Sunday 11 August 2024

“பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்” - காங்கிரஸ் தலைவர் பிதற்றல்


          -- ஆர். வி. ஆர்

 

சல்மான் குர்ஷித் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மூத்த வழக்கறிஞர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சில சட்டங்கள் பயின்றவர். இது போக, அவர் காங்கிரஸ் கட்சியில் ஒரு இரண்டாம் கட்டத் தலைவர். ஆகையால் நாட்டு விஷயங்கள் பற்றி அவர் வெட்கம் விவஸ்தை இல்லாமல் பேசத் தயாரானவர்.

 

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சல்மான் குர்ஷித், “பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும்  நடக்கலாம்” என்று தைரியமாகப் பிதற்றி வைத்தார்.  

 

அந்த நாட்டில்  என்ன நடந்தது?

 

பங்களாதேஷின் அரசுப் பணிகளில் 56% இட ஒதுக்கீடு இருந்தது. 1971-ம் வருட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழிவந்தவர்களுக்கான 30% இட ஒதுக்கீடும் மகளிருக்கான 10% இட ஒதுக்கீடும் அதில் அடங்கும்.  

 

வேலையின்மை அதிகம் உள்ள பங்களாதேஷில், அந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் திரண்டனர். அந்த அழுத்தத்தில், 2018-ம் வருடம் பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷ் சிவில் பணிகளுக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்தார். அது தொடர்பாக அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஆனால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை உயர்  நீதிமன்றம் ஏற்கவில்லை.  

 

ஜுன் 2024-ல் பங்களாதேஷின் உயர் நீதிமன்றம், இட ஒதுக்கீடு ரத்தானது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பால் பங்களாதேஷ் சிவில் பணிகளில் முன்பு இருந்த 56% இட ஒதுக்கீடு உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் சட்டமாகியது. இதைத் தொடர்ந்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் அந்த நாட்டில் வலுத்தது.

 

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பங்களாதேஷ் அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. எகிறும் மக்கள் போராட்டத்தையும் கவனித்த உச்ச நீதிமன்றம், மொத்த இட ஒதுக்கீட்டை 56 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்தது. இருந்தாலும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. உயிரிழப்புகள் அதிகமாயின.  

 

ஆகஸ்டு 5-ம் தேதி போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை முற்றுகையிட நெருங்கினார்கள். பாதுகாப்பற்ற ஷேக் ஹசீனா அன்றே வீட்டை விட்டு வெளியேறி ஒரு ராணுவ விமானத்தில் இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.  மறுநாள் ஆகஸ்டு 6-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது உளறலை வெளிப்படுத்தினார்.  

 

“பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்” என்று எந்த அர்த்தத்தில் சல்மான் குர்ஷித் பேசினார்?

 

‘இட ஒதுக்கீட்டை எதிர்த்து பங்களாதேஷில் போராட்டம் நடந்ததே, அது போல் நமது நாட்டிலும் நடக்கலாம். ஆகையால் இந்தியா தனது நாட்டின் அரசுப் பணிகளிலும் கல்விச் சேர்க்கைகளிலும் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும்’ என்று சொல்ல வந்தாரா சல்மான் குர்ஷித்? அல்லது, ‘பக்கத்து நாட்டில் நடந்த மாதிரி இந்தியாவிலும் ஏதோ காரணத்திற்காக இப்போதுள்ள மத்திய அரசை எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள் ஏற்படலாம்’ என்று அற்பமாகச் சொல்ல ஆசைப் பட்டாரா?

 

இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘பிரதமர் ஷேக் ஹசீனா எப்படி பங்களாதேஷை விட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறினாரோ, அதே போல் பிரதமர் மோடியும் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓடி ஒளியும் நாள் வரும்’ என்று ஒரு கீழ்த்தர எண்ணத்தை வெளிப்படுத்தினாரா சல்மான் குர்ஷித்?

 

சல்மான் குர்ஷித், அனுபவம் நிறைந்த ஒரு வக்கீல். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். வயது 71. ‘பங்களாதேஷில் நடப்பது மாதிரி இந்தியாவில் நடக்கலாம்’ என்று, நேர்மையும் விவஸ்தையும் உள்ள எவருமே சீரியஸாக நினைக்க மாட்டார்களே – அதுவும் இப்போதைய பாஜக ஆட்சியின் போது? ஆனாலும் ஏன் சல்மான் குர்ஷித் போன்ற ஒருவர் இப்படி மலிவாகப் பேசினார்?  காரணம் இருக்கிறது.

 

‘சேராத இடம் தனிலே சேர வேண்டாம்’ என்று நமக்குச் சொல்கிறது உலக நீதி. இதைக் காற்றில் பறக்கவிட்டவர் சல்மான் குர்ஷித். அதுதான் அவர் பேச்சுக்கான காரணம்.

 

பதவிப் பித்து மற்றும் பிள்ளைப் பாசம் மிகுந்த சோனியா காந்தி, பித்துக்குளி ராகுல் காந்தி ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட காங்கிரஸ்காரர்கள், அந்த இருவரையும் அண்டியே கட்சிப் பதவிகளுக்கு ஆசைப்படுகிறவர்கள், காங்கிரஸ் சார்பில் சட்டசபை அல்லது பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புகளுக்கு ஏங்குபவர்கள், அந்த இரு தலைவர்களை மகிழ்விக்கும் பேச்சை அவ்வப்போது பேசியாக வேண்டும். சுயலாபத்திற்காக இதை நன்கு உணர்ந்தவர் சல்மான் குர்ஷித்.

 

தான் பிதற்றுவது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை குஷிப்படுத்தும் என்ற உள்ளுணர்வில் சல்மான் குர்ஷித் ஏதோ டக்கென்று பேசிவிட்டார்.  அவர் நினைத்தபடி அந்த இரு தலைவர்களும் ‘சபாஷ் சல்மான்’ என்று அவரை மனதுக்குள் பாராட்டி இருப்பார்கள். அந்த வகையில் சல்மான் தனக்காக ஆசைப்பட்டது நடந்திருக்கிறது.

 

2024 லோக் சபா தேர்தலில், மக்கள் ‘இண்டி’ கூட்டணியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி பாஜக-வை எதிர்க் கட்சியாக வைத்திருந்தால் – அதாவது, தற்போது ராகுல் காந்தி பிரதமராக அல்லது இண்டி கூட்டணியில் முக்கிய அமைச்சராக இருந்தால் – சல்மான் குர்ஷித் இப்படி உளறுவாரா? மாட்டார். ஆட்சி மாறிய அந்த நிலையில், தனக்கு வருகிற பதவியை அனுபவித்துக் கொண்டு சமர்த்தாக இருப்பார் சல்மான் குர்ஷித்.

 

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சல்மான் குர்ஷித் இந்தியாவின் பெயரையும் உச்சரித்தாரே தவிர, இப்போதைய காங்கிரஸ் தலைவரான அவர் தேசத்தைப் பற்றி எல்லாம் எதற்கு வெட்டியாக நினைத்திருக்க வேண்டும்? அப்படித்தானே இருக்கிறது இன்றைய காங்கிரஸ் கட்சியின் மானம் கெட்ட நிலை?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 

 

3 comments:

  1. Kurshid is a shameless traitor

    ReplyDelete
  2. Very mischievous comment. He should have expressed knowingly that by creating ruckus and chaos he and his Leaders trying to dislodge an Elected Government. They are now prepared to go any low level.

    ReplyDelete