|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "அதிமுக-வை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும், அதை எடப்பாடி
பழனிசாமி உணரவில்லை" என்று சொல்லி, திமுக தலைவர் ஸ்டாலின்
அதிமுக-வை அவ்வப்போது எச்சரிக்கிறார். இந்த எச்சரிக்கையில் சாரம் இருக்கிறதா? பதில்: 'தமிழகத்தில் அதிமுக-வுக்கு இணையாக, அதையும் தாண்டி, பாஜக
மக்கள் மத்தியில் வளர்வது சாத்தியம்' என்று
ஸ்டாலின் சொல்ல வந்தால், அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால்
ஸ்டாலினின் கவலையும் உள்ளர்த்தமும் வேறு. திமுக-வுக்கு, தனது முக்கிய எதிரியாக அதிமுக-வை
சமாளிப்பது எளிது, ஆனால் வளர்ந்து எழுந்த பாஜக-வை
சமாளிப்பது கடினம். காரணங்கள் இரண்டு: ஒன்று, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இல்லாத அதிமுக-வும், கருணாநிதி இல்லாத திமுக-வும் தங்களுக்குள் ஜென்ம
எதிரிகள் என்பதை விட, அரசாங்கத்தின் பலன்களுக்கு ஆசைப்படும்
போட்டிக் கட்சிகளாக மட்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில், அதிமுக-விலிருந்து பல தலைவர்கள் திமுக-வுக்குத் தாவி
அதிமுக-வை நலிவுறச் செய்யலாம்; ஆனால்
பாஜக-விலிருந்து முக்கியத் தலைவர்கள் திமுக-வுக்குச் செல்ல மாட்டார்கள், அந்த வகையில் பாஜக நலிவுறாது; இரண்டு, அகில இந்திய அளவில் மிகப் பெரிய
கட்சியான பாஜக, காத்திருந்து காத்திருந்து தமிழகத்தில்
தனது செல்வாக்கை அதிகரிக்கும், ஹிந்து
உணர்வுகளை ஒருங்கிணைத்து ஈர்க்கும், எதிர்காலத்தில்
அந்தக் கட்சி அதிமுக-வை விடவும் பெரிதாக வளரலாம். அதன் விளைவாக, பாஜக தமிழகத்தில் திமுக-வின் பிரதான எதிரியாக
உருவாகலாம், இறுதியில் பாஜக-வினால் திமுக
நலிவடையலாம் - இப்படியான அச்சம் ஸ்டாலினுக்கு இருக்கும். பாஜக-வின் மீதான இந்த அச்சத்தை நேரடியாக வெளிப்படுத்தாமல், பாஜக அதிமுக-வை விழுங்கிவிடும் என்று அதிமுக-வின்
வலிமைக்கும் வளர்ச்சிக்கும் அக்கறை காட்டுகிற மாதிரிப் பேசுகிறார் ஸ்டாலின்.
அவர் தன் அச்சத்தை மறைக்கப் பார்க்கலாம், ஆனால்
களைய முடியாது. |
|
2. கேள்வி: "நீ எனக்கு ஓட்டுப் போட்டா போடு. இல்லைன்னா போ.
உடம்புல தெம்பு இருக்கற வரை இதே இடத்துல நின்னு கத்திக் கத்தி செத்துக்கூட
போவேன். ஆனா சீட்டுக்கும் நோட்டுக்கும் யார் கிட்டயும் கை கட்ட மாட்டேன்"
என்று தனது தேர்தல் பிரசாரத்தின் போது நா.த.க தலைவர் சீமான் பேசி
இருக்கிறாரே" பதில்: பொதுவாழ்வில் வாயால் வளர்ந்தவர்கள் உண்டு, வளரவே முடியாமல் வாயால் கெட்டவர்கள் உண்டு.
வாயால் மட்டும் ஓரளவு வளர்ந்து, பிறகு வாயால் கெட்டவர் சீமான். |
|
3. கேள்வி: "தமிழக காங்கிரஸை ஸ்டாலின் சார் தன் பைக்குள்
போட்டுக்கொண்டு விட்டார். ஆனால் உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் உள்ளது"
என்று விஜய் பேசி இருக்கிறாரே? பதில்: காங்கிரஸ்
கட்சி பற்றி விஜய் குழப்பத்துடன் பேசுகிறார். தற்காலத்தில் காங்கிரஸ் இருக்கிறது, உண்மையான காங்கிரஸ் இல்லை. |
|
4. கேள்வி: தமிழக அரசியல் சூழ்நிலையில், "இளைஞர்கள் பலர்
நடிகர்களின் பின்னால் செல்கிறார்களே?" என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதில் சொன்ன
ரஜினிகாந்த், "படிக்கிற வயதில், இளைஞர்கள்
முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டால், அவர்கள்
வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறி
இருக்கிறார். வேறு எந்த நடிகராவது இப்படிச் சொல்வாரா? பதில்: தமிழகத்தில் சினிமாவின் சக்தி, குறிப்பாக நடிகர்களின் ஈர்ப்பு, பல இளைஞர்களைத் தொடர்ந்து திசை
திருப்புகிறது, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. இது வருத்தமான விஷயம். இந்த
நிலையில், தன் பின்னால் வந்த, வருகிற, இளைஞர்களுக்கும் சேர்த்துதான் ரஜினிகாந்தின் சொற்கள் பொருந்தும். ரஜினிகாந்த் கூறியது சாதாரண உண்மையாகத்
தோன்றலாம், ஆனால் ஒரு பிரபல நடிகராக இதைச் சொல்ல நேர்மையும், நல்லெண்ணமும் பெருந்தன்மையும் வேண்டும்.
இது பெரிய விஷயம். |
|
5. கேள்வி: திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக
தலைவர் ஸ்டாலின், "திருவண்ணாமலையிலிருந்து
தீபத்தை மட்டுமல்ல, திமுக-வையும்
பிரிக்க முடியாது" என்று பேசி இருக்கிறாரே? பதில்: இது
ஸ்டாலினின் திராவிட மாடல் பகுத்தறிவு. பெரியார் பொன்மொழி பாணியில் இதற்கான
விளக்கம்: தீபத்தைக் கற்பித்தவன் அறிவாளி! தீபத்தை வணங்குபவன் நவநாகரிக மனிதன்! தீபத்தைப் பரப்புகிறவன் யோக்கிய சிகாமணி! |
|
பகுதி 78// 09.04.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment