Sunday 15 March 2020

ரஜினி கட்சியின் ஸ்டார்டிங் பிராப்ளம். இல்லை, என்ஜின் பிராப்ளம்?


         -- ஆர். வி. ஆர்

“நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது” என்று பல வருடங்கள் முன்பு நடிகர் ரஜினிகாந்த்  சொன்னார். மூன்று நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களை அழைத்த அவர் இப்படியாகப் பேசினார்: "நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அது தேர்தலில் வென்றால், நான் தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆகமாட்டேன். கட்சித் தலைவராக மட்டும் இருப்பேன். அப்போது திறமையான ஒரு இளவயதுக்காரரை முதல் அமைச்சராக  நியமிப்பேன். அவர் ஒரு நிறுவனத் தலைவர் அல்லது சி.ஈ.ஓ மாதிரி செயல்பட்டு ஆட்சி நடத்துவார். எனது  கட்சியே ஒரு எதிர்க்கட்சி மாதிரி அவரைக் கண்காணிக்கும்.  என்னை அரசியலில் எதிர்பார்ப்பவர்கள் முதலில் இந்த ஏற்பாட்டை ஏற்கவேண்டும். ”  

ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் அவரை விரும்பும் பொதுமக்களுக்கும் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவதுஅவர் நல்லவர், நேர்மையானவர். அவர் அரசியலுக்கு வந்து தமிழகத்தில் ஆட்சி செய்தால் நமது பிடரியைப் பிடித்திருக்கும் ஊழலின் கரங்கள் தளரும் என்ற நம்பிக்கை அது. 

இந்தியாவில் இல்லாமல் ரஜினிகாந்த் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ பிறந்து ஒரு ஆங்கில சூப்பர் ஸ்டாராக பிரகாசித்தால் அவர் அரசியல் கட்சி தொடங்குவதை அங்கு எத்தனை பேர் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள்? மனைவி, பெண்கள், மாப்பிள்ளைகளைத் தவிர்த்து வேறு யாரும் இருப்பார்களா? சான்ஸ் இல்லை.  காரணம் இதுதான். லஞ்சம் ஊழல் வளரவிட்டு ஆதிக்கம் அட்டூழியம் செய்யும் அரசியல் தலைவர்கள் அந்த நாடுகளில் கிடையாது.  ஆகவே அது போன்ற தலைவர்களிடம் இருந்து விடுதலை கிடைக்க  அந்த நாட்டு மக்கள் உள்ளூர ஏங்கவில்லை. இந்திய நிலைமை, அதுவும் தமிழ்நாட்டு சமாசாரம் வேறு. அரசியல் ஆட்டத்தில் ரஜினியின் மீது இங்கு கணிசமான எதிர்பார்ப்பு  உண்டாகக் காரணம்: அத்தகைய விடுதலையை வேண்டி நிற்கும் மக்களுக்கு, அதைப் பெற்றுத்தரும் வல்லமை ரஜினிக்கு உண்டு என்கிற நம்பிக்கை மௌனமாக வந்திருக்கிறது - அவரே தமிழக முதல் அமைச்சர் ஆகி அதைச் செய்வார் என்ற நம்பிக்கை. முன்னர் இதே நம்பிக்கை நடிகர் விஜயகாந்த் மீது ஓரளவு  துளிர்த்தது. ஆனால் அவர் பரவலாக அதை வளரச் செய்யாமல் அது பட்டுப் போனது.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஜெயித்தால் கெஜ்ரிவால்தான் முதல் அமைச்சர் என்று அந்தக் கட்சி அறிவித்துப் போட்டியிட்டது. கட்சி செல்வாக்கு ஒரு பங்கு, கேஜ்ரிவால் செல்வாக்கு ஒன்பது பங்கு என்ற அடிப்படையில் அந்தக் கட்சி சமீபத்தில் மூன்றாவது முறை டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது. மறுபடியும் முதல்வர் ஆன கேஜ்ரிவால், தன்னிடம் ஒரு இலாகாவும் வைத்துக் கொள்ளாமல் முதல்வர் ஆனார் – முன்னரும் இப்படி செய்திருக்கிறார். அவரது கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்களும், கேஜ்ரிவாலிடம் இலாகா ஏதும் இல்லாவிட்டால் பரவாயில்லை, ஆட்சி லகானை வெளிப்படையாகத் தன் கையில் வைத்திருக்கும் முதல் அமைச்சராக அவர் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். "நான் மந்திரி சபையில் இருக்க மாட்டேன். எம்.எல்.ஏ கூட ஆக மாட்டேன். நான் நியமிக்கும் ஒருவர் எம்.எல்.ஏ ஆகி முதல் அமைச்சராக வேலை செய்வார். நான் கட்சி ஆபீசில் உட்கார்ந்து அவரைக் கண்காணிப்பேன்" என்று அறிவித்து கேஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் அவர் கட்சி டெல்லியில் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? முடியாது என்றுதான் கேஜ்ரிவாலும் நினைப்பார்.

அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர், "எனது கட்சி ஜெயித்தால் நான் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆகமாட்டேன். நான் கைகாட்டும் ஒருவர்தான் முதல்வராக இருப்பார்" என்று அறிவித்திருந்தால் சட்டடசபைத் தேர்தல்களில் அ.தி.மு.க குறைவான சீட்டுகள் தான் பெற்றிருக்கும் - ரஜினியே இப்படித்தான் நினைப்பார். இதில் ரஜினிக்கு சந்தேகம் இருந்தால் அவர் இன்னொன்றையும் எண்ணிப் பார்க்கலாம்.

நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கால் – அது ஒரு முக்கிய காரணமாக அமைந்து – பாரதீய ஜனதா கட்சி தலைமை ஏற்ற கூட்டணி, 2014 மற்றும் 2019 லோக் சபா தேர்தல்களில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தல்களுக்கு முன்னர் மோடி இவ்வாறு அறிவித்தார் என்று கற்பனை செய்து பாருங்கள்: "எங்கள் கூட்டணி தேர்தலில் வென்றால் நான் பிரதம மந்திரியாக வர மாட்டேன். நான் அல்லது எனது கட்சி தேர்ந்தெடுக்கும் வேறு ஒருவர்தான் பிரதமராக பதவி ஏற்பார். நான் கட்சித் தலைவராக இருந்து அந்தப் பிரதமரை கண்காணிப்பேன்".  மோடி அப்படி அறிவிப்பது  வெற்றி வாய்ப்பை இழக்கும் அசட்டுத்தனம் என்று நீங்களே நினைப்பீர்களா இல்லையா, ரஜினிகாந்த்?

இன்னொன்று. தேர்தல் நேரத்தில் ரஜினிகாந்தின் புதிய கட்சி ஒரு கூட்டணி அமைக்க நினைத்தால், அவர் கட்சியுடன் கூட்டு சேர விரும்பும் மற்ற அரசியல் தலைவர்களும் – கமல் ஹாசனில் ஆரம்பித்து – ரஜினியைத் தவிர மற்ற எவரையும் முதல்வராக ஏற்க தயங்குவார்கள்.

தனது புதுக் கட்சி தன் காலத்தில் மட்டும் இருந்தால் போதும் என்று ரஜினி நினைக்கிறாரா அல்லது அது தொடர்ந்து இயங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாரா?  பின்னரும் கட்சி நீடித்து, எதிர்காலத்தில் அவர் கட்சி பதவியில் இருந்தால், அப்போதைய ஆட்சித் தலைவரை அப்போதைய கட்சித் தலைவர் கண்காணிக்க முடியுமா? அது நடப்பதற்கு, ரஜினி மாதிரி தனிச் செல்வாக்கு உடையவர் பின்னாளில் கட்சித் தலைமைக்கு வரவேண்டும், அவர் ஆட்சித் தலைமைக்கு ஆசையும் படக் கூடாது.  இது நடக்காத காரியம்.  இல்லை, ரஜினி காலத்திற்கு மட்டும்தான் அவர் சொன்ன ஏற்பாடு என்றால் – அது சாத்தியமானால் – அதில் லாபம் கிடையாது. அதற்கு பதிலாக, இருக்கிற கட்சிகளில் சிறந்தது என்று ரஜினி நினைக்கும் கட்சிக்கு ஓட்டுப்போடுமாறு வாக்காளர்களுக்கு அவ்வப்போது அவர் சிபாரிசு செய்யலாம். நடிப்பையும் பார்த்துக் கொள்ளலாம்.

“மிக மோசமான அரசியல் சக்திகளை நானே  வந்து சம்ஹாரம் செய்தால்தான் உண்டு. என்னால் முடியாவிட்டால், என்னை விடக் குறைவான ஆற்றல் கொண்ட மற்ற அரசியல் கட்சிகள் அந்த வேலையை ஓரளவு செய்ய முனைந்தாலும் நான் அதற்கு ஆதரவு தர மாட்டேன், குரல் கொடுக்க மாட்டேன்” என்கிறாரா ரஜினி? “அப்படி அல்ல. எல்லா அரசியல் கட்சிகளுமே மோசம், அவை எல்லாமே மக்கள் நலனுக்காக தவிர்க்கப் படவேண்டும். அதனால்தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தராமல் இருக்கிறேன்” என்று மக்கள் நலனில் அக்கறைப் படும் ரஜினி நினைத்தால்,  அவர் அரசியலுக்கு வர, கட்சி தொடங்க, தேர்தலில் போட்டியிட எக்காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாதே?   

ரதன் டாடா பிரபல தொழிலதிபர். அவர் தொடங்கும் கம்பெனியை நிர்வாகிக்க ஒரு துடிப்பான இளவயது மேனேஜிங் டைரக்டரை நியமனம் செய்து, டாடா பின்னணியில் இருந்து மேனேஜிங் டைரக்டரை கண்காணிக்கலாம். வியாபாரத்தில் அது சரிப்படும். முதல் அமைச்சர் அல்லது பிரதம மந்திரி தேர்வில் அந்த வழியை அமல்படுத்தினால் கோளாறும் கசமுசாவும்  மிஞ்சும். அதை சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் பத்து வருஷம் மத்தியில்  நிரூபித்தார்களே! ரஜினிகாந்த் எந்த வகையிலும் சோனியா காந்தியாக இருக்க மாட்டார். கை கட்டி கண் மூடிய மன்மோகன் சிங்கையும் அவர் சகிக்க மாட்டார். ரஜினிக்கு  ஏன் சோனியா வழி?

ரஜினிகாந்தின் ‘கட்சித் தலைமை – ஆட்சித் தலைமை’ யோசனையை, விவரம் தெரிந்த சில இளைஞர்கள், அரசியல்வாதிகள், எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், முன்னாள் நீதிபதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் அவர்  சொல்லியபோது பலரும் அதை ஏற்கவில்லை அன்று அவரே இப்போது தெரிவித்திருக்கிறார். ரஜினியிடம் அவ்வாறு அபிப்பிராயம் சொன்னவர்கள் அவருக்கு எதிரிகள் இல்லை. இருந்தாலும் அவர்களின் மாறுபட்ட கருத்தைக் கேட்டபோது தனக்கு தூக்கி வாரிப் போட்டது என்கிறார் ரஜினி.  இது தொடர்பாக ரஜினிகாந்த் மேலும் இரண்டு விஷயங்கள் பேசி இருக்கிறார்.  முதலில், “இப்போது எனக்கு 71  வயது. இப்போதே எனது கொள்கையை  நான் சொல்லிவிட வேண்டும். வரும் தேர்தலை விட்டு அடுத்த தேர்தலின் போது என் வயது 76-ஆக இருக்கும். அப்போதும் என் கொள்கை மாறாது. எனது எண்ணத்தை நான் இப்போது சொல்லி ஏற்றுக் கொள்ளாதவர்கள், அடுத்த தேர்தலின் போது எனது 76-வது வயதில் நான் அதையே சொல்லும்போதும் எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்?” என்று கேட்டார். இன்னொன்று,  “மக்களிடம் எழுச்சி தெரியட்டும்.  அப்போது நான் அரசியலில் இருப்பேன்” என்று அப்பாவி மக்களுக்கு ஒரு புரியாத செய்தி சொல்லி தனது அறிவிப்பை முடித்துக் கொண்டார்.  

ரஜினிகாந்த் ஆரோக்கியமாக நீடூழி வாழட்டும். நிம்மதியாகவும் இருக்கட்டும். தமிழக மக்களின் விடிவும் ஆண்டவன் கையில்தானே  இருக்கிறது? தமிழக மக்களை ஆண்டவன்  பார்த்துக் கொள்ளட்டும். பிரார்தனைகள் தமிழகத்தில் தொடரலாம்.

   (இதற்கும் அப்பால்: ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டில் அலாதியான வசீகரம் உண்டு. அரசியல் பிரவேசம் பற்றி அவர் பேச்சில், செயலில் உள்ள தயக்கமும் விரிசல்களும் அதை சேதம் செய்யாது. ஒரு விளக்கத்தை ரஜினிகாந்த் எப்போது வேண்டுமானாலும் சொல்லிவிட்டு மக்களை நெருங்கினால் அவருக்கான வரவேற்பு அப்படியே இருக்கும் - அல்லது அவர் காட்டும் திசையில் கணிசமான ஓட்டுக்கள் திரும்பும். போட்டி அரசியல்வாதிகளின் இன்றைய நிம்மதி நீடிக்குமா?)

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020

7 comments:

  1. ரஜினிகாந்திற்கு இப்போதே வயது எழுபது. இவர் எப்போது கட்சி ஆரம்பித்து, எப்போது தேர்தலில் பங்கேற்று, எப்போது அதில் வென்று, எப்போது ஆட்சி அமைக்கப்போகிறார்? நடக்கிற காரியமாகத் தெரியவில்லை.

    நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ரஜினி எண்ணியது திண்ணியதாக பெறவில்லை.
    Lives in utopia.
    அரசியல் பிரவேசத்துக்கு உரிய காலத்தையும் துணையையும் தவறவிட்டு விட்டார்.
    Everyone is wasting their time on him.

    ReplyDelete
  3. What Mr. Rajini said is very idyllic, but not practical. As you very well put for a corporate it might work well but not for politics. One should have the power to bring about the change. Hope he doesn't miss the bus this time. He has some power in his hand now to form a third party hoping and wishing he uses it and bring about the change he desires to see.

    ReplyDelete
  4. Mostly your obeservations are correct. but , if you consider the example of Kamaraj who was called king maker in Indian Politics once and Bal Thackery who controlled the power levers in Maharastra politics for a long time and some time in Central government also , then one would realize that what Rajini kant is saying has example before in India and with certain modifications for Tamil Nadu , this model of party chief controlling the Chief minister model may work provided the new party of Rajini wins enough seats in 2021. There is no need to have plan for next 10 years when you start a new party and once it wins enough seats , then working arrangements can be ironed out . We need not reject the idea outright.

    ReplyDelete
    Replies
    1. Bal Thackeray is a good example... Like wise Ms. JJ and Mr. Ops.. Respect and fright can work.. If Mr. Rajinikant has either of these in him this might work. We need someone strong to lead TN.

      Delete
  5. Political parties have mushroomed in the country. Why Rajini wants to float one more party. He may join a national party (BJP or Cong.) or a regional party and achieve his goals. He need not spend time and energy on establishing infrastructure for a Party. Rajini has not blatantly opposed either BJP or Cong or DMK or AIADMK or MDMK. Even with Kamal Hasan's Maiyam Rajini does not have quarrels. A theory is that even though Rajini has not openly opposed the existing parties, heart of heart he feels that all the existing parties are corrupt to the core. Can we expect that all his own cadres are angels. In public life, people will always have an axe to grind. Take the case of BJP. The leaders strive for very serious national goals, risking their lives. Nevertheless, in that party also some undesirable elements will be there. Vices will be there in any party (existing one or newly formed). The chieftain must take the cudgels and steer the party.

    ReplyDelete
  6. a leader should lead from the front. NEVER GET A POWER OF ATTORNEY TO DO THE JOB. yOUR PARALLELS ARE APT. Romba kaalamaga Rajini padhungi konde irukkirar. Paayum Puliyaga mattara?

    ReplyDelete