Tuesday 27 August 2024

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ராகுல் காந்தியின் கவலை - “ஒரு தலித் பெண் மிஸ் இந்தியா ஆகவில்லையே!”

 

          -- ஆர். வி. ஆர்

 

பிரயாக்ராஜ் நகரத்துல இப்ப காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிருக்கார். அவர் என்ன பேசினார் தெரிமா? சொல்றேன், சிரிக்காம கேளுங்கோ:

 

“இதுவரை  மிஸ் இந்தியா பட்டம் நிறைய பேருக்கு கிடைச்சதே, அதுல தலித், பழங்குடிகள், ஓபிசி மனுஷா அப்படின்னு எந்தப் பொண்ணுக்காவது கிடைச்சதான்னு தேடிப் பாத்தேன். அந்தப் பட்டம்  அந்த மாதிரிப் பொண்ணுக்குக் கிடைக்கவே இல்லை.”  

 

இப்பிடி அச்சுப்பிச்சு மாதிரி பேசற தலைவர்கள்ள ராகுல் காந்திக்குத்தான் முதல் பிரைஸ் குடுக்கணும். அவர் ஏன் அச்சுப்பிச்சுன்னு சுருக்கமா சொல்லட்டா?

 

விவரம் தெரியாதவான்னு சில மனுஷா இருக்கா.  தனக்கு விவரம் தெரியாதுன்னு அவாளுக்கே ஓரளவு புரிஞ்சிருக்கும். அதுனால, தனக்குத் தெரியாத விஷயத்தைப் பத்தி அவா முந்திண்டு வாயைத் திறக்க மாட்டா. கம்முனு இருப்பா.  

 

அச்சுபிச்சுன்னு சில மனுஷா இருக்கா. அவா மக்கா இருப்பா. இருந்தாலும், தான் ஒரு மக்குன்னு அவாளுக்குப் புரியாது. தான் பெரிய பிரகஸ்பதின்னு நினைச்சுண்டு, அவா பாட்டுக்குத் தத்துப் பித்துன்னு பேசிண்டிருப்பா. ராகுல் காந்தி அச்சுப்பிச்சு ரகம்னு அவர் பேச்சுலயே காட்டிக்கறார் இல்லையா?

 

நம்ம நாடு வசதிப் பட்ட நாடு இல்லை. நிறைய மனுஷா ஏழ்மைல, குறைஞ்ச வருமானத்துல ஜீவனம் பண்றா. நல்ல கல்வி பரவலா கிடைக்கறது இல்லை. வேலை வாய்ப்பும் இளைஞர்களுக்கு அதிகம் வேண்டிருக்கு. பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் வளர்ச்சி, இதுலெல்லாம் நம்ம நிறைய முன்னேறணும்.  இதான் நாட்டு நிலைமை.

 

இப்பிடியான தேசத்துல, ‘நான் மிஸ் இந்தியாவா வரலயே’ன்னு எந்த யவதி ஏங்கிண்டிருப்பா? 18-லேருந்து 22 வயசான எந்தப் பொண்ணோட அம்மா-அப்பா தன் பொண்ணுக்காக வெட்டியா ‘மிஸ் இந்தியா’ கனவெல்லாம் வெச்சுப்பா? மேலை நாடுகள்ள கூட, அழகிப் போட்டிக்குன்னு ஏத்த சில பொண்கள்தான் அழகிப் பட்டத்துக்கு ஆசைப்படும். மத்தவா அவா வேலையைப் பாத்துண்டு போவா. ஏதாவது புரியறதா ராகுல் காந்திக்கு?

 

ராகுல் காந்தி குடும்பத்துல இருக்கற பொண்களை அவரே வேணும்னாலும் கேட்டுத் தெரிஞ்சிக்கட்டும். “நீங்கள்ளாம் சின்ன வயசா இருந்தப்போ அழகிப் போட்டி கிரீடம் வேணும்னு ஆசைப் பட்டேளா?” அப்பிடின்னு.  இதைக் கேட்டார்னா அவர் வாயிலயே அவா பளீர்னு போடுவா. 54 வயசாகியும் ஒரு மனுஷன் இதைக் கூட புரிஞ்சுக்காம மேடைல பேசினார்னா, அவர் சரியான அச்சுப்பிச்சுதான். 

 

ராகுல் காந்தியோட அரசியல் சிந்தனையே கோணல், கொனஷ்டை. என்னன்னா, வாழ்க்கை வசதிகள் குறைவா இருக்கற இந்தியர்கள், ஜீவனத்துக்கே அல்லாடற இந்தியர்கள், கொஞ்சம் அப்பாவிகள்தான். அந்த மக்களுக்கு நல்லது பண்ணி, நிறையக் காரியம் பண்ணி, தேர்தல்ல அவா ஓட்டை வாங்கறதை விட, ஏமாத்துப் பேச்சுப் பேசி அவா ஓட்டை வாங்கறது கோல்மால் அரசியல்வாதிகளுக்கு ஈஸி. அதை ராகுல் காந்தி பண்ணப் பாக்கறார். அதான் விஷயம்.

 

இந்திய ஜனத்தொகைல தலித்துகள், பழங்குடிகள், ஓபிசி, எல்லாருமா கிட்டத்தட்ட அறுபது எழுபது சதவிகிதம் இருப்பா அப்பிடின்னு தகவல் வருது. இத்தனை பேரோட ஓட்டையும் ஒரு நிமிஷப் பேச்சுல பிடிச்சுப் பாக்கெட்ல வைச்சுக்கலாம்னு ராகுல் காந்தி நினைச்சிருக்கணும். அதான் அவர் உதவாக்கறைப் பேச்சுக்குக் காரணம்.

 

மிஸ் இந்தியா அழகிப் போட்டின்னா, அதுல முதல் பிரைஸ் ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். அந்தப் போட்டியும் தனியார் நடத்தறது, அது அரசாங்கம் நடத்தறது இல்லை.   அறுபது எழுபது சதவிகித ஜனங்கள் எல்லாருக்கும்,  அதுல உள்ள எல்லா யுவதிகளுக்கும், நல்ல பாதுகாப்பு, நல்ல கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம், நல்ல சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், நல்ல வருமானம், இதெல்லாம் முக்கியமா, இல்லை அந்த மக்கள்ள ஒரே ஒரு பொண்ணு மிஸ் இந்தியாவா வர்றது முக்கியமா?

 

“தலித், பழங்குடி, ஓபிசி ஜனங்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, கல்வி, வாழ்க்கை வசதிகள் இன்னும் பெரிசா கிடைக்கலை. இது அக்கிரமம், அநியாயம்” அப்படின்னு ராகுல் காந்தி பேசி இருந்தார்னா, அதுல சத்து இருக்கும். அவர் அப்படிப் பேசினா,  ‘இது வரை 50 வருஷத்துக்கு மேல மத்திய அரசாங்கம் நடத்தின காங்கிரஸ் கட்சி என்ன பண்ணினது’ன்னு கேள்வி வருமே? அதுக்கு அந்தக் கட்சி பதில் சொல்ல முடியாதே? அதுனால, தனியார் நடத்தற மிஸ் இந்தியா போட்டில தலித், பழங்குடிகள், ஓபிசி பொண்கள் யாருக்கும் கிரீடம் கிடைக்கலைன்னு ஏதோ பெனாத்தறார் ராகுல் காந்தி.

 

இன்னொண்ணு. அழகிப் போட்டிக்குப் பொண்களை யார் ஆசைப்பட வைப்பா? அழகு சாதனங்கள் விக்கற நிறுவனங்கள் அவா வியாபாரத்துக்கு அதைச் செய்யும்.  ஒரு நாட்டுக்கு, அதுவும் வசதி குறைஞ்ச ஒரு நாட்டுக்கு, பிரதமரா வர ஆசைப்படற ஒரு அரசியல் தலைவர் அதைச் செய்யலாமா? ஒரு அச்சுப்பிச்சுக்கு இதுவும் புரியாது.


ராகுல் காந்தியைப் பத்தி பொதுவா ஒரு விஷயம் சொல்றேன். அவர் சாதாரண அச்சுப்பிச்சு இல்லை. அபாயகரமான அச்சுப்பிச்சு. அது தனி சமாச்சாரம்.

 

ராகுல் காந்தி திருந்தவே மாட்டார். ஆனா நம்ம சாதாரண ஜனங்கள், இந்த அளவு பைத்தியக்கார ஏமாத்துப் பேச்சுக்கு பலியாகாம உஷாரா இருப்பான்னு நினைக்கறேன். நீங்களும் அப்படித்தான நினைப்பேள்?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Wednesday 21 August 2024

மதுரை

                 -- ஆர். வி. ஆர்

 

மதுரை

(பாடல்) 


 

மதுரைன்னா மதுரை


மதுரைன்னா மதுரை – தாய்

மீனாட்சி மதுரை
மதுரைன்னா வீர ராணி
மங்கம்மா மதுரை


 

பாண்டி தேச மதுரை – தமிழ்
ஆண்ட பூமி மதுரை

தமிழ் ஆண்ட பூமி மதுரை


 

ஆடி வீதி சித்திரை வீதி
மாசி வீதி அடுத்து
ஆவணிமூல வீதி – வெளி
வீதின்னு இருக்கு

உள்ள நூறு சந்து
வெள்ளை மனசுக்காரவுக
விபூதியும் குங்குமமும்
நெத்தி நெறஞ்ச ஊரு

மதுரைன்னா மதுரை ……


 

வண்டியூரு தெப்பக்குளம்
நாயக்கர் கட்டின மஹாலு
புதுமண்டபம் விளக்குத் தூணு
பாத்தீகளா நீங்க

பாச நேசம் கூட்டி
மரியாதை கலந்த
மதுரைத் தமிழ்
கேட்டீகளா நீங்க

மதுரைன்னா மதுரை ……


 

சிவனே திருவிளையாடல்
நடத்த வந்த ஊரு
கள்ளழகர் பெருமாளும்
வந்து போற ஊரு

திருப்பரங்குன்ற முருகசாமி
தெக்கே இருக்கும் ஊரு
காந்தி மகான் உடையக் குறைச்சு
ஒசந்து நின்ன ஊரு


ஒசந்து நின்ன ஊரு

மதுரைன்னா மதுரை ……


 

மீனாட்சிக்கு கல்யாணம்னா
தாலி மாத்துற ஊரு
பரவசமாத் தெரண்டு வந்து
தேரிழுக்கற ஊரு

ஊருபூராக் கோயில் – எங்க
உலகமே இந்தூருதான்
எம்புட்டு சென்மம் எடுத்தாலும்
மதுரையில வாழணும்

மதுரைன்னா மதுரை ……

 

பாண்டி தேச மதுரை – தமிழ்
ஆண்ட பூமி மதுரை

 

மதுரை …… மதுரை …… மதுரை 

 

* * * * *


 


Sunday 11 August 2024

“பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்” - காங்கிரஸ் தலைவர் பிதற்றல்


          -- ஆர். வி. ஆர்

 

சல்மான் குர்ஷித் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மூத்த வழக்கறிஞர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சில சட்டங்கள் பயின்றவர். இது போக, அவர் காங்கிரஸ் கட்சியில் ஒரு இரண்டாம் கட்டத் தலைவர். ஆகையால் நாட்டு விஷயங்கள் பற்றி அவர் வெட்கம் விவஸ்தை இல்லாமல் பேசத் தயாரானவர்.

 

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சல்மான் குர்ஷித், “பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும்  நடக்கலாம்” என்று தைரியமாகப் பிதற்றி வைத்தார்.  

 

அந்த நாட்டில்  என்ன நடந்தது?

 

பங்களாதேஷின் அரசுப் பணிகளில் 56% இட ஒதுக்கீடு இருந்தது. 1971-ம் வருட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழிவந்தவர்களுக்கான 30% இட ஒதுக்கீடும் மகளிருக்கான 10% இட ஒதுக்கீடும் அதில் அடங்கும்.  

 

வேலையின்மை அதிகம் உள்ள பங்களாதேஷில், அந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் திரண்டனர். அந்த அழுத்தத்தில், 2018-ம் வருடம் பிரதமர் ஷேக் ஹசீனா பங்களாதேஷ் சிவில் பணிகளுக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்தார். அது தொடர்பாக அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஆனால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை உயர்  நீதிமன்றம் ஏற்கவில்லை.  

 

ஜுன் 2024-ல் பங்களாதேஷின் உயர் நீதிமன்றம், இட ஒதுக்கீடு ரத்தானது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பால் பங்களாதேஷ் சிவில் பணிகளில் முன்பு இருந்த 56% இட ஒதுக்கீடு உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் சட்டமாகியது. இதைத் தொடர்ந்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் அந்த நாட்டில் வலுத்தது.

 

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பங்களாதேஷ் அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. எகிறும் மக்கள் போராட்டத்தையும் கவனித்த உச்ச நீதிமன்றம், மொத்த இட ஒதுக்கீட்டை 56 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்தது. இருந்தாலும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை. உயிரிழப்புகள் அதிகமாயின.  

 

ஆகஸ்டு 5-ம் தேதி போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை முற்றுகையிட நெருங்கினார்கள். பாதுகாப்பற்ற ஷேக் ஹசீனா அன்றே வீட்டை விட்டு வெளியேறி ஒரு ராணுவ விமானத்தில் இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.  மறுநாள் ஆகஸ்டு 6-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது உளறலை வெளிப்படுத்தினார்.  

 

“பங்களாதேஷில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்” என்று எந்த அர்த்தத்தில் சல்மான் குர்ஷித் பேசினார்?

 

‘இட ஒதுக்கீட்டை எதிர்த்து பங்களாதேஷில் போராட்டம் நடந்ததே, அது போல் நமது நாட்டிலும் நடக்கலாம். ஆகையால் இந்தியா தனது நாட்டின் அரசுப் பணிகளிலும் கல்விச் சேர்க்கைகளிலும் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்யவேண்டும்’ என்று சொல்ல வந்தாரா சல்மான் குர்ஷித்? அல்லது, ‘பக்கத்து நாட்டில் நடந்த மாதிரி இந்தியாவிலும் ஏதோ காரணத்திற்காக இப்போதுள்ள மத்திய அரசை எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள் ஏற்படலாம்’ என்று அற்பமாகச் சொல்ல ஆசைப் பட்டாரா?

 

இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘பிரதமர் ஷேக் ஹசீனா எப்படி பங்களாதேஷை விட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறினாரோ, அதே போல் பிரதமர் மோடியும் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓடி ஒளியும் நாள் வரும்’ என்று ஒரு கீழ்த்தர எண்ணத்தை வெளிப்படுத்தினாரா சல்மான் குர்ஷித்?

 

சல்மான் குர்ஷித், அனுபவம் நிறைந்த ஒரு வக்கீல். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். வயது 71. ‘பங்களாதேஷில் நடப்பது மாதிரி இந்தியாவில் நடக்கலாம்’ என்று, நேர்மையும் விவஸ்தையும் உள்ள எவருமே சீரியஸாக நினைக்க மாட்டார்களே – அதுவும் இப்போதைய பாஜக ஆட்சியின் போது? ஆனாலும் ஏன் சல்மான் குர்ஷித் போன்ற ஒருவர் இப்படி மலிவாகப் பேசினார்?  காரணம் இருக்கிறது.

 

‘சேராத இடம் தனிலே சேர வேண்டாம்’ என்று நமக்குச் சொல்கிறது உலக நீதி. இதைக் காற்றில் பறக்கவிட்டவர் சல்மான் குர்ஷித். அதுதான் அவர் பேச்சுக்கான காரணம்.

 

பதவிப் பித்து மற்றும் பிள்ளைப் பாசம் மிகுந்த சோனியா காந்தி, பித்துக்குளி ராகுல் காந்தி ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட காங்கிரஸ்காரர்கள், அந்த இருவரையும் அண்டியே கட்சிப் பதவிகளுக்கு ஆசைப்படுகிறவர்கள், காங்கிரஸ் சார்பில் சட்டசபை அல்லது பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புகளுக்கு ஏங்குபவர்கள், அந்த இரு தலைவர்களை மகிழ்விக்கும் பேச்சை அவ்வப்போது பேசியாக வேண்டும். சுயலாபத்திற்காக இதை நன்கு உணர்ந்தவர் சல்மான் குர்ஷித்.

 

தான் பிதற்றுவது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை குஷிப்படுத்தும் என்ற உள்ளுணர்வில் சல்மான் குர்ஷித் ஏதோ டக்கென்று பேசிவிட்டார்.  அவர் நினைத்தபடி அந்த இரு தலைவர்களும் ‘சபாஷ் சல்மான்’ என்று அவரை மனதுக்குள் பாராட்டி இருப்பார்கள். அந்த வகையில் சல்மான் தனக்காக ஆசைப்பட்டது நடந்திருக்கிறது.

 

2024 லோக் சபா தேர்தலில், மக்கள் ‘இண்டி’ கூட்டணியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி பாஜக-வை எதிர்க் கட்சியாக வைத்திருந்தால் – அதாவது, தற்போது ராகுல் காந்தி பிரதமராக அல்லது இண்டி கூட்டணியில் முக்கிய அமைச்சராக இருந்தால் – சல்மான் குர்ஷித் இப்படி உளறுவாரா? மாட்டார். ஆட்சி மாறிய அந்த நிலையில், தனக்கு வருகிற பதவியை அனுபவித்துக் கொண்டு சமர்த்தாக இருப்பார் சல்மான் குர்ஷித்.

 

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சல்மான் குர்ஷித் இந்தியாவின் பெயரையும் உச்சரித்தாரே தவிர, இப்போதைய காங்கிரஸ் தலைவரான அவர் தேசத்தைப் பற்றி எல்லாம் எதற்கு வெட்டியாக நினைத்திருக்க வேண்டும்? அப்படித்தானே இருக்கிறது இன்றைய காங்கிரஸ் கட்சியின் மானம் கெட்ட நிலை?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai