|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே
இழுபறிக்குப் பின் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அதன் பிறகு காரில் ஏறவிருந்த
முதல்வர் ஸ்டாலின் சற்று நின்று, இளநீர்த்
தேங்காயைச் சீவுவது போல் தனது ஒரு உள்ளங்கையை சிறிதாகக் காற்றில் வீசிப்
பத்திரிகையாளர்களை நோக்கி ஒரு சைகை காண்பித்தார் - அதன் வீடியோ டிவி-யில்
வந்தது. "தொகுதி
உடன்பாடெல்லாம் முடிந்து, 'ஓவர்' என்று நான் பத்திரிகையாளர்களுக்குக் காண்பித்த சிக்னல்
அது, பின்னர் அது வைரல்
ஆகிவிட்டது" என்று ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறாரே? பதில்:
'தவெக-வுடன்
கூட்டணி வைத்துத் திமுக-வை வீழ்த்த நினைத்த காங்கிரஸை எங்கள் கூட்டணிக்குள்
இழுத்துச் சாய்த்து விட்டோம்' என்றும் முதல்வர் அந்தச் சைகை மூலம்
அறிவித்திருக்கலாம்! |
|
2. கேள்வி: அமெரிக்கா-இஸ்ரேல் தொடர்ந்த ஈரான் மீதான போர், ஆறு நாட்களாகியும் முடிவதாகத் தெரியவில்லை. இதுபற்றி
அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலைப்பட மாட்டாரா? பதில்:
டிரம்ப் எதைப் பற்றிப் பொறுப்புடன் கவலைப் படுவார் என்று யாரும் ஊகிக்க
முடியாது. ஆனால் இந்தப் போர் எப்போது முடிந்தாலும் இது டிரம்ப் முடித்துவைத்த
ஒன்பதாவது போர் என்பதை நோபல் கமிட்டி ஏற்றுக் கொண்டு, அவருக்கு அமைதிக்கான அடுத்த நோபல் பரிசு வழங்கப் படுமா என்பது அவரது
கவலையாக இருக்கும். |
|
3. கேள்வி: எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது அவருக்குப் பெரிய
அரசியல் பலம், அவரது சினிமா ரசிகர்கள்.
நடிகர் விஜய்க்கும் அப்படித்தான். ஆட்சியிலிருந்த திமுக-வை எதிர்த்து எம்.ஜி.ஆர்
தனது கட்சியை வளர்க்கத் தொடங்கினார். விஜய்யும் அதைச் செய்கிறார். இருவரின்
பிரதான நோக்கத்திற்கும் செயல்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு? பதில்:
எம்.ஜி.ஆர் அதிமுக-வைத் துவங்குவதற்கு
முன், அவர்
திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்டதால் பொதுமக்களிடமிருந்தும் ஒரு பரவலான அனுதாப
அலை அவருக்குக் கிடைத்தது. அவர் அதிமுக-வை ஆரம்பித்தபோது, திமுக-வின் சில முக்கியத் தலைவர்களும்
அவர் கட்சியில் சேர்ந்தனர், திமுக-வில் கருணாநிதியை விட எம்.ஜி. ஆரை
அதிகம் நேசித்த அக்கட்சியினர் பலர் அதிமுக-வுக்குத் தாவினார்கள். எம்.ஜி.ஆரின்
உடனடி அரசியல் ஏற்றத்துக்குக்கு உதவிய இந்தச் சூழ்நிலை விஜய் விஷயத்தில் இல்லை. எம்.ஜி.ஆர் அரசியல் ஞானி இல்லை. சினிமாவில் ஊற்றெடுத்த மக்கள் ஆதரவு
அவருக்கு அரசியலில் உச்சம் தந்தது, கடைசிவரை அவர் நிலைத்தார். விஜய்யும் அரசியல் ஞானி இல்லை. சினிமாப் புகழ் மூலம் கிடைத்த அவரது
அரசியல் பலம் குறிப்பிடத்தக்கது என்றாலும் அது எவ்வளவு விரிவானது என்பது
தெரியவில்லை. வரும் சட்டசபைத் தேர்தலில் கௌரவமான எண்ணிக்கையில் அவர் கட்சிக்கு
எம்.எல்.ஏ-க்கள் கிடைக்காவிட்டால் அவர் அரசியலில் நிலைத்து நிற்பாரா என்பது
இப்போது தெரியாது. திமுக-வுக்கு எதிரான ஓட்டுகளை இன்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை பிரதானமாகப்
பெறுகின்றன. திமுக மற்றும் அந்த மூன்று கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு -
அதில் அதிமுக-பாஜக கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து - விஜய் ஆட்சி அமைக்கும்
அளவுக்கு ஓட்டுகள் பெற்றால், அது எம்.ஜி.ஆர் செய்ததை விடவும் பெரிய
சாதனை - அதைக் கற்பனை செய்ய முடியவில்லை. இதைத் தவிர, எம்.ஜி.ஆரின் நடந்து முடிந்த தேர்தல் வெற்றிகளையும்
விஜய்யின் நடக்கப் போகும் தேர்தல் போராட்டத்தையும் ஒப்பிட்டு விஜய்யை இப்போது
மதிப்பிட முடியாது. வாக்காளர்களிடம் உள்ள அவருடைய செல்வாக்கின் அளவு, வரும் தேர்தலுக்குப் பிறகுதான்
அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆருக்கும் விஜய்க்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு இது. எம்.ஜி.ஆர்
மனதளவில் தேசியத்தை எதிர்த்ததாகத் தோன்றவில்லை. விஜய்யிடம் தேசிய சிந்தனை
மூடுமந்திரமாகத் தோன்றுகிறது. |
|
4. கேள்வி: அருப்புக்கோட்டையில் ரூபாய் 15,000 லஞ்சம் வாங்கியதாகக் கையும் களவுமாக ஒரு தொழிலாளர்
உதவி ஆய்வாளர் கைது செய்யப் பட்டிருக்கிறார். அரசு அலுவலகங்களில், கீழ் நிலையில் பரவியுள்ள லஞ்ச ஊழலை அமைச்சர்கள் தடுக்க
முடியாதா? பதில்:
அமெரிக்காவில், இங்கிலாந்தில், சிங்கப்பூரில், அரசு அலுவலகங்களின் கீழ் நிலையில் லஞ்ச
ஊழல் காணப்படாது. ஏனென்றால், மேல் நிலையில் - அதுவும் மிக உச்ச நிலையில்
- அங்கெல்லாம் கான்ட்ராக்டில் கமிஷன் மற்றும் லஞ்ச ஊழல் என்பவை இருக்காது.
இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது, புரிவதற்கு என்ன இருக்கிறது? |
|
5. கேள்வி: "அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாயக் குடும்பத்தில்
பிறக்க ஆசைப்படுகிறேன்" என்று தவெக தலைவர் விஜய் பேசி இருக்கிறாரே? பதில்: இந்த ஜென்மத்தில் அதிக விவசாயிகளின்
ஓட்டைப் பெறுவது விஜய்யின் குறி. அது புரியாத அப்பாவி ஜென்மங்கள் விவசாயிகள்
என்பது அவர் கணிப்பு. |
|
பகுதி 63 // 05.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |