|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், "மக்களுக்கு
வழங்குவதை இலவசம் எனக் கூறாதீர்கள். அது 'யுனிவர்சல் பேசிக் இன்கம்'. அனைவருக்கும்
அடிப்படை வருமானம் வேண்டும் என்றுதான் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள்
அமலில் உள்ளன" என்று தெரிவித்திருக்கிறாரே? பதில்: ஒருவருக்கு
உடம்பு சரியில்லை, சத்து மிகவும் குறைந்திருக்கிறது, ஒன்றிரண்டு நாட்கள் அவருக்கு ட்ரிப்ஸ் கொடுத்து
விரைவாக உடம்பைத் தேற்றலாம், பிறகு நோயாளி
வழக்கம் போல் உணவு சாப்பிடலாம் என்ற நோக்கில் ஒரு டாக்டர் ட்ரிப்ஸ் கொடுத்தால்
புரிந்துகொள்ளலாம். வருடக்கணக்கில் ஒருவருக்கு ட்ரிப்ஸ் கொடுக்க நினைக்கும் டாக்டரைப் பற்றி
ப. சிதம்பரம் இப்படிச் சொல்வாரா? "ஒரு நோயாளிக்கு யுனிவர்சல் பேசிக்
போஷாக்கு வேண்டும். அரசு செலவில் நடக்கும் அந்த ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர், நோயாளிகளுக்கான உரிமை ட்ரிப்ஸ் திட்டத்தை அமல்
செய்திருக்கிறார். அது பல வருடங்கள் நடக்கும். அதை வெறும் இலவசம் என்று
சொல்லாதீர்கள்." |
|
2. கேள்வி: மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி
கொல்கட்டாவில் பேசிய திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, "மேற்கு வங்க
சட்டசபைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்தபின் டெல்லியைக் கைப்பற்றுவேன்"
என்று கூறி இருக்கிறாரே? பதில்: ஒருமுறை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், அவர் நாட்டின் பிரதமர் ஆவாரா எனக்
கேட்டபோது, "என் உயரம் எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார். அதில் ஒரு
நேர்மை இருந்தது. "நான் டெல்லியைக் கைப்பற்றுவேன்" என்று பேசும் மம்தா
பானர்ஜியிடமும் அதே நேர்மை இருக்கிறது - தனக்கு ஒரு பைத்தியக்கார ஆசை
இருந்தாலும், அதைச் சொன்னால் தனது பைத்தியக்காரத்தனம் வெளிப்பட்டாலும் பரவாயில்லை என்ற
நேர்மை. |
|
3. கேள்வி: "சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல்
களம் மாறும்" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
சொல்லியிருக்கிறாரே? பதில்: 'தேர்தல் முடிவுகள் வந்தபின் சில அரசியல்
தலைவர்கள் அணி மாறலாம்' என்று அவர் சொல்வதாக அர்த்தம். அந்தத்
தலைவர்களில் அவரும் ஒருவரா என்பதை அவர் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
பின்னர் நிலைமைக்கு ஏற்றபடி, "நான்
அப்பொழுதே சொன்னேன்" அல்லது "நான் என்னைக் குறிப்பிடவில்லை. கள
யதார்த்தத்தைச் சொன்னேன்" என்று அவர் அறிக்கை விட சவுகரியமான பேச்சு இது. |
|
4. கேள்வி: சட்டசபைத் தேர்தலில் ஓட்டுப் பதிவு முடிந்து வாக்கு
எண்ணிக்கை தொடங்கப்படாத நிலையில் அறிக்கை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து, "மண், மொழி, மானம் காக்க, மீண்டும்
திமுக-தான் ஆட்சிக்கு வரும்" என்று கூறி இருக்கிறாரே? பதில்: 'வைரமுத்துவின் முக்கியத்துவம் காக்க, திமுக ஆட்சிக்கு வரவேண்டும்' என்ற தனது ஆசையை அவர் நேரடியாகச்
சொல்லமுடியுமா? |
|
5. கேள்வி: நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு
வராவிட்டால் அக்கட்சி என்ன மனநிலையில் இருக்கும்? பதில்: சாப்ட்வேர் தொழிலில், சிலருக்கு வேலை போய்ச் சம்பாத்தியம் போய்விடும்.
அப்போது அடுத்த வேலை கிடைக்கக் காத்திருந்து, மீண்டும்
நன்றாகச் சம்பாதிக்கத் திட்டமிட்டு செயல்படுவார்கள். அரசியலிலும் தேர்தல்
தோல்விக்குப் பின் மனம் தளராமல் அடுத்த வெற்றியையும், வெற்றியின் பலன்களையும், எதிர்நோக்கிச் செயல்படும் கட்சிகள் உண்டு. திமுக இதில்
கிங். அதிமுக-வும் சளைத்ததல்ல. |
|
பகுதி 84//26.04.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment