Monday, 4 May 2026

கேள்வி-பதில் (04.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

கேள்வி: 2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன?

 

பதில்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தடாலடியாக முன்னுக்கு வந்திருக்கிறது.

 

திமுக மற்றும் அதிமுக அமைத்த இரண்டு கூட்டணிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதன்முறை தேர்தலில் போட்டியிட்ட - அதுவும் தனியாகப் போட்டியிட்ட - தவெக அதிகத் தொகுதிகளை வென்றிருக்கிறது. ஓட்டு எண்ணப்படும் இன்று மாலை ஆறே முக்கால் மணி அளவில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தவெக 107-ல் முன்னிலை; திமுக கூட்டணி 73-ல் முன்னிலை; அதிமுக கூட்டணி 54-ல் முன்னிலை;

 

இந்தத் தேர்தலில் ஒரு விஷயம் தெளிவாகிறது. வாக்காளர்களுக்குப் பணம், பொருள், நகை கொடுத்தால் அவர்கள் வாங்கிக் கொள்வார்கள் - அந்தப் பரிதாப நிலையில் அவர்கள் வைக்கப் பட்டிருப்பதால். ஆனால் அவர்கள் தமது விருப்பப்படி வெறுவிதமாகவும் வாக்களிப்பார்கள். இது நல்லது. முன்பு, வாக்காளர்களுக்கு அதிகப் பணம் கொடுத்தவர்களும், வாக்காளர்கள் ஓட்டளிக்க விரும்பிய வேட்பாளர்களும் ஒரே பக்கம் இருந்திருப்பார்கள்.

 

தேர்தலுக்கு முன்னர் உருவான எந்தக் கூட்டணிக்கும், அல்லது எந்த ஒரு கட்சிக்கும், ஆட்சி அமைக்கும் அளவுக்கான பெரும்பான்மை கிட்டவில்லை. அதற்காக, சட்டசபையில் ஒரு ஒருமித்த பெரும்பான்மை ஏற்படாமல், மாநிலத்தில் புதிய தேர்தல் நடத்த வேண்டியிருக்காது - தேர்வான புதிய எம்.எல்.ஏ-க்கள் மறுபடியும் ஒரு தேர்தல் வராமல் இருக்கத் தேவையான அணி மாற்றத்தைச் செய்து காட்டுவார்கள். அதாவது, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காகப் புதிய கூட்டணி உருவாகும். என்னவெல்லாம் நடக்கலாம்?

 

தவெக-வுக்குத்தான் ஆட்சி அமைக்கக் குறைந்த எண்ணிக்கையிலான கூடுதல் எம்.எல்.ஏ-க்கள் தேவை.  ஆனால் அந்த அளவுக்கான  வேறு கட்சி எம்.எல்.ஏ-க்களை மட்டும் கூட்டணி சேர்த்துக் கொண்டு தவெக ஆட்சி அமைப்பது விவேகமல்ல. அப்படிச் சேர்ந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் ஆதரவை விலக்கி ஆட்சியைக் கவிழ்க்கலாம். ஆகையால் ஒரு புதிய கூட்டணிக்காக, வருகிற அனைத்து சிறிய கட்சி எம்.எல்.ஏ-க்களையும் - அதாவது, அவர்கள் இப்போது இருக்கிற திமுக அல்லது அதிமுக கூட்டணியை உதறிவிட்டு வரும் சிறிய கட்சி எம்.எல்.ஏ-க்களை - தவெக சேர்த்துக் கொள்ளலாம்.

 

இன்னொன்று. அதிமுக-வைத் தொடங்கி நிலைபெறச் செய்த எம்.ஜி.ஆர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மறைந்த ஜெயலலிதாவின் தலைமையும் அந்தக் கட்சியினரால் விரைவில் மறக்கப்படும். வாக்காளர்கள் மனதில் - குறிப்பாக இள வயது வாக்காளர்களின் மனதில் - அந்த இருவரின் இடத்தை விஜய் பெருமளவில் புதிதாக ஆக்கிரமிக்கக் கூடும்.

 

அதிமுக-வின் தற்போதையத் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியினரைக் கட்டி இழுக்கும் காந்தத் தலைவரல்ல. அந்தக் கட்சியின் மற்ற நிர்வாகிகளும் தலைமைப் பண்புகள் இல்லாதவர்கள்.  இந்த சாதாரண உண்மையைப் புதிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் உணர்வார்கள். ஆகையால் அதிமுக-விலிருந்து மூன்றில் இரண்டு பங்கு புதிய எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுடன் இணைய வந்தாலும் வரலாம். அது நிகழ்ந்தால் சட்டசபையில் தவெக அசைக்கமுடியாத பலம் பெறும்.

 

மற்ற அரசியல் கட்சிகளிடையே புதிய சேர்க்கைகளோ கூட்டணிகளோ ஏற்படலாம். அரசியல் உலகில் பலம் சேர்த்துக் கொள்ள எந்த இணைப்பும் கூட்டணியும் ஏற்படலாம். "நாங்கள் பங்காளிகள்" என்று வழக்கமான சல்ஜாப்பைச் சொல்லி, திமுக-வும் அதிமுக-வும் கூட இணையலாம். ஒன்றாகக் குழியில் தள்ளிவிடப் பட்ட யார்தான் ஒருவரை ஒருவர் கட்டிக் கொள்ள மாட்டார்கள்?  இருந்தாலும் பாஜக திமுக-வுடன் சேராது என்று எடுத்துக் கொள்ளலாம். பாஜக-வுக்கும் சொற்ப எண்ணிக்கையில் தான் எம்.எல்.ஏ-க்கள் கிடைத்திருக்கிறார்கள்.

 

அடுத்ததாக: சினிமாவிலிருந்து வந்த விஜய் தொடங்கிய கட்சி தேர்தலில் சாதிப்பதும், அவருடைய கட்சி புதிய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவதும் - அவர் முதல் அமைச்சர் ஆவதும் - வரவேற்கத் தக்கதா என்று சிலர் கேட்கலாம். அதற்கான பதில்: தமிழ்நாட்டில் திமுக முதன் முதலில் ஆட்சி அமைத்த 1967-ல் இருந்தே நமது மாநில அரசியலில், இங்கு ஆட்சி அமைப்பதில், சினிமா பின்புலம் தலை தூக்கியாயிற்று. அடுத்து, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அதிமுக சார்பில் முதல்வர்களாக இருந்தார்கள். வெளியேறப் போகும் திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்தார், திரைப்படம் தயாரிக்கிறார், திரைப்படம் விநியோகம் செய்கிறார். பாஜக-விலும் சரத்குமார் மற்றும் ராதிகா இருக்கிறார்கள், குஷ்புவும் உண்டு. ஆகையால் விஜய் ஒரு நடிகர் என்பதற்காக, அவர் ஆட்சிக்கு வருவதை ஆட்சேபிக்க முடியாது. இதுதான் தமிழகத்தின் அரசியல் களம் என்று இருக்கும்போது, இந்தக் களத்தைக் குறை சொல்லி இங்கு அரசியல் நடத்துவது, அல்லது விமர்சிப்பது, உதவாது.

 

விஜய் ஆட்சிக்கு வருவதில் ஒரு முக்கிய நன்மை இருக்கிறது. திமுக-வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் செய்த அளவில் அவர் பெரிய பொதுச் சேவை செய்திருக்கிறார். இருந்தாலும், ஒரு மாநிலத்தின் முதல்வராக வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு அவருக்கு இன்னும் முதிர்ச்சியும் நிதானமும் தேவை.

 

விஜய் முதல்வரானால் ஊழலற்ற ஆட்சியைத் தருவாரா, திறமையான நிர்வாகத்தை வழங்குவாரா, மாநிலம் முன்னேற வழிவகுப்பாரா என்பது பற்றி நமக்குத் தெளிவான நல்ல அறிகுறிகள் இல்லை. சற்று அச்சம் இருக்கிறது. இதுபோக, தேசிய சிந்தனைகளை வெளிப்படுத்தாத அவர் அந்த வகையில் என்ன பாதிப்புகளை மாநிலத்திற்கு ஏற்படுத்துவார் என்பதும் நமக்குத் தெரியாது. அந்த எல்லா விஷயங்களிலும் விஜய் கண்காணிக்கப் படவேண்டியவர், தன்னை ஆரம்பத்திலிருந்து நிரூபிக்க வேண்டியவர். முடியப்போகும் திமுக ஆட்சி மாதிரி ஒரு மோசமான மர்மமான ஆட்சியைத் தனது முதல் ஐந்தாண்டுகளில் விஜய் முயன்றாலும் தரமுடியாது என்பது யாருக்கும் ஒரு நிச்சய ஆறுதல் - இதுவே பெரிய விஷயம்.

 

தனது முதல் தேர்தலிலேயே ஒரு பெரிய வெற்றியைப் பார்த்த விஜய், அரசியலில் நீடிப்பார். அவருக்கு எதிராகத் தற்போதைய அதிமுக தாக்குப் பிடிப்பது கடினம். அந்தக் கட்சியிலிருந்து அதிகமானோர் தவெக-வுக்கு மாற வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்து எம்.எல்.ஏ ஆகிவிட்டார் செங்கோட்டையன். அவர் அநேகமாக அமைச்சராகவும் ஆவார் - அதனால் இன்னும் பல அதிமுக-வினர் தவெக-வுக்கு ஈர்க்கப் படுவார்கள்.

 

திமுக-வைப் பொறுத்தவரை, அக்கட்சி உதயநிதிக்கும் இன்பநிதிக்கும் அரியாசனம் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தலாம். கமல் ஹாசன், இனி திரைப்படக் காட்சிகளில் மற்றும் வாய் திறந்தால் போதும். எல்லாத் தேர்தல்களில் தன் கட்சி தோற்றாலும் பிழைக்கும் வித்தை தெரிந்த சீமான், கமுக்கமாகத் தனது வித்தைகளைத் தொடரலாம்.

 

அதிமுக கூட்டணியிலிருந்து தமிழக பாஜக விடுபட்டு, அண்ணாமலையை முன்னிலைப்படுத்தித் தமிழகத்தில் வேகமாக வளரவேண்டிய காலமும் கட்டாயமும் வந்துவிட்டது. அண்ணாமலையின் தடையற்ற தலைமை இல்லாமல் பாஜக-வுக்குத் தமிழகத்தில் வளர்ச்சி இருக்காது - அதுவும் விஜய்யின் புதிய கட்சி, ஆட்சி அமைக்கும் அளவு வளர்ந்த பின்னர். தமிழக அரசியல் செம்மைப்பட, நமது மாநில அரசியலில் பண்பும் படிப்பும் திறமையும் தலையெடுக்க, பாஜக அண்ணாமலையை முன்னிலைப் படுத்துவதை விட வேறு சிறந்த வழி தென்படவில்லை.

 

பகுதி 87//04.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Saturday, 2 May 2026

கேள்வி-பதில் (02.05.2026)


 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: திமுக கூட்டணி மீண்டும் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து அதற்குக் காரணமாக, "தமிழ்நாட்டுத் தாய்மார்கள் தங்கள் நன்றியைக் காண்பிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது" என்று சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இடையில் என்ன சொல்கிறார் வைரமுத்து?

 

தமிழகத் தாய்மார்கள் பெருவாரியாக அதிமுக கூட்டணிக்கோ வேறு கட்சிக்கோ வாக்களித்திருந்தால், அந்தப் பெண்கள் நன்றி கெட்டவர்களா? ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி எந்த ஒரு கூட்டணிக்கும் அல்லது கட்சிக்கும் வாக்களிக்கலாம். அவர்கள் செய்த ஒரு தேர்வு மாநிலத்திற்கு நன்மை பயக்காது என்றுகூட தோற்கும் கட்சியோ கூட்டணியோ கருத்து சொல்லலாம். இந்த விஷயத்தில் வாக்காளர்களின் பக்கத்திலிருந்து நன்றிக்கு என்ன வேலை?

 

வைரமுத்து வெளிப்படுத்தியது ஜமீன் அரசியல் சிந்தனை - அதாவது திராவிட மாடல் அரசியல் பார்வை.

 

 

2. கேள்வி: "அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் திறமை தாய்நாட்டிற்குத் தேவைப்படுவதால், ஒரு சமுதாயப் பணியாக அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்" என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளாரே?

 

பதில்: கல்லூரிகளில் படிக்கவும், பெரிய நிறுவனங்களில் வேலைக்குப் போகவும், லட்சக் கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா சென்று அங்கு குடியேறி இருக்கிறார்கள். காரணம்: சொந்த நாட்டில் அவர்களுக்குப் பல கதவுகள் அடைக்கப் பட்டிருக்கின்றன, பல இடங்களில் கதவுகளே இல்லை. அந்த அடிப்படைக் காரணத்தில் நிரந்தர மாற்றம் வந்தால், பல இந்திய இளைஞர்கள் அமெரிக்கா செல்லவேண்டி இருக்காது. ஏற்கனவே போனவர்கள் திரும்பி வருவது இருவர் சித்தப்படி நடக்கும். கடவுள். அடுத்தது டிரம்ப்.

 

 

3. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், மூன்று விதமாக வேறுபடுகின்றன. எதை நம்புவது, எதை ஒதுக்குவது?

 

பதில்: வாக்கு எண்ணிக்கை முடியும் வரை உள்ள நேரத்தில் கிரிக்கெட் மாட்ச் பாருங்கள், சினிமா டிராமா பாருங்கள், கச்சேரிகளுக்குப் போங்கள், தியானம் செய்யுங்கள், சீக்கிரம் தூங்குங்கள். எந்தக் கருத்துக் கணிப்பையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், அதிகாரபூர்வமான தேர்தல் முடிவுகளை மட்டும் எதிர்நோக்குங்கள். உடம்புக்கு நல்லது.

 

 

4. கேள்வி: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், "தமிழகத்தில் காங்கிரஸ் இனி ஆட்சியில் இருக்கும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும். நடுநிலை இல்லை" என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே?

 

பதில்:  ஷோடங்கர் சொல்லாமல் விட்டது இது:

 

'நான் சொன்னபடி பின்னர் காங்கிரஸ் நடந்துகொண்டால், அது கட்சி ஏற்கனவே அறிவித்தபடி நடக்கிறது என்றாகும். நான் சொன்னதற்கு மாறாக பின்னர் காங்கிரஸ் நடந்துகொண்டால், கட்சி சார்பாக நான் முன்னர் பேசியதற்கு எனக்கு அதிகாரம் இல்லை, வழக்கம் போல் ராகுல் காந்திதான் எதிலும் இறுதி முடிவெடுப்பார் என்று அர்த்தம்.'

 

 

5. கேள்வி: வரப்போகும் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திமுக-வுக்குச் சாதகமாக வரும் என்று நம்பிக்கை தெரிவித்த மு.க. ஸ்டாலின், "எல்லாருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் திமுக ஆட்சி நடக்கிறது. அது தொடரும் என்பது உறுதி" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: முடியப் போகும் ஐந்தாண்டு திமுக ஆட்சியில் பங்கு கொண்ட திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், "எல்லாருக்கும் எல்லாம்" என்ற தத்துவத்தை கோணல்மாணலாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அந்தப் புரிதலோடு ஒரு ஆட்சி தொடர்வது நல்லதல்ல.

 

பகுதி 86//02.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr