியல் இயக்கத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். எல்லா மக்களுக்கான ஒரு அரசியல் கட்சியை நாம நடத்தணும். அரசியல் கட்சி நடத்தற எல்லா தரப்பு மக்களும் இருக்கிறார்கள். மக்களில் 99% கடவுளை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள் என்றால் 1% நம்பாதவர்களும் இருப்பார்கள். பெரியார் அவர்களை நான் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியாருடைய பெண் விடுதலை மற்றும் சாதி ஒழிப்புக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம். பெரியாரிடம் நிறைய முரண்பாடுகள் இருந்தன. பெரியாருடைய கடவுள் எதிர்ப்புக் கொள்கையை நான் சுத்தமாக ஏற்கவில்லை. பெரியாருடைய பிராமண துவேஷத்தை நான் சுத்தமாக ஏற்கவில்லை..... நம்முடைய ஆட்சி வரும்போது, 'கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை' என்ற வாசகங்கள் தாங்கி கோவில்களுக்கு முன்னால் உள்ள பெரியார் சிலைகளை மரியாதையாக எடுத்துச் சென்று ஒரு பொது இடத்தில் வைத்துவிடுவோம். யார் கடவுளை நம்பவில்லையோ அவர்கள் போய் அந்தச் சிலையைப் பார்க்கட்டும்."

 

இது நல்ல விளக்கமா?

 

பதில்: இந்த கெட்டிக்கார விளக்கம், கடவுளை நம்பும் 99% மக்களைத் திருப்தி செய்யாது. கடவுளை நம்பாத 1% மக்களையும் திருப்தி செய்யாது.

 

ஈ.வெ.ரா-வை அண்ணாமலை போற்றிப் பதிவிட்டதால், பிறகு அதை மேலும் விளக்கியதால், கடவுளை நம்பாத 1% சதவிகித மக்களின் வாக்குகளை - திமுக ஏற்கனவே கவர்ந்தது போக, அவற்றில் கால் பங்கு வாக்குகளையாவது - அண்ணாமலை தனது எதிர்கால அரசியல் கட்சிக்காக ஈர்ப்பார் என்று யாராவது நினைத்தால், அது நிகழாது. மாறாக, கடவுளை நம்புகிறவர்கள் பக்கத்திலிருந்து ஒரு சதவிகிதத்திற்கு மேலான வாக்குகளை அவர் இழக்கலாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அண்ணாமலை ஈ.வெ.ரா-வைப் போற்றுவது, அண்ணாமலையின் இயக்கத்திற்கு, அவர் தொடங்கப் போகும் அரசியல் கட்சிக்கு, நன்மை செய்யாது.

 

திமுக-வும் தவெக-வும் ஈ.வெ.ரா-வைப் போற்றலாம் - அந்தக் கட்சிகளின் வெற்றிக்கான அடிப்படைகள் மற்றும் வழிமுறைகள் வேறு. அண்ணாமலை அதைச் செய்து அவர் எப்படி விளக்கினாலும், அண்ணாமலையின் அரசியல் பர்சனாலிடிக்கும் பிரதான அரசியல் வழிக்கும் அது ஏற்றதாக இருக்காது.

 

 

4. கேள்வி: திமுக பொதுச்செயலர் துரைமுருகன் பேசுகையில், "சட்டசபைத் தேர்தலில், திமுக எதிரியுடன் மோதியது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத மாயாவி போல வந்த ஒன்று இங்கு நின்றுவிட்டது. இந்த மாயாவி தமிழகத்தில் பரவியுள்ளது. இது நெடுநாள் நிலைக்காது" என்று 2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றி குறித்துச் சொல்கிறார். அவர் சொல்வது சரியா?

 

பதில்: தவெக என்ற கட்சி, திமுக-வின் கண்ணுக்குத் தெரியாத மாயாவியா?  வாக்காளர்களின் கண்களுக்கு மட்டும் தெரிந்த மாயாவியா?

 

திமுக-வை நோக்கி "நீ தீய சக்தி, நான் தூய சக்தி. இந்தத் தேர்தலில் உனக்கும் எனக்கும்தான் போட்டி" என்று பேசித் தேர்தலில் பிரசாரம் செய்த தவெக, மாயாவியா? அல்லது, திமுக-வின் உயிர்ப்பு அடங்கி அக்கட்சி ஆவியாகி விட்டதா?

 

ஒரு கட்சி ஆவியல்ல. இன்னொரு கட்சி மாயாவியல்ல. வாக்காளர்தான் பாவி.

 


5. கேள்வி: "தவெக ஆட்சியில் மின்வெட்டும் அரிவாள் வெட்டும்தான் நடக்கின்றன" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறாரே?

 

பதில்: விஜய் அரசு மின்வெட்டை நிறுத்தவும் அரிவாள் வெட்டைப் பெருமளவு கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த அளவில் ஸ்டாலின் சொல்வது சரி. ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் நிலவிய ஒரு வித வெட்டு, அதாவது ஒரு வித 'கட்', பற்றி அவர் பேச விரும்ப மாட்டார். அப்போது பவர் கட், அரிவாள் கட், என்பதை விட வேறு கட்டிங் ஜோராக நடந்தது என்பதைப் பற்றி.


பகுதி 137 // 22.09.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

 

No comments:

Post a Comment