Friday, 27 March 2026

கேள்வி-பதில் (27.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தூத்துக்குடியில் ஒரு மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, உடனே கொலை செய்யப்பட்டு, ஒரு புதருக்குப் பின்னால் கண்டெடுக்கப் பட்டார்.  அது பற்றிக் கருத்து சொன்ன நடிகர் எஸ். வி. சேகர், "அந்தப் பெண் ஏன் புதருக்குப் பின்னால் போகணும்? போலீஸ் புதருக்குள் லைட் போடமுடியுமா?" என்று கேட்டிருக்கிறாரே?

 

பதில்: முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நண்பர் என்று எஸ். வி. சேகர் அடிக்கடி சொல்பவர்.

 

தூத்துக்குடி கொடுமை பற்றிய எஸ்.வி.சேகரின் அபத்தக் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்க, அவர் ஒரு மன்னிப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் -  அது பெருந்தன்மை குறைவான, நழுவல் தொனியில் இருந்தாலும். ஆகையால் இனி அவரை விமர்சிப்பது அவசியமில்லை. ஆனால் ஒன்று கவனிக்கத் தக்கது.

 

நடந்த குற்றத்தில், போலீஸ் அராஜகத்தால் நிகழும் லாக்கப் மரணம் போன்ற போலீஸின் நேரடி ஈடுபாடோ நடவடிக்கையோ இல்லை. இருந்தாலும், தமிழக போலீசார் பொதுவாகச் சட்டம் ஒழுங்கைக் கறாராகப் பராமரிக்க முனையாமல், முடியாமல், மெத்தனமாக இருக்கின்றனர். இந்த நிலைக்குத் தலையாய பொறுப்பு, போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினைச் சாரும்.

 

ஸ்டாலின், அவருடைய அமைச்சர்கள், பிற திமுக தலைவர்கள், நிர்வாக விஷயங்களிலும் பிற விஷயங்களிலும் நேராக இல்லை, முறையாக நடந்து கொள்வதில்லை. இதனால் ஒரு அளவுக்கு மேல் ஸ்டாலின் போலீஸாரிடமிருந்து முழு அர்ப்பணிப்பையும் வேலைத் திறனையும் பெற முடியாது - அந்தத் திறன் அவர்களிடம் இருந்தாலும். இந்த ஒட்டுமொத்தப் பரிதாப நிலை, எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரு மறைமுக ஊக்க மருந்து. அது எந்தக் குற்ற எண்ணம் கொண்டவனை எப்போது, எந்த அளவுக்கு, தறிகெட்ட வில்லனாக்கும் என்று சொல்ல முடியாது.

 

அரசு நிர்வாகத்தில், பொதுமக்கள் பார்வையில், ஆள்பவர்கள் சரியாக, நேராக, கறாராகச் செயல்படாவிட்டால், குற்றங்கள் கட்டுப்படாது; அதுபோக, அவர்களின் தரத்துக்கு ஏற்ற நண்பர்கள்தான் அவர்களுக்கு வாய்ப்பார்கள்.

 

 

2. கேள்வி: திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கான தொகுதி எண்ணிக்கையைப் பேசி முடிப்பதற்காக, திமுக நிர்வாகிகளுடன் மதிமுக சார்பாக ஒரு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் விளைவாக எட்டப்பட்ட இறுதி முடிவு பற்றி மதிமுக குழுவினர் கருத்து சொல்லும்போது, "எங்கள் தகுதிக்கு ஏற்ற தொகுதிகள் கிடைக்கவில்லை. நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்" என்று கூறி இருக்கிறார்களே?

 

பதில்: இதில் அழுவது புலம்புவது தவிர, அதற்கு மேலான தகுதியை மதிமுக அடையவில்லை. மதிமுக தனது தகுதியை வளர்த்துக் கொள்ள, ஸ்டாலின் காலை வைகோ கெட்டியாகப் பிடித்து அழகு தமிழ் பேசுவது மட்டும் போதாது.

 

 

3. கேள்வி: திமுக அமைச்சர் சிவசங்கர், "பீஹாரில் நிதிஷ் குமாருக்கும், மஹாராஷ்டிராவில் சரத் பவாருக்கும் ஏற்பட்ட நிலைமை தான், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமிக்கு நேரிடும்" என்று சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: கொடிய கட்சியான பாஜக-வுடன் கூட்டணி வைத்தால், அதிமுக ஓரம் கட்டப்படும், சிறுமைப் படும் என்று சொல்ல வருகிறார் அமைச்சர் சிவசங்கர் - அவர் கூற்றின் மையக் கருத்து சரியோ இல்லையோ. ஆனால் கொடியது, ஏமாற்றப் படுவது, என்பதற்கு இரண்டு கட்சிகளை அவர் உதாரணம் காட்ட வரும்போது, அது தமிழக மக்களுக்குப் பளிச்சென்று புரியும்படி அமைச்சர் சொல்லி இருக்கலாம். அதாவது, "தமிழகத்தில் திமுக-வுடன் கூட்டணி வைத்ததால் மிதிக்கப்பட்டு நசுக்கப்பட்ட வைகோ-வின் பரிதாப நிலைதான் பழனிசாமிக்குப் பின்னர் ஏற்படும்" என்று சிவசங்கர் சொல்லியிருக்கலாம். அந்த உவமானத்திற்கு ஈடு இணை இல்லை.

 

 

4. கேள்வி: "அங்கீகாரம் இல்லாத தேமுதிக என்ற கட்சிக்கு, திமுக தனது கூட்டணியில் அதிகத் தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறது. இதுதான் திமுக" என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாரே?

 

பதில்: அதிமுக, தன் சார்பில் மக்களிடம் சொல்ல வேண்டியதை, தேர்தல் அறிக்கையில் பலமான இலவச அறிவிப்புகள் மூலமாகப் பழனிசாமி பேசி விட்டார். அதற்கு மேல், அடுத்த வீட்டில் எட்டிப் பார்த்தவாறு, பராக்குப் பார்த்தவாறு இப்படியான வேடிக்கைப் பேச்சுதான் சாத்தியம்.

 


5. கேள்வி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது கட்சிக்கான தேர்தல் அறிக்கையில்:

 

முதியோர், ஆதரவற்றோர், கைம்பெண்கள், ஆகியோருக்கு மாதாந்திர உதவித் தொகை 3,000 ரூபாய்;

 

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 3,000 ரூபாய்;

 

பத்திரிகையாளர்களுக்கு 20,000 ரூபாய் ஓய்வூதியம்;

 

என்றெல்லாம் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: திராவிட மாடல் தனிப்பெரும் மாடல் - நீர் அதன் தலைவர் - இந்நினைவு அகற்றாதீர்!


பகுதி 72 // 27.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment