Sunday 3 March 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: இந்திய விமானப்படை தாக்குதல் - பாலகோட்டில் குண்டு, காங்கிரசில் மண்டு



இருதலைக்கொள்ளி எறும்புன்னு ஒண்ணு நிஜமாவே இருக்கா, அது எப்படி இருக்கும்னு யோசிக்கறேளா? கவலையை விடுங்கோ. காங்கிரஸ் கட்சியே அந்த சொரூபம் எடுத்து உங்களுக்கு காட்சி குடுத்திருக்கு. 

இப்ப இந்திய விமானப் படை பாகிஸ்தான் நாட்டுக்குள்ள பறந்துபோய் ஒரு பயங்கரவாத பயிற்சி முகாமை அழிச்சுட்டு வந்ததில்லையா? அதைப்பத்தி காங்கிரஸ் கட்சி கருத்து சொல்றதுக்கு பட்ட பாடு இருக்கே - அதுதான் இருதலைக் கொள்ளி ஏறும்போட தவிப்புங்கறது. எப்படின்னு சொல்றேன். 

போன மாசம் 14-ம் தேதி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்து புல்வாமா-ன்னு ஓரு ஊர்ல, நம்ம சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேரை வெடி வச்சு படுகொலை பண்ணினான் ஒரு பாவி. அவன் ஒரு காஷ்மீர்  தீவிரவாதி. பாகிஸ்தான் நாட்டுல செயல்படற பயங்கரவாத அமைப்பு ஒண்ணு இருக்கே - அதுக்கு என்ன பேர்? ஜூஸ் மாவடு? ஜெய்ஷ் முகம்மது? ஏதோ ஒண்ணு – அந்த அமைப்பு 'நாங்கதான் இந்த நாசவேலைக்கு காரணும்'னு தம்பட்டம் அடிச்சுண்டது.  அதுவும் உண்மைங்கறதுனால, ரண்டே வாரத்துல இந்திய விமானப்படைக்காரா ராவோடா ராவா பன்னண்டு விமானத்துல பாகிஸ்தான் நாட்டுக்குள்ளயே பறந்து போனா. அங்க பாலகோட்-ங்கற ஊர்ல அந்த பயங்கரவாத அமைப்பு நடத்தின பெரிய  பயிற்சி முகாமை குண்டு வீசி அழிச்சுட்டு உடனே பத்திரமா திரும்பிட்டா. இதெல்லாம் உங்களுக்கும் தெரியும்.

நம்ம விமானப் படையோட பராக்கிரமத்தை எப்படி குறைச்சலா பாராட்டணும், எப்படி மந்தமா பாராட்டினா மோடி அரசாங்கத்துக்கு பெருமை எதுவும் சேராது, அதே சமயம் தேசத்தையும் விட்டுக்குடுத்துட்டா மாதிரி தோணக்கூடாதுன்னு கணக்கு பண்ணி, காங்கிரஸ் கட்சி உள்ளூர தவிச்சு ஏதோ சொல்லி வச்சிருக்கு. அது என்னன்னா, கட்சித் தலைவர் ராகுல் காந்தி மூலமா ஒரு துளியூண்டு ட்வீட் குடுத்து முடிச்சிடுத்து: "இந்திய விமானப் படை விமானிகளுக்கு எனது சல்யூட்". அவ்வளவுதான். கப்சிப்.  இப்ப காங்கிரஸ் கட்சியோட ரண்டும்கெட்டான்  நிலைமையை பாத்தா, இருதலைக் கொள்ளி எறும்பை பார்த்த மாதிரின்னு நினைச்சுக்கலாம்.

இந்திய போர்ப் படைகள் 1971-க்கு அப்பறம் பாகிஸ்தான் நாட்டுக்குள்ள புகுந்து தாக்கினது, இப்ப நம்ம விமானப் படை பாலகோட்-டுக்கு போய் குண்டு போட்டதுதான். இது நம்ம விமானப் படையோட வீர தீரம்தான், சந்தேகம் இல்லை. ஆனா, இந்திய பிரதமர் மோடி அதுக்கான ஊக்கத்தையும் ஆதரவையும் குடுக்காம இந்த வீரச்செயல் அரங்கேற முடியுமா?  அவருக்கும் அசாத்திய மனத் துணிவு இருந்தாத்தான இது சாத்தியம்? நாம இன்னொரு நாட்டுக்குள்ள போய் தாக்குதல் நடத்தினா, அதை மத்த நாடுகள்கிட்ட நியாயப்படுத்தணும், அதுக்கான மதிப்பும் மரியாதையும் நம்ம நாடு சேர்த்து வச்சிருக்கணும், அதுக்கு நம்ம நாட்டு பிரதம மந்திரியோட தனிப்பட்ட உலக நன்மதிப்பும் அவசியம். சரிதானே? அப்படின்னா, நம்ம தேசத்தோட மானத்தையும் மரியாதையையும் பாதுகாப்பையும் காத்துநின்ன பிரதம மந்திரி மோடிக்கும் ஒரு வார்த்தை பாராட்டு சொல்றதுதான ஒரு இந்தியனுக்கு அழகு, பெருமை? ராகுல் அதைப் பண்ணலை.

ராகுல் ட்வீட் எப்படி இருக்குன்னா, ஏதோ அரசாங்கத்துக்கோ பிரதம மந்திரிக்கோ தெரியாம, பன்னண்டு விமானப் படை விமானிகள் தானா சேர்ந்துண்டு அவாவா விமானத்துல குண்டை எடுத்து போட்டுண்டு "அரசாங்கமாவது, அவரைக்காயாவது! பாகிஸ்தானுக்கு நாங்களே பாடம் புகட்டறோம்!"னு போய்ட்டு வந்திருக்கா, அப்படிங்கற மாதிரி இருக்கு. ராகுலுக்கு ஒரு அல்ப சிந்தனையும் உண்டு.  'நம்ம நிதர்சனத்தை பேசி, அதுனால மோடி அரசாங்கத்துக்கு பேர் வந்துடக் கூடாது. இந்த சமயத்துல அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளும் பக்க பலமா இருந்தா அதுவே பாகிஸ்தானை கொஞ்சம் அடக்கி வைக்கும், அதுனால நாட்டுக்கும் நல்லது, அப்படிங்கறதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான்.  நம்மளோட சின்னத்தனம் வெளிப்பட்டாலும் பரவால்லை. நாட்டு நலன் எப்படியும் போகட்டும்.  மோடி அரசாங்கத்துக்கு எந்த சந்தர்ப்பத்துலயும் இடைஞ்சல் பண்ணிண்டே இருக்கணும்' - இதுதான ராகுல் காந்தியோட ட்வீட்டுக்கு பின்னால உள்ள அர்த்தம்? அதே சமயம், 'நாங்களும் தேசாபிமானிகள்'னு காட்டறதுக்கு, நம்ம விமானப் படை வீரர்களுக்கு அவசரமா ஒரு குட்டி சல்யூட் மட்டும் வச்சுட்டார் ராகுல். அவ்வளவுதான்.

மோடியும் பா.ஜ.க-வும் காங்கிரசுக்கு அரசியல் எதிரிகளா இருந்தாலும், அதுல சமரசம் பண்ணிக்காம நாட்டையும் உயர்த்திப் பிடிச்சு ராகுல் காந்தி ட்வீட் பண்ணி இருக்கணும். எப்படின்னா, அவர் இது மாதிரி அறிவிச்சிருக்கலாம்: “பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாத பயிற்சி முகாம் மீது  இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்திய விமானப் படைக்கு எங்களின்  சல்யூட். தங்கள் மண்ணிலேயே பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து, அதை இந்திய எல்லையில் பிரயோகம் செய்யும் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே போன்ற பதில் தாக்குதலை இந்தியா செய்யும் என்று பாகிஸ்தான் உணரவேண்டும். ஜெய் ஹிந்த்!”

இப்ப மோடி அரசாங்கம் எடுத்த விமானப் படைத் தாக்குதல் மாதிரியே, பயங்கரவாதத்துக்கு எதிரா நடவடிக்கை எடுக்க ஒரு காங்கிரஸ் அரசாங்கத்துக்கு திராணி இருக்குமா? இந்தக் கேள்விக்கு, ’இருக்காது’ன்னு ஒரு குழந்தை கூட சரியா பதில் சொல்லும். இருந்தாலும், இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்கு போய் ஒரு பயங்கரவாத பயிற்சி முகாமை சின்னாபின்னம் பண்ணிட்டு வந்தப்பறம், பாரம்பரியமான காங்கிரஸ் கட்சி நம்ம அரசாங்கத்துக்கு ஆதரவா ஒரு வார்த்தை சொல்லி கௌரதையா பேசறதுதான சரி, புத்திசாலித்தனம்? காங்கிரஸ் மண்டுகளுக்கு இது புரியலைன்னா, அவாளுக்கு ஒரு உதாரணத்தை எடுத்து வைக்கலாம்.

1971-ம் வருஷம் ராகுல் காந்தியோட பாட்டி இந்திரா காந்தி  நம்ம பிரதம மந்திரியா இருந்தார். அப்ப, கிழக்கு பாகிஸ்தானோட விடுதலை போராட்டத்துக்கு ஆதரவா அந்தப் பகுதில இந்திய படைகள் நுழைஞ்சு, பாகிஸ்தான் படைகளோட சண்டை போட்டு அவாளை சரண் அடைய வச்சது. அதோட, பிரதான பாகிஸ்தான் நாட்டுலேர்ந்து கிழக்கு பாகிஸ்தான் பகுதிக்கு விடுதலை வாங்கி கொடுத்தது இந்தியா. அதுக்கப்பறம், கிழக்கு பாகிஸ்தான் பங்களா தேஷ்னு தனி நாடா இருக்கு. நான் ராகுல் காந்திட்ட கேக்கறேன்:  பங்களா தேஷ் நாட்டை உருவாக்கின பெருமையை யாருக்கு நீ குடுப்ப? துணிஞ்சு ஒரு போர் முடிவை எடுத்து செயல் படுத்தின பிரதமர் இந்திரா காந்திக்கா, இல்லை துப்பாக்கி சகிதமா சண்டைக்கு போன இந்திய போர் வீரர்களுக்கு மட்டும் குடுப்பையா? கிக்கிப் பிக்கின்னு பேசாம நேரா பதில் சொல்லு. அப்ப இந்திரா காந்திக்கு ஒரு பதில், இப்ப மோடிக்கு ஒரு பதிலா சொல்லுவ? அன்னிக்கான பெருமை இந்திரா காந்திக்கு. இன்னிக்கான பெருமை மோடிக்கு. இதானப்பா உண்மை? அடுத்த பிரதம மாதிரியா வரணும்னு ஆசைப்படற நீ, அர்த்தமுள்ள பேச்சா பேசவே மாட்டையா?

ராகுல் காந்தி தலைவரா இருக்கற காங்கிரஸ் கட்சியை இருதலைக் கொள்ளி எறும்புன்னு சொன்னது கூட தப்போ? ரண்டு தலைன்னா ரண்டு புத்தியும் இருக்கணும். ஒரு தலைகூட இல்லாத எறும்பு இருக்குமோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019


1 comment:

  1. The onus of uniting the Hindus and awakening the giant lies in the hands of our "matathipathis" (pontiffs) and the swamijis. They should shed their prejudices and unite to inspire the Hindus at large. I am tempted to liken this to Jambavan's gentle reminder to Hanuman about his great ability. It is this that goaded Hanumanji to rise high and cross the sea to reach Lanka. The Hindus Religious Convention held at Chennai could act as a spring board for this. (R.Dharmaraja, dharma.ramu@gmail.com 90039 16156)

    ReplyDelete