Sunday 19 May 2024

“ஸ்டாலின்தான் காமராஜர்!” – ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் சிலிர்க்கிறார்!


          -- ஆர். வி. ஆர்


அசாத்தியமான ஒரு பிதற்றலைப் பிதற்றி, தான் அரசியலில் இருப்பதைக் காட்டி இருக்கிறார், ஈ. வி. கே. எஸ். இளங்கோவன். அவர் தமிழ்நாட்டில் ஒரு முன்னணி காங்கிரஸ் தலைவர்.


சமீபத்தில் இளங்கோவன்  பொதுமேடையில் பேசியபோது, “ஸ்டாலின்தான் காமராஜர்” என்று அதே வார்த்தைகளில் சொல்லவில்லை. ஆனால் அதே அர்த்தத்தில்,  “ஸ்டாலின் ஆட்சியைக் காமராஜர் ஆட்சி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது” என்று பேசி இருக்கிறார்.


ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு, அதுவும் ஒரு தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவருக்கு, இளங்கோவனின் வார்த்தைகளைச் சொல்ல வெட்கமாக, கூச்சமாக இருக்க வேண்டும். இளங்கோவனுக்கு அந்தத் தடைகள் இல்லை.


காமராஜ் என்ற அரசியல் தலைவர் எளிமையானவர்,  தூய்மையானவர், தன்னலமற்றவர், மக்கள் நலம் சார்ந்தவர், தேசிய சிந்தனை உள்ளவர், மதிநுட்பம் கொண்டவர், நிர்வாகத் திறன் நிறைந்தவர், தலைமைப் பண்புகள் மேலோங்கியவர். 1954 முதல் 1963 வரை ஒன்பது வருடங்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகச் சிறப்பாக ஆட்சி செய்தவர். ஒரு அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக, முதல் அமைச்சராக, திமுக-வின் மு. க ஸ்டாலின் காங்கிரஸின் காமராஜுக்கு நூறு படிகள் கீழே இருக்கிறார். 


இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த ஜனநாயக நாடுகளில், சீரான ஊழலற்ற அன்றாட ஆட்சி நிர்வாகம் நிலவுகிறது. அங்கெல்லாம் வருவாய்த் துறை,  காவல் துறை, போக்குவரத்துத் துறை, பதிவுத் துறை போன்ற மக்கள் அதிகம் தொடர்பு கொள்ளும் அரசுப் பணி இடங்களில் லஞ்ச ஊழல் இருக்காது, முறைகேடுகள் நடக்காது. விதிவிலக்குகள் அபூர்வம். ஆனால் இந்திய நிலைமை வேறு. 


இந்தியா முதிர்ச்சி அடையாத ஜனநாயகம். மமூலான அன்றாட நிர்வாக ஊழல்கள் போக, அரசாங்க கான்டிராக்ட்டுகள், மது வியாபாரம், மணல் வியாபாரம், கனிமவளக் கொள்ளைகள், மாட்டுத் தீவன ஊழல், சனிமா உலகைச் சிறைப்பிடித்தல் என்று பல விதத்தில், பல இடங்களில் – முக்கியமாக, பெரிய இடங்களில் – ஊழல் பொதுவாக வியாபித்திருக்கும் நாடு இந்தியா.

 

இந்தியாவின் ஒரு பிரதேசத்தில் – அதுவும் 1967-க்குப் பிந்தைய தமிழகத்தில் – காமராஜ் போன்ற ஒரு முதல் அமைச்சர் இருந்தால்தான் மக்களைப் பண ரீதியில் இம்சிக்காத ஒரு நல்ல நிர்வாகம் சாத்தியமாகும். அந்த நல்ல நிர்வாகத்தை முடிந்த அளவுக்குச் செய்து காட்டும் எண்ணமும் முனைப்பும் மன உறுதியும் அவரைப் போன்ற ஒரு தலைவருக்கு மட்டும் உண்டு.  அதனால்தான் அத்தகைய ஆட்சியைக் காமராஜ் பெயரோடு ஐக்கியப்படுத்தி, அது காமராஜ் ஆட்சி என்று சொல்கிறோம். 

 

ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் கைசுத்தமானவரா, கைசுத்தம் உள்ள மற்றவர்களை அவர் அமைச்சர்களாக வைத்திருக்கிறாரா, கைசுத்தத்தை அவர் அரசு ஊழியர்களிடம் உண்மையில் எதிர்பார்க்கிறாரா, அதில் அவரது கண்காணிப்பு இருக்குமா, என்பதை அம்மாநில அரசு ஊழியர்கள் உடனடியாக உணர்வார்கள். அதற்கு ஏற்ப, பொதுமக்களிடம் அந்த அரசு ஊழியர்களின் அணுகுமுறை அமையும்.  

 

வேறு வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒரு மாநிலத்தில் மாறி மாறி முதல் அமைச்சர்களாக வரும்போது, அவர்கள் அனைவரும் கைசுத்தமாக இருந்து, தங்கள் அமைச்சரவையை அப்படி வைத்திருந்து, அரசு ஊழியர்களிடமும் அதை எதிர்பார்த்துக் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் லஞ்ச ஊழலற்ற அன்றாட நிர்வாகம் காலப் போக்கில் மாநிலத்தில் நிலைக்கும். இதில் கருணாநிதியின் திமுக ஆட்சி முன்பு எவ்வளவு மார்க் வாங்கியது, இப்போது ஸ்டாலின் ஆட்சி எவ்வளவு வாங்கி சோபிக்கிறது, என்பது ஸ்டாலின் அறிந்தது, இளங்கோவனும் அறிந்தது, மாநிலமே ஓரளவு அறிந்தது.

 

காமராஜ் ஒன்பது வருடங்கள் தமிழகத்தின் முதல்வராக ஆட்சி செய்தார். மு. க. ஸ்டாலின் இப்போது மூன்று வருடங்களாக அந்தப் பதவியில் இருக்கிறார். என்ன சொல்கிறார் இளங்கோவன்? இந்த மூன்று வருடத்திலேயே, காமராஜ் ஆட்சிக்கு நிகராகத் தான் ஆட்சி செய்வதை ஸ்டாலின் நிரூபித்து விட்டாரா? அதுவும் செந்தில் பாலாஜி, துரைமுருகன், பொன்முடி, உதயநிதி, சபரீசன் என்று பலரையும் பக்கத்தில் அணைத்துக் கொண்டு?

 

இன்னொரு விஷயம். ஸ்டாலினின் தந்தை கருணாநிதி இந்த மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்து சுமார் பத்தொன்பது வருடங்கள் ஆட்சி செய்தார். கருணாநிதி தனது ஆட்சியைச் சிறந்த ஆட்சியாக – காமராஜ் ஆட்சி போல – அத்தனை வருடமாகியும் நிரூபிக்கவில்லை என்று இளங்கோவனே நமக்கு உணர்த்த விரும்புகிறார். கருணாநிதி அப்படி ஒரு சிறந்த ஆட்சியைத் தமிழ்நாட்டிற்குக் கொடுத்தார் என்று இளங்கோவன் கருதினால், “ஸ்டாலின் ஆட்சிதான் கருணாநிதி ஆட்சி” என்றே இளங்கோவன் பேசி இருப்பாரே!


எல்லாம் போகட்டும். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சுயலாப, மக்கள் விரோத அரசியல் செய்பவை என்று கணித்து, அவை இரண்டையும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று கண்டனம் செய்தவர் காமராஜ். அந்த திமுக-வின் இன்றையத் தலைவர் ஸ்டாலின் தனது கட்சியின் கொள்கைகளை, போக்கை, தலைகீழாக மாற்றிக் கொண்டு, தானும் புனிதப்பட்டு, இப்போது காமராஜை நினைவூட்டும் விதமாக நல்லாட்சி தருகிறார் என்று இளங்கோவன் புளகாங்கிதம் அடைகிறார். 

 

இளங்கோவனை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் விஷயம்.  

  

திமுக-வில் இப்போது ஸ்டாலின்தான் பெரிய முக்கியஸ்தர். ‘ராகுல் காந்தி, ஜவஹர்லால் நேருவைப் போன்ற ஆட்சி தருவார் என்று புகழ்வதைவிட, ஸ்டாலின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று பொதுவெளியில் சிலாகித்தால், ஸ்டாலினின் தயவு கிடைக்கும், மாநிலத்தில் நாம் பயன் பெறலாம்' என்று இளங்கோவன் நினைத்திருக்க வேண்டும்.


கட்சி மானத்தைத் திமுக-வின் காலடியில் வைத்துத் தமிழகத்தில் பிழைக்க வேண்டிய பரிதாப நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. கட்சி நிலைமையே அது என்றால், அதன் மாநிலத் தலைவர் ஒருவர் தன்னைத் திமுக-விடம் தனியாகப் பாதுகாத்து விசேஷமாகப் பிழைக்க நினைக்கலாம். அவர் வேறு எப்படிப் பேசுவார்?   


* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

No comments:

Post a Comment