இம்மாதம் ஐந்தாம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா
காலமானார். இந்திய அரசியல் வானில்  ஒரு ஒளிரும் நட்சத்திரம் மறைந்தது.
      இம்மாநில சட்டசபைத் தேர்தல்களில் நான்கு முறை அ.தி.மு.க-வை
வெல்ல வைத்தவர். கடந்த இரண்டு சட்டசபைத் தேர்தல்களைத் தொடர்ச்சியாக வென்று அரசு அமைத்தவர்.
 சென்ற 2016 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி ஏதும்
வைக்காமல் அ.தி.மு.க தனித்து – அதாவது ஜெயலலிதா தனி ஒருவராக – களம் இறங்கி தமிழக ஆட்சியைக்
கைப்பற்றி  சாதனை புரிந்தவர். 
      தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குப்
பிறகு ஜெயலலிதாவால் எப்படி இவ்வளவு அமோக மக்கள் செல்வாக்குப் பெற முடிந்தது? அதுவும்
அரசியல் வித்தகரான தி.மு.க-வின் கருணாநிதியை எதிரியாக வைத்துக் கொண்டு? 
          எம்.ஜி.ஆரே அ.தி.மு.க-வினுள்  ஜெயலலிதாவைப் பிராதனமாக முன் நிறுத்தி, கட்சிக்குள்
அவருக்குப் பெரும் ஏற்றத்தைத் தந்தார்.  எம்.ஜி.ஆர்
மறைந்தபின், ஜெயலலிதா அக்கட்சிக்குள் சில தந்திரசாலிகளை வென்று, எம்.ஜி.ஆரின் மனைவி
ஜானகியையும் போராடி வீழ்த்தி அ.தி.மு.க-வின் தலைமையைக் கைப்பற்றினார்.  இவை அனைவரும் அறிந்தவை. 
      அரசியலில் காலூன்ற, நீடித்து நிற்க, நெடிதான உயரங்களை எட்ட,
புத்தி கூர்மையும் உறுதி கொண்ட நெஞ்சும் போர்க்குணமும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு
ஜெயலலிதா ஒரு சமீபத்திய உதாரணம்.  இந்தத் திறன்கள்
அனைத்தும் ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்ட கருணாநிதிக்கும் குறைவில்லாமல் இருகின்றன.
அதோடு நாவன்மை, எழுத்தாற்றல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கு மற்றும் ராஜதந்திரம்
ஆகியவற்றில் கருணாநிதி மேம்பட்டவர்தான். இருந்தாலும் தமிழ்நாட்டில் அவரை விடவும் ஜெயலலிதா
அதிக மக்கள் செல்வாக்குப் பெற்றவராக விளங்கினார்.  இந்த நிலையை மாநிலத்தின் சென்ற இரண்டு சட்டசபைத்
தேர்தல் முடிவுகளும், 2014 பாராளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க-விற்குக் கிடைத்த வெற்றியும்
(39 தொகுதிகளில் 37 வெற்றி) பறை சாற்றின.  ஜெயலலிதாவின்
தனிப்பட்ட குணங்களை விடுத்து, அவரது செல்வாக்கின் வளர்ச்சியை மூன்று காரணங்களில் இப்படிப்
பார்க்கலாம்.
      எம்.ஜி.ஆரின் அபரிதமான மக்கள் செல்வாக்கைக் கூடிய வரை பார்சல்
செய்துவைத்துக் கொண்டவர் ஜெயலலிதா என்று சொல்லலாம்.  எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் நடித்தவர் அவர்.   அவைகளில் பெரும்பாலும் அவர் எம்.ஜி.ஆரை அடையக்
காத்திருக்கும் கதாநாயகியாகவும், தங்கமான எம்.ஜி.ஆர் அவருடன் ஒன்று சேரும் கதாநாயகனாகவும்
தோன்றினார்கள். வெகுஜனப் பெண்களில் மிகப் பலர் – குறிப்பாக, பாமரப் பெண்கள் - பரிசுத்தமான
கதாபாத்திரமான எம்.ஜி.ஆரிடம் மனம் ஒன்றினார்கள்.
 சாதாரணப் பெண்களிடம் இது இயற்கை.  சினிமாத் திரையில் எம்.ஜி.ஆரோடு வில்லனாக மோதிய
நம்பியார் மீது சாதாரண மக்கள் வெறுப்புக் கொண்டது எப்படி இயற்கையோ, அதே மாதிரித்தான்
இதுவும்.  அந்த எம்.ஜி.ஆரே சினிமாக் காட்சிகளில்
ஜெயலலிதாவோடு இணைகிறார் என்றால் அந்தப் பெண் ரசிகர்கள் பலர் ஜெயலலிதாவோடு தங்களை ஒன்றுபடுத்திப்
பார்ப்பதும் இயற்கைதான். 
      ஓரு டெலிவிஷன் பேட்டியில் ஜெயலலிதாவிடம் “நீங்கள் எம்.ஜி.ஆரை
விரும்பினீர்களா?” என்று கேட்டபோது அவர் சிரித்தவாறே “யார்தான் எம்.ஜி.ஆரை விரும்பமாட்டார்கள்?
அவர் மக்களை ஈர்க்கும் சக்தி உடைய (’கரிஸ்மாடிக்’) நபர்” என்று பொதுவாகச் சொன்னார்.
அது, எம்.ஜி.ஆர் மீது  மக்கள், குறிப்பாகப் பெண்கள், சினிமாவின் தாக்கத்தால் லயித்திருந்தார்கள் என்பதை உணர்த்தியதுமாகும். நம்பியாரை வெறுத்து,
எம்.ஜி.ஆரைப் போற்றிய அவரது எண்ணற்ற ஆண் ரசிகர்களும், திரையில் அவர் பலமுறை இணைந்த
ஜெயலலிதாவிடம் ஈர்ப்புக் கொண்டிருப்பார்கள். பிந்தைய நாட்களில் எம்.ஜி.ஆரே தனது அரசியல் கட்சியில் ஜெயலலிதாவைச் சேரவைத்து
முன் நிறுத்தி ஆதரித்ததால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அவரது மனைவி ஜானகியையும்
தாண்டி ஜெயலலிதாவையே சாதாரண மக்கள் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக அங்கீகரித்தார்கள்.  
      ஜெயலலிதாவைப் போல் விசேஷப் பின்னணி கொண்ட எவரும்
போட்டிக்கு வராததால் இந்திரா காந்திக்குப் பின் அவரது மகன் ராஜீவ் காந்தியும், ராஜீவின்
மரணத்திற்குப் பின் அவர் மனைவி சோனியா காந்தியும் அரசியலுக்குப் புதிது என்றாலும் சுலாபமாகத்
தலையெடுத்தார்கள்.  ஜானகிக்கு அது முடியாமல்
போனது. சினிமாவின் விளைவால் எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கை அறுவடை செய்த ஜெயலலிதாவுடன்
அவரது புத்திசாலித்தனம், நெஞ்சுறுதி, போர்க்குணம் ஆகியவையும் கைகோர்த்து நின்றதால்,  கருணாநிதியால் அவற்றை முழுவதும் வெல்லும் அளவிற்கு
ஈடுகொடுக்க முடியவில்லை. 
          இரண்டாவது காரணம். நிகருக்கு நிகராக புத்திசாலித்தனம்,
மன உறுதி  மற்றும் போர்க்குணம் கொண்ட இரு அரசியல்
எதிரிகளில் ஒருவர் பெண், ஒருவர் ஆண் என்று வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் சித்தாந்தம்,
அடிப்படைக் கொள்கைகள் ஆகியவற்றில் அவர்களுக்குள் வேறுபாடு இல்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.   அப்போது
பெண் வாக்காளர்களிடையே பெண் தலைவருக்குச் சற்றேனும் அதிகமான ஆதரவு கிடைக்கும் – குறிப்பாக
இந்தியாவைப் போன்ற வளரும் ஜனநாயகத்தில். பாதிக்குப் பாதியாவது பெண் வாக்காளர்கள் இருக்கும்போது,
ஐம்பது சதவிகித வாக்குகளில் பெண் தலைவர் அதிகம் பெற வாய்ப்பிருக்கிறது.  இதுபற்றி இன்னும் சொல்லலாம்.
      பொதுவாக ஒரு சமூகத்தில் ஆண்கள் பெண்களுக்கு சம அளவில் மரியாதை
- அதாவது மனதளவிலான சமத்துவ மரியாதை - காண்பிக்காமல் இருந்தால், பெண்களுக்கு
உள்ளளவில் ஆண்கள் மீதே மெலிதான மன வருத்தம் இருக்கும்.  சுதந்திரமான, ஆக்ரோஷமான பெண்கள் இதை வெளிப்படுத்தலாம்.
வெளிப்படுத்தாத பெண்களுக்கும் இந்த உணர்வு இருக்கும். இது ஆணாதிக்கத்தின் மறுபக்கம்.
ரகசிய வாக்கெடுப்பின் போதாவது கணிசமான பெண் வாக்காளர்கள், இரண்டு தகுந்த ஆண் மற்றும்
பெண் தலைவர்களில் பெண் தலைவரையும் அவரது கட்சியையும் ஆதரிப்பார்கள். அந்தப் பெண் தலைவர்
வாக்களிக்கச் சொல்வது அவர் கட்சியின் பிற ஆண் வேட்பாளர்களுக்கு என்றாலும், கடைசியில்
ஆட்சியை வெல்லப் போவது ஒரு தகுதியான பெண் தலைவர் என்பதால் அவரது கட்சிக்கு நிறையப்
பெண் வாக்காளர்களிடம் அதிக ஆதரவு கிடைக்கும். 
அதே சமயம், ஆண் வாக்காளர்கள் இந்த மாதிரியான பாகுபாட்டை ஓட்டில் காட்டுவதில்லை.
      தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆண்கள் பெண்களை சமமாகக்
கருதினாலும் இல்லையென்றாலும், அரசியல் தலைவர்களுக்கான ஆதரவை ’ஆண் தலைவர்கள் - பெண்
தலைவர்கள்’ என்ற அடிப்படையில் எக்காரணத்தாலும் பிரித்து அளிப்பதில்லை. இந்திரா காந்தி
அரசியலில் ஓங்கி இருந்தபோது பல ஆண்கள் தன் சுற்றத்துப் பெண்களை ஒருபடி கீழ் என்று நினைத்தாலும்,
பெண் தலைவரான இந்திரா காந்தியை ’ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்து ஆதரித்தார்கள் என்பது பலருக்கு
நினைவிருக்கும்.  அந்த மனப்பாங்கு ஆண்களிடையே
இன்றும் தொடர்கிறது. ஆகையால் ஆண் வாக்காளர்களின் ஓட்டுக்கள் நிகருக்கு நிகர் தகுதி
நிரம்பிய ஒரு பெண் அரசியல் தலைவருக்கு வராமல் போவதில்லை. இதனாலும் ஜெயலலிதா பலன் கண்டார்.
      மூன்றாவது காரணம். மக்களிடையே மத உணர்வுகள் மேலோங்கிய தேசம்
இந்தியா. 2011 மக்கள் தொகைக் கணக்குப்படி, நமது நாட்டில் சுமார் 80% இந்துக்கள்,
14% முஸ்ளிம்கள், 6% மற்ற மதத்தினர் வசிக்கிறார்கள்.  கருணாநிதி இந்துக்களை மட்டம் தட்டினார். மற்ற மதத்தினரின்
மத உணர்வுகளை மதித்தார், போற்றினார்.  தமிழ்நாட்டின்
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கருணாநிதி இந்துக்களை அவமதிக்கவேண்டும் என்று விரும்பவில்லை,
அதனால் மகிழவும் மாட்டார்கள். ஆனாலும், தான் அப்படிச் செய்வது முஸ்லிம்கள் மற்றும்
கிறிஸ்தவர்களின் பாதுகாப்பாளர் என்று உணரப்பட்டு தன் கட்சிக்கு அவர்களின் ஆதரவு கொத்தாகக்
கிடைக்கும் என்று கருணாநிதி நம்பியதாகவே தோற்றம் தெரிந்தது.
      மக்கள் தொகையில் 80% சதவிகிதத்தினரின் மத நம்பிக்கையை அங்கீகரிக்காதது,
இகழ்வது பெருவாரியான இந்துக்களுக்கு மனக்கசப்பைத் தரும் என்பது சாதாரணமாக எதிர்பார்க்கக்
கூடியதுதான்.  பொறுமைசாலிகளான இந்துக்கள் அதைப்
பெரிதுபடுத்தவில்லை. ஜெயலலிதா தன்னை ஒரு இந்து என்று வெளிப்படுத்துவதில் வெட்கப் படவில்லை.
பிற மதத்தினரையும் அரவணைத்துச் சென்றார். ஆக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரிடமிருந்து
அவருக்குக் கிடைக்க வேண்டிய ஆதரவு கிடைத்தது. 
அதே சமயத்தில், கணிசமான இந்துக்களும் கருணாநிதியின் பாரபட்ச மதப் பார்வையை எதிர்த்து
ஜெயலலிதாவை ஆதரிக்கலாம் என்று நினைத்தால் ஆச்சரியம் இல்லை.  சென்ற தமிழக சட்டசபைத் தேர்தலின்போது தி.மு.க தலைவர்
ஸ்டாலினே, “எங்கள் கட்சியின் 90% தொண்டர்கள் இந்துக்கள். என் மனைவியே மாநிலத்தின் பல
கோவில்களுக்குச் சென்றவர். நம்பிக்கை உள்ளவர்களின் குறுக்கே நாங்கள் நிற்பதில்லை” என்று
பேசியது ‘ஓட்டிழப்பை நிறுத்தவேண்டும்’ என்ற நினைப்பால்தான்.  பெறும்பான்மை மதத்தினராக இருந்தும் மத நிந்தனையை
மௌனமாக ஏற்கவேண்டாம் என்கிற எண்ணம் சமீப காலமாக நாடெங்கும் சற்று அதிகமான இந்துக்களிடம்
எழும்புகிறது. அரசியல் விமரிசகர்கள் பலர் இந்த எண்ணத்தையும் மனதில் வைத்திருந்து கருணாநிதியைவிட
ஜெயலலிதாவை அதிகம் வரவேற்றிருப்பார்கள். ஆக ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கு கூடியதற்கு
கருணாநிதியின் இந்து மதம் பற்றிய நிலைப்பாடும் ஒரு காரணம்.  
      இந்த மூன்று காரணங்களும் சிறிதும் பெரிதுமாக ஜெயலலிதாவின்
மக்கள் செல்வாக்கு மலையென வளர உதவின. இவற்றுக்கு
அடிப்படையாக அவரின் மேற்சொன்ன தனிமனிதச் சிறப்புகள் பேருதவியாக இருந்தன – அவை இல்லாதிருந்தால்
ஜெயலலிதா கருணாநிதியை எதிர்த்து அரசியலில் பெருவெற்றிகள் அடைந்திருக்க முடியாது. 
      இந்திரா காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, சோனியா காந்தி ஆகியோருடன்
ஜெயலலிதாவையும் ஒரு வகையில் சேர்த்துப் பார்க்கலாம்.  முன்னிருந்து அல்லது பின்னிருந்து ஆட்சி அமைத்த
இந்தப் பெண் அரசியல்வாதிகளுக்கு ஒரு குணம் பொதுவானது - வெளிப்படையான எதேச்சாதிகாரம். அதை அவரவர் பாணியில்
வெளிப்படுத்தினாலும், அவர்களின் கீழுள்ள கட்சித் தலைவர்கள் தங்களின் நலன்களுக்காகத்
தங்கள் தலைவிகள் மனம் குளிரும் அளவிற்கு வளைந்து கொடுத்தார்கள், கொடுக்கிறார்கள். அதிகமானவர்கள் சிறிதும் கூச்சப்படாமல் வளைந்தது
ஜெயலலிதாவுக்கு என்றால் மிகையல்ல.
      மகத்தான வெற்றிகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சியில் நன்னெறிகளைக்
கடைப்பிடித்து உதாரணம் காண்பித்தாரா? அவரும்
சரி, கருணாநிதியும் சரி, இதை மற்றவர் வேண்டுமானால் செய்துகாட்டட்டும் என்று விட்டுவிட்டார்கள்.  இது வருத்தத்திற்கு உரியது.
* * * * *
Copyright © R. Veera Raghavan 2016
 
No comments:
Post a Comment