Sunday 19 May 2024

“ஸ்டாலின்தான் காமராஜர்!” – ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் சிலிர்க்கிறார்!


          -- ஆர். வி. ஆர்


அசாத்தியமான ஒரு பிதற்றலைப் பிதற்றி, தான் அரசியலில் இருப்பதைக் காட்டி இருக்கிறார், ஈ. வி. கே. எஸ். இளங்கோவன். அவர் தமிழ்நாட்டில் ஒரு முன்னணி காங்கிரஸ் தலைவர்.


சமீபத்தில் இளங்கோவன்  பொதுமேடையில் பேசியபோது, “ஸ்டாலின்தான் காமராஜர்” என்று அதே வார்த்தைகளில் சொல்லவில்லை. ஆனால் அதே அர்த்தத்தில்,  “ஸ்டாலின் ஆட்சியைக் காமராஜர் ஆட்சி என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது” என்று பேசி இருக்கிறார்.


ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு, அதுவும் ஒரு தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவருக்கு, இளங்கோவனின் வார்த்தைகளைச் சொல்ல வெட்கமாக, கூச்சமாக இருக்க வேண்டும். இளங்கோவனுக்கு அந்தத் தடைகள் இல்லை.


காமராஜ் என்ற அரசியல் தலைவர் எளிமையானவர்,  தூய்மையானவர், தன்னலமற்றவர், மக்கள் நலம் சார்ந்தவர், தேசிய சிந்தனை உள்ளவர், மதிநுட்பம் கொண்டவர், நிர்வாகத் திறன் நிறைந்தவர், தலைமைப் பண்புகள் மேலோங்கியவர். 1954 முதல் 1963 வரை ஒன்பது வருடங்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகச் சிறப்பாக ஆட்சி செய்தவர். ஒரு அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக, முதல் அமைச்சராக, திமுக-வின் மு. க ஸ்டாலின் காங்கிரஸின் காமராஜுக்கு நூறு படிகள் கீழே இருக்கிறார். 


இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த ஜனநாயக நாடுகளில், சீரான ஊழலற்ற அன்றாட ஆட்சி நிர்வாகம் நிலவுகிறது. அங்கெல்லாம் வருவாய்த் துறை,  காவல் துறை, போக்குவரத்துத் துறை, பதிவுத் துறை போன்ற மக்கள் அதிகம் தொடர்பு கொள்ளும் அரசுப் பணி இடங்களில் லஞ்ச ஊழல் இருக்காது, முறைகேடுகள் நடக்காது. விதிவிலக்குகள் அபூர்வம். ஆனால் இந்திய நிலைமை வேறு. 


இந்தியா முதிர்ச்சி அடையாத ஜனநாயகம். மமூலான அன்றாட நிர்வாக ஊழல்கள் போக, அரசாங்க கான்டிராக்ட்டுகள், மது வியாபாரம், மணல் வியாபாரம், கனிமவளக் கொள்ளைகள், மாட்டுத் தீவன ஊழல், சனிமா உலகைச் சிறைப்பிடித்தல் என்று பல விதத்தில், பல இடங்களில் – முக்கியமாக, பெரிய இடங்களில் – ஊழல் பொதுவாக வியாபித்திருக்கும் நாடு இந்தியா.

 

இந்தியாவின் ஒரு பிரதேசத்தில் – அதுவும் 1967-க்குப் பிந்தைய தமிழகத்தில் – காமராஜ் போன்ற ஒரு முதல் அமைச்சர் இருந்தால்தான் மக்களைப் பண ரீதியில் இம்சிக்காத ஒரு நல்ல நிர்வாகம் சாத்தியமாகும். அந்த நல்ல நிர்வாகத்தை முடிந்த அளவுக்குச் செய்து காட்டும் எண்ணமும் முனைப்பும் மன உறுதியும் அவரைப் போன்ற ஒரு தலைவருக்கு மட்டும் உண்டு.  அதனால்தான் அத்தகைய ஆட்சியைக் காமராஜ் பெயரோடு ஐக்கியப்படுத்தி, அது காமராஜ் ஆட்சி என்று சொல்கிறோம். 

 

ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் கைசுத்தமானவரா, கைசுத்தம் உள்ள மற்றவர்களை அவர் அமைச்சர்களாக வைத்திருக்கிறாரா, கைசுத்தத்தை அவர் அரசு ஊழியர்களிடம் உண்மையில் எதிர்பார்க்கிறாரா, அதில் அவரது கண்காணிப்பு இருக்குமா, என்பதை அம்மாநில அரசு ஊழியர்கள் உடனடியாக உணர்வார்கள். அதற்கு ஏற்ப, பொதுமக்களிடம் அந்த அரசு ஊழியர்களின் அணுகுமுறை அமையும்.  

 

வேறு வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒரு மாநிலத்தில் மாறி மாறி முதல் அமைச்சர்களாக வரும்போது, அவர்கள் அனைவரும் கைசுத்தமாக இருந்து, தங்கள் அமைச்சரவையை அப்படி வைத்திருந்து, அரசு ஊழியர்களிடமும் அதை எதிர்பார்த்துக் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் லஞ்ச ஊழலற்ற அன்றாட நிர்வாகம் காலப் போக்கில் மாநிலத்தில் நிலைக்கும். இதில் கருணாநிதியின் திமுக ஆட்சி முன்பு எவ்வளவு மார்க் வாங்கியது, இப்போது ஸ்டாலின் ஆட்சி எவ்வளவு வாங்கி சோபிக்கிறது, என்பது ஸ்டாலின் அறிந்தது, இளங்கோவனும் அறிந்தது, மாநிலமே ஓரளவு அறிந்தது.

 

காமராஜ் ஒன்பது வருடங்கள் தமிழகத்தின் முதல்வராக ஆட்சி செய்தார். மு. க. ஸ்டாலின் இப்போது மூன்று வருடங்களாக அந்தப் பதவியில் இருக்கிறார். என்ன சொல்கிறார் இளங்கோவன்? இந்த மூன்று வருடத்திலேயே, காமராஜ் ஆட்சிக்கு நிகராகத் தான் ஆட்சி செய்வதை ஸ்டாலின் நிரூபித்து விட்டாரா? அதுவும் செந்தில் பாலாஜி, துரைமுருகன், பொன்முடி, உதயநிதி, சபரீசன் என்று பலரையும் பக்கத்தில் அணைத்துக் கொண்டு?

 

இன்னொரு விஷயம். ஸ்டாலினின் தந்தை கருணாநிதி இந்த மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்து சுமார் பத்தொன்பது வருடங்கள் ஆட்சி செய்தார். கருணாநிதி தனது ஆட்சியைச் சிறந்த ஆட்சியாக – காமராஜ் ஆட்சி போல – அத்தனை வருடமாகியும் நிரூபிக்கவில்லை என்று இளங்கோவனே நமக்கு உணர்த்த விரும்புகிறார். கருணாநிதி அப்படி ஒரு சிறந்த ஆட்சியைத் தமிழ்நாட்டிற்குக் கொடுத்தார் என்று இளங்கோவன் கருதினால், “ஸ்டாலின் ஆட்சிதான் கருணாநிதி ஆட்சி” என்றே இளங்கோவன் பேசி இருப்பாரே!


எல்லாம் போகட்டும். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் சுயலாப, மக்கள் விரோத அரசியல் செய்பவை என்று கணித்து, அவை இரண்டையும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று கண்டனம் செய்தவர் காமராஜ். அந்த திமுக-வின் இன்றையத் தலைவர் ஸ்டாலின் தனது கட்சியின் கொள்கைகளை, போக்கை, தலைகீழாக மாற்றிக் கொண்டு, தானும் புனிதப்பட்டு, இப்போது காமராஜை நினைவூட்டும் விதமாக நல்லாட்சி தருகிறார் என்று இளங்கோவன் புளகாங்கிதம் அடைகிறார். 

 

இளங்கோவனை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் விஷயம்.  

  

திமுக-வில் இப்போது ஸ்டாலின்தான் பெரிய முக்கியஸ்தர். ‘ராகுல் காந்தி, ஜவஹர்லால் நேருவைப் போன்ற ஆட்சி தருவார் என்று புகழ்வதைவிட, ஸ்டாலின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று பொதுவெளியில் சிலாகித்தால், ஸ்டாலினின் தயவு கிடைக்கும், மாநிலத்தில் நாம் பயன் பெறலாம்' என்று இளங்கோவன் நினைத்திருக்க வேண்டும்.


கட்சி மானத்தைத் திமுக-வின் காலடியில் வைத்துத் தமிழகத்தில் பிழைக்க வேண்டிய பரிதாப நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. கட்சி நிலைமையே அது என்றால், அதன் மாநிலத் தலைவர் ஒருவர் தன்னைத் திமுக-விடம் தனியாகப் பாதுகாத்து விசேஷமாகப் பிழைக்க நினைக்கலாம். அவர் வேறு எப்படிப் பேசுவார்?   


* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

Sunday 28 April 2024

“90 சதவிகித மக்களுக்கு அநீதி நடக்கிறது!” -- பிதற்றுகிறார் ராகுல் காந்தி!


          -- ஆர். வி. ஆர்                       

 

 

      நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

 

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.”

 

“ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்தால், அப்படியான எக்ஸ்-ரே எடுத்தால், நாட்டில் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்தான் ஏழைகள் என்பது தெரியவரும்.”

 

“ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது எனது அரசியல் அல்ல, அது என் வாழ்க்கையின் நோக்கம்.”

 

“இன்று 90 சதவிகித இந்திய மக்களுக்கு அநீதி இழைக்கப் படுகிறது.”  

 

”90 சதவிகித மக்களுக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும்.”

 

சுருக்கமாக, ராகுல் காந்தி சொன்னது இது: ‘இந்தியாவில் 100-க்கு 90 நபர்கள் ஏழைகள். அந்த 90 பேரும் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடி ஜாதியினர். மீதி 10 சதவிகித மக்கள் வேறு ஜாதியினர், அவர்கள் ஏழைகள் அல்ல, அவர்களிடம் சொத்து சுகம் உள்ளது. நாட்டின் 90 சதவிகித மக்களுக்கு, அதாவது நாட்டின் ஏழை மக்களுக்கு, அந்த ஏழைகள் சார்ந்த ஜாதியினருக்கு, அநீதி நடக்கிறது. அதற்கான தீர்வின் முதல் படி, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு.’


ராகுல் காந்தி நேராகப் பேசவில்லை. 

 

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், நமது ஏழை மக்களுக்குக் கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், சாலைகள், இருப்பிடம், என்று சீராக, படிப்படியாக, அடிப்படை வசதிகளை ஒரு அரசால் திட்டமிட்டு ஏற்படுத்தவே முடியாதா – மக்கள் நலனைக் குறிவைத்தும், பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு அங்கமாகவும்? 

 

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏதும் நடத்தாமல், உலகமே வியக்க 2021-ல் துவங்கி இந்திய மக்கள் அனைவருக்கும் இரண்டு வருடங்களில் நரேந்திர மோடி அரசு கொரோனா தடுப்பூசி வழங்கியதே?  ஏதாவது புரிகிறதா, ராகுல் காந்திக்கு?

 

ராகுல் இப்படியாவது யோசித்தாரா? இதுவரை மொத்தமாக சுமார் 55 ஆண்டுகள் காங்கிரஸ் பிரதம மந்திரிகள் மத்திய அரசை வழிநடத்தினர். அவர்களில், ராகுல் காந்தியின் அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோர் உண்டு. 55 ஆண்டுகால காங்கிரஸ் பிரதமர்களும், ஏழை மக்களைக் கைதூக்கிவிட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் என்று புரியாமல், அதை நடத்தாமல், நாற்காலியைத்  தேய்த்துவிட்டுப் போனார்களா?

 

 இல்லையென்றால், கடைசி காங்கிரஸ் பிரதமரின் பதவிக் காலமும் முடிந்து, நரேந்திர மோடி 2014-ல் பிரதமர் ஆன பின்புதான் நாட்டில் ஏழைகள் தோன்ற ஆரம்பித்தார்களா, அவர்கள் விர்ரென்று அதிகரித்து 90 சதவிகிதம் ஆகிவிட்டனரா?

 

90 சதவிகித மக்கள்  ஏழைகள், அவர்களுக்கு அநீதி நடக்கிறது, என்று பேசினால் என்ன அர்த்தம்? மீதி 10 சதவிகிதத்தினர் தான் அந்த 90 சதவிகித மக்களுக்கு  அநீதி செய்கின்றனர் என்று அர்த்தமா? அல்லது, சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆனாலும், தங்கள் முயற்சியால், திறமையால் நமது அரசாங்கத்தையும் சகித்து அதோடு போராடி ஏழ்மையிலிருந்து மீள முடிந்தவர்கள் நாட்டில் 10 சதவிகிதத்தினர் தான், அந்த அளவுக்கு இந்திய அரசாங்கம் முன்னர் பல வருடங்களாகவே தூங்கியது, பொதுமக்களை உதாசீனம் செய்தது, என்று அர்த்தமா?

 

உண்மை என்னவென்றால், வலுவான அரசியல் தலைமை, தொலைநோக்குப் பார்வை, பயனுள்ள பொருளாதாரத் திட்டங்கள், திறமையான நேர்மையான நிர்வாகம், ஆகியவை நமது மத்திய அரசிலிருந்து நடுவில் பல வருடங்கள் காணாமல் போயின. பல மாநில அரசுகள் படு மோசம். இவைதான் நமது மக்கள் பின்தங்கி இருக்க முதன்மைக் காரணங்கள்.

 

சாதாரண இந்திய மக்கள் நல்லவர்கள், ஆனால் அப்பாவிகள். நமது அநேக அரசியல் தலைவர்களின் பதவிப் பித்தை, சுயலாபக் கணக்குகளை, சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இது ராகுல் காந்திக்கு ஒரு பலம். 

 

பொதுவாக இந்திய ஹிந்துக்களுக்கு மதத்தை விட, ஜாதியின் மீது பற்று அதிகம். ஜாதி அடிப்படையில் அவர்களிடம் அனுதாபம் காட்டுவது போல் அவர்களை அணுகி,  “இந்தியாவில் நீங்கள் 90 சதவிகிதம். உங்களுக்கு அநீதி நடக்கிறது. மற்ற ஜாதியினருக்கு அநீதி நடக்கவில்லை. தேசத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுத்து, உங்கள் ஜாதியினர் அனைவரையும் அநீதியிலிருந்து மீட்டுக் கரையேற்ற நான் இருக்கிறேன்” என்று ஒரு தலைவர் சொன்னால் என்ன அர்த்தம்? அவர் பேசுவதின் அர்த்தம் விலாவாரியாக இதுதான்.

 

 ’90 சதவிகித மக்களே! மீதம் 10 சதவிகித மக்களிடம் இருக்கிற சொத்து சுகங்கள், உங்களிடம் இருப்பதை விட மிக அதிகம். அவர்கள் மட்டும் அப்படி முன்னேறியதால், அவர்களை அப்படி வளர விட்டதால், நீங்கள் ஏழைகளாக விடப் பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்குச் செய்யப்பட்ட அநீதி.‘

 

’90 சதவிகித மக்களே! உங்கள் நிவர்த்திக்கான முதல் நடவடிக்கை, நாடு முழுவதுமான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு. என்  தலைமையிலான மத்திய அரசு அதைச் செய்யும். உங்களில் யார் யார் என்ன ஜாதி, நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், என்பதை ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காண்போம். மற்ற 10 சதவிகித மக்கள் யார் யார், அவர்கள் என்ன ஜாதி, எங்கு வசிக்கிறார்கள், அவர்களின் சொத்து சுகம் என்ன என்பதும் அந்த எக்ஸ்-ரே கணக்கெடுப்பில் தெரியும்.‘

 

’90 சதவிகித மக்கள், 10 சதவிகித மக்கள், இரு தரப்பினரையும் இப்படி அடையாளம் கண்டபின், இரண்டு பக்கத்து மனிதர்களின் சொத்து சுகங்கள் சமமாக அமையும்படி எனது அரசு தேவையானதைச் செய்யும் – அதாவது, அந்த 10 சதவிகித மக்களிடம் உள்ள சில சொத்துக்கள் உங்களிடம் லபக் என்று வந்து சேரலாம்’

 

இந்த ரீதியில் தனது பேச்சை அந்த சாதாரண மக்கள் புரிந்து கொள்ளட்டும் என்று அந்தத் தலைவர் நினைப்பதாக ஆகும். ‘மக்கள் எப்படியோ ஏமாந்து என் கட்சிக்கு ஓட்டளித்தால் சரிதான். நான் எப்படித்தான் பிரதமர் ஆவது?’ – என்றும் அந்தத் தலைவர் நினைப்பதாக ஆகும்.

 

பரிதாப நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல், அதற்கான நல்லெண்ணமும் திராணியும் இல்லாமல், அவர்களை அந்தத் தலைவர் வஞ்சிக்க நினைப்பதாகவும் அர்த்தம். ராகுல் காந்தி  வேறு மாதிரியாகவா நினைப்பார்?

 

ஆனால் ஒன்று. இந்தியாவில் நீங்கள் ஒரு ஜாதியைச் சேர்ந்தவராக இல்லாமல், ஜாதி ரீதியாக, ஜாதி அடிப்படையில், அந்த ஜாதி மக்களின் மனதை வசீகரிக்க முடியாது, அவர்களை நீங்கள் ஜாதி ரீதியாக அணுகி அவர்களின் ஜாதித் தலைவர் மாதிரி – அதுவும் ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான ஜாதிகளின் தலைவர் மாதிரி – ஆக முடியாது.  ஆகையால் ராகுல் காந்தியின் புதிய பித்துக்குளிப் பேச்சு அவருக்கு உதவாது.

 

இன்னொன்று. ஹிந்துக்கள் பொதுவாக விதியை நம்புகிறவர்கள்.  அசிரத்தையால் ஒரு அரசாங்கம் தங்களை வாட்டி வதைத்தாலும், யார் எப்படிப் பிழைத்தலும், பணம் சேர்த்தாலும், தங்கள் கஷ்டம், தங்கள் ஏழ்மை, ஆகியவை தங்களின் விதி வசம் என்று பொறுத்துப் போகிறவர்கள். அவர்களிடம் போய், “90 சதவிகித மக்களே! பத்து சதவிகிதம் உள்ள வேறு ஜாதி மக்கள் மட்டும் சொத்து சுகத்தோடு இருக்கிறார்கள். நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டால், 90 மற்றும் 10 ஆகிய இரண்டு தரப்பினரையும் சொத்து சுகத்தில் ஒரே அளவுக்கு சமன் செய்கிறேன்” என்று பேசினால் அது எடுபடாது. ராகுல் காந்திக்கு இதுவும் புரியாதே?

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Thursday 25 April 2024

“மக்களே! மறக்காம என் மறைவுக்கு வந்துருங்க!” – மல்லிகார்ஜுன் கார்கே வினோத அழைப்பு!


-- ஆர். வி. ஆர்


காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

 

சமீபத்தில் கர்நாடக மாநிலம், கலபுர்கி லோக் சபா தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துவந்தார் கார்கே. அப்போது மேடையில் நின்று மக்களை நோக்கி, “நீங்கள் என் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி ஊர்வலத்துக்கு வந்து விடுங்கள்” என்று தத்தக்கா பித்தக்கா என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசினார்.

 

 ஒருவேளை கலபுர்கியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கார்கே நினைத்திருக்கலாம். அதற்காக, இப்படி உணர்ச்சி  பூர்வமாக – அதுவும் இறப்பு நிகழ்ச்சி என்றெல்லாம் – பேசினால் மக்கள் பரிதாபத்தில் உருகி சற்று அதிகமானவர்கள் தனது கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவார்கள், காங்கிரஸ் கட்சி அங்கு ஜெயிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். எதுவானாலும் இது வடிகட்டின அசட்டுப் பேச்சு.

 

ஒரு வருடம் முன்பு திமுக மாநில அமைச்சர் துரை முருகன், முதல்வர் ஸ்டாலினை அருகில் வைத்துக்கொண்டு, “நான் மறைந்த பிறகு, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என்று எழுதுங்கள்” என்று பேசி, கட்சியிலுள்ள மற்ற தலைவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஸ்டண்ட் அடித்தார். அதை மனதில் வைத்து, ‘இப்போது அரசியலில் பல தலைவர்களும் மலிவாகப் பேசுகிறார்கள். மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சும் அது மாதிரித்தான்’ என்று நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயமில்லை இது. 

 

துரைமுருகன் பேசியது, அக்மார்க் திமுக பாணி. இது போன்ற பேச்சு, இந்த அளவிலான மற்ற செயல்கள், திமுக-வுக்கே உரித்தானது.

 

சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பாக, திமுக-வின் மு. கருணாநிதி ஒரு காரியம் செய்தார். அப்போது திமுக நடத்திய ஒரு போராட்டத்தின் பகுதியாக, திருச்சிக்கு அருகில் ‘டால்மியாபுரம்’ என்றிருந்த ஒரு ரயில் நிலையத்தின் பெயரை ‘கல்லக்குடி’ என்று பெயர் மாற்றக் கோரியது அக்கட்சி.  அந்த சமயத்தில், அந்த ஊர் ரயில் நிலையத்திற்குள் கட்சிக்காரர்களுடன் சென்று ரயில் தண்டவாளத்தில் படுத்து, அங்கிருந்து கிளம்பவிருந்த ரயில் புறப்படாமல் ஸ்டண்ட் செய்தார் கருணாநிதி – என்ன இருந்தாலும் ரயில் தன் மீது ஏறாது என்ற நிச்சயத்தில். கருணாநிதிக்கு அப்போது வயது 29. இதனால் அரசியலில் சில படிகள் முன்னேறினார் கருணாநிதி.  

 

சமீபத்தில் தனது 84-வது வயதில், துரை முருகன் தன்னால் முடிந்த ஸ்டண்டைத் தன் ‘கல்லறைப் பேச்சு’ மூலமாகவே செய்துவிட்டார் – திமுக வழியில்.  ஆனால் மல்லிகார்ஜுன் கார்கே பிதற்றியது, தலை சிறந்த காங்கிரஸ் முன்னோடிகளிடம் அவர் கற்ற பாடத்தினால் அல்ல.  

 

திமுக அன்றுபோல் இன்றும் மலிவான பேச்சு, கண்ணியம் குறைந்த செயல்கள், ஸ்டண்ட் நடவடிக்கைகள்,  என்றுதான் அரசியல் செய்கிறது. ஆனால் திறமைக்கும் கண்ணியத்திற்கும் பொதுவாழ்வில் அர்ப்பணிப்புக்கும் ஒரு காலத்தில் பெயர்போன காங்கிரஸ் கட்சி, இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமையில், எல்லா வகையிலும்  தாழ்வுற்று நிற்கிறது. இந்தப் பெரும் சோகத்தின் ஒரு அடையாளம், காங்கிரஸ் கட்சியின் பொம்மைத் தலைவராக (‘பிரஸிடெண்ட்’ என்று) பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேயும் அவரது பேச்சும் செயல்களும்.  

 

திமுக தலைவர் கருணாநிதி, தன் கட்சிக்குள் தனது மகன் மு. க. ஸ்டாலினை உயர்த்திவிட, ஸ்டாலினுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பொறுமையாகச் செயல்பட்டு வந்தார்.  எதிர்பார்த்தபடி அதைக் கட்சியில் அனைவரும் ஏற்றனர். இப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது மகன் உதயநிதி ஸ்டாலினை எப்படி வேகவேகமாகக் கட்சிக்குள் முன்நிறுத்துகிறார், ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் எப்படி அசாத்தியமாகத் தொழில் செய்கிறார், கட்சிக்குள் இருக்கும் மற்ற தலைவர்கள் அந்த இருவரை எப்படி விழுந்து விழுந்து வரவேற்கிறார்கள், வணங்குகிறார்கள், என்பதும் வெளிப்படை.  

 

காங்கிரஸ் கட்சி இப்போது கௌரவம் இழந்து சீரழிந்து விட்ட நிலையில், அதன் தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது பேச்சில் திமுக மாதிரி கட்சிகளின் பாணியைக் காப்பி அடிக்கிறார்கள். இதில் ஸ்டாலினோடு போட்டிபோட்டு அவரை மிஞ்சுகிறார் ராகுல் காந்தி. அதே பொறுப்பற்ற வகையில், ஆனால் ராகுலை மிஞ்சி விடாமல், கலபுர்கியில் பேசி இருக்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே.

 

சரி, மல்லிகார்ஜுன் கார்கே இப்படி உணர்ச்சி பூர்வமாகப் பிதற்றுவதற்கு ஏன் கலபுர்கி லோக் சபா தொகுதியைத் தேர்ந்தெடுத்தார்? மனிதர் காரண காரியமாகத் தான், திடீரென உணர்ச்சியில் உருகித் தனது கடைசிப் பயணத்துக்குக் கலபுர்கி மக்களைக் கண்ணில் நீர் மல்க அழைத்துவிட்டார். இதில் திமுக-வின் சாயல் பெரிதும் உண்டு. கலபுர்கி தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தி இருக்கும் வேட்பாளர் வேறு யாருமல்ல, அவர் மல்லிகார்ஜுன் கார்கேயின் மாப்பிள்ளைதான்!

  

அடுத்த படியாக, தமிழகத்தில் நோஞ்சானாய் இருக்கும் தமது கட்சியைப் பெரிதாய் வளர்க்க, தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் பேச்சிலும் செயலிலும் என்ன புதுமையைக் கடைப் பிடிப்பார்களோ? மேல்மட்டத்தில் காங்கிரஸ் இப்போது கெட்ட கேட்டில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இனி எப்படியெல்லாம் திமுக வழியில் செல்வார்களோ, அவர்களுக்கு மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சு எப்படி உதாரணமாகத் திகழுமோ, என்றெல்லாம் யாராவது கணிக்க முடியுமா?   


* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Sunday 21 April 2024

"ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வருடம் லட்ச ரூபாய் தருவோம்" - பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!


 

          -- ஆர். வி. ஆர்

 

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி - இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.


"மத்தியில் அமையும் காங்கிரஸ் அரசு, இந்தியாவின் ஒவ்வொரு ஏழ்மைக் குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு வருடம் தோறும் அவரது வங்கிக் கணக்கில் லட்ச ரூபாய் செலுத்தும். மாதம் அது கிட்டதட்ட எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகிறது.”

 

“நீங்கள் ஒரு வேலை பார்க்கலாம்.  இருந்தாலும் உங்கள் குடும்பம் ஏழ்மைக் குடும்பமாக இருந்தால், உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் என்ற வகையில் வருடம் தோறும் லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் நீங்கள் எந்த நாள் வரை இருக்கிறீர்களோ, அந்த நாள் வரை உங்கள் வங்கிக் கணக்கில் மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய், அதாவது வருடத்திற்கு லட்ச ரூபாய், டாண் டாணென்று வந்து கொண்டிருக்கும். இப்படியாக ஒரே வீச்சில் நாங்கள் நாட்டின் வறுமையை ஒழித்துவிடுவோம்."

 

சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த ஒரு பெரிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இந்த வார்த்தைகளை ஹிந்தியில் பேசினார். அதன் வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது. முன்னதாகக் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது. அதில் இந்த ‘ஒரு லட்ச ரூபாய்’ வாக்குறுதியும் சொல்லப்பட்டிருந்தது.


ராகுல் காந்தியைத் தவிர, இந்த வாக்குறுதியை இப்படித் தம்பட்டமாக, தடபுடலாக, ஜிகினா அலங்காரங்கள் செய்து, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சொல்லக் காணோம். இந்த வாக்குறுதியை ராகுல் விளக்கிய விதத்தில் உள்ள பைத்தியக் காரத்தனமும் அரசியல் பிராடும் ராகுல் காந்திக்கு விசேஷமாக  உரித்தானவை.

 

ஒரு நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்போது அதிகரிக்கும்? அவர்களின் வருமானம் நிஜத்தில் எப்போது கூடும்அவர்களின் பொருளாதார நிலை எப்போது உயரும்? ஒரு நாடு சிறந்த பொருளாதாரத் திட்டங்களை வகுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்தி, நாட்டில் தொழில் பெருகி உற்பத்தியும் சேவைகளும் அதிகரித்தால் தவிர – அரசு மட்டத்தில் லஞ்ச ஊழலைக் கட்டுப் படுத்தி, பொதுச் சொத்து விரயம் ஆவதையும் தடுத்தால் ஒழிய – மக்களுக்கு அந்தப் பயன்கள் கிடைக்காது

 

ராஜஸ்தானில் பேசிவிட்டு மறுநாள் இன்னொரு மாநிலத்தில் மேடை ஏறிய ராகுல் காந்தி, இந்தியாவில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் 83 சதவிகிதம் பேர் இளைஞர்கள் என்று சொன்னார். அப்படியானால், திருமண வயதை அடைந்தவுடன், ஏதோ வேலை இருக்கிறதோ இல்லையோ, எல்லா ஆண்களும் டும்டும் செய்து கொள்ள வேண்டியதுதான், புதுப்புது குடும்பங்களுக்கு மாதம் சுமார் 8,500 ரூபாய் கிடைக்கும் என்கிறார் ராகுல் காந்தி.  இந்த வாக்குறுதி அரசைப் போண்டி ஆக்குவது மட்டுமல்ல, வேறு வகைகளிலும் விபரீதம் செய்யும்.

 

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த வருடங்கள் கூட்டாக 38.  ஒரு பிரதமரின் சிண்டைப் பிடித்து அவர் கையைக் கட்டி மத்தியில் சோனியா காந்தி அதிகாரம் செலுத்திய வருடங்கள் 10. ஆக மொத்தம் 48 ஆண்டுகள் நேரு குடும்பம் மத்திய அரசில் கோலோச்சியது. ராகுல் காந்தி சொல்லும் மிக எளிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை சிந்திக்காத மண்டூகங்களா அவரது அம்மா, அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா?

 

இந்த லட்ச ரூபாய்ப் பணத்தை உத்தேசமாக எத்தனை குடும்பங்களுக்கு மத்திய அரசு இனாமாக அளிக்க வேண்டி இருக்கும், எத்தனை வருடங்கள் தரவேண்டி இருக்கும், அதற்கான ஆண்டுச் செலவு எவ்வளவு, அந்தப் பணத்திற்கான மூல ஆதாரம் என்ன, என்று ஒரு விவரமும் காங்கிரஸ் கட்சியோ ராகுல் காந்தியோ தரவில்லை.

 

உலகில் பல நாடுகளில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் தவிக்கின்றன. அவை எல்லாம் தங்கள் குடிமக்களுக்கு ஒரு லட்சம், ரண்டு லட்சம் என்று ஒவ்வொரு வருடமும் பணம் கொடுத்து வந்தால் உலகத்தின் எல்லா மூலைகளிலும் ஏழ்மை விரட்டி அடிக்கப் படுமே?

 

கடந்த 45 வருடங்களாகச் சீனா அந்நிய முதலீடுகளை ஈர்த்து, உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, பொதுக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகிறது. அந்த நாடு ஏன் ராகுல் காந்தி பார்மூலவைப் பின்பற்றாமல் திடமான கடின வழியில் முன்னேறுகிறது?

 

எப்படிப் பார்த்தாலும் ராகுல் பேசியது குப்பை என்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடியும். இது நிஜத்தில் நடக்காது என்று அவர்களும் நினைப்பார்கள். இருந்தாலும், தலைக்கனம் ஏறிய ஒரு பணக்காரன் ஒரு பிச்சைக்காரனிடம், “அடுத்த மாதம் உன் திருவோட்டில் ஆயிரம் ரூபாய் போடுகிறேன்” என்று சொன்னால், அதை நம்ப முடிக்கிறதோ இல்லையோ அதைத் தேமே என்று கேட்டுப் போவான் அந்தப் பிச்சைக்காரன். அப்படித்தான் ராகுல் பேச்சைக் கேட்ட சாதாரண மக்கள் இருப்பார்கள். அந்த நிலையில்தான் அவர்களை நீடித்து வைத்திருக்கிறார்கள் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள். 

 

ராகுலின் ராஜஸ்தான் பேச்சு டுபாக்கூர் பேச்சு என்பது எல்லா காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும். அவர்களின் முதல் பெரிய பிரச்சனை ராகுல் காந்தியும், பிள்ளைப் பாசம் மிக்க சோனியா காந்தியும்தான்.

 

திறமையும் தேசப் பற்றும் சுய மரியாதையும் உள்ள இளைஞர்கள் எவரும் காங்கிரஸுக்கு வரமுடியாமல், கட்சிக்குள் வளர முடியாமல், ஒதுங்கிப் போகிறார்கள். அதற்குக் காரணம், இந்த இருவரின் ராஜ தோரணை, எதேச்சாதிகாரம், மற்றும் தீராத பதவி மோகம். இந்த இருவருக்குச் சாமரம் வீசி, சலாம் போட்டு, கைகளும் தட்டி, தங்களின் ஆதாயத்தைக் கவனித்துச் சுகிக்கிறார்கள் கட்சியின் அடுத்த கட்ட சீனியர் தலைவர்கள்.  

 

சரி, காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை அந்தக் கட்சி பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் ராகுல் காந்தியின் ராஜஸ்தான் பேச்சின் போது அவர் நெஞ்சோடு நெஞ்சாக வைத்திருந்த துருப்புச்சீட்டைக் கவனித்தீர்களா?

 

ராகுல் காந்தி அறிவித்த லட்ச ரூபாய் வாக்குறுதியை, மத்தியில் அமையும் ‘காங்கிரஸ்’ அரசு நிறைவேற்றும் என்றார் அவர். ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில் வென்று மத்தியில் ‘காங்கிரஸ்’ அரசை நிச்சயம் அமைக்கப் போவதில்லை. அந்தக் கட்சி போட்டியிடப் போவதே மொத்தம் சுமார் 330 இடங்கள்தான் என்றும் செய்திகள் வருகின்றன.

 

சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ. பி ஆகிய மூன்று மாநிலங்களில் நாங்கள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொண்டோம். காரணம், நாங்கள் வலுவான ‘இண்டி’ கூட்டணி அமைக்க விரும்பினோம். காங்கிரஸும் இண்டி கூட்டணியும் மக்களின் தெளிவான தீர்ப்பைப் பெறும்”  என்று, மத்தியில் அமையப் போகும் ஆட்சி இண்டி கூட்டணியின் ஆட்சிதான், காங்கிரஸ் ஆட்சி அல்ல, என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டத்தை அவர் அறிவித்துவிட்டார்.

 

காங்கிரஸ் கட்சியே தனது ஆட்சி அமையாது என்று அறிந்து, இண்டி கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்பட்டுக் காத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, “காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வருஷா வருஷம் லட்ச ரூபாயைக் காங்கிரஸ் அரசு செலுத்தும். இவ்விதமாக வறுமையை ஒழிப்போம்” என்று ஓட்டுக்காகப் பொது மக்களிடம் ராகுல்  காந்தி பேசினால் என்ன அர்த்தம்? பிள்ளை பிடிக்க அலைபவன், கிடைக்கிற சிறுவர்களிடம் பேசும் ஆசை வாரத்தைதானே இது?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

  

 


Tuesday 16 April 2024

‘இண்டி’ கூட்டணியில் ஏன் பிரதமர் வேட்பாளர் கிடையாது? ஸ்டாலின் அற்புத விளக்கம்!

  

          -- ஆர். வி. ஆர் 

 

நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. “யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மக்கள் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தலின் குறிக்கோள் – யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை அல்ல” என்று ஒருவர் பிதற்றினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  சிரிப்பீர்கள். அவரே, தமிழக முதல்வர்  ஸ்டாலினாக இருந்தால்?  சற்றுப் பெரிதாக சிரிப்பீர்கள்.


சமீபத்தில் ‘ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில்தான் ஸ்டாலின் அப்படிப் பேசி இருந்தார்.

 

ஒரு பதவிக்குப் பலர் ஆசைப்படும்போது, அதற்காக அவர்கள் போட்டியிடும்போது, போட்டியாளர்களில் அந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார் என்பதை சம்பத்தப்பட்டவர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்யும் வழிமுறை தேர்தல். இதை ஆங்கிலத்தில் elect (எலெக்ட்) செய்வது என்றும், இந்த வழிமுறையை  election (எலெக்ஷன்) என்றும் சொல்கிறோம்.

 

ஜனநாயகத்தில் பெரும்பான்மை பெற்ற ஒரு அணியையோ அல்லது கட்சியையோ  அரசு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தும் முறை இருக்கிறது, அந்தப் பெரும்பான்மை தேர்தல் மூலமாகத் தீர்வு செய்யப்படுகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.

 

மக்கள் ஓட்டுப் போட்டு, தேர்தல் மூலம் ஒரு பதவிக்கு ஓருவர் தேர்வானால் – கவுன்சிலராகவோ, சட்டசபை உறுப்பினாராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினாராகவோ – அதன் மறுபக்கமாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்றவர்கள் தேர்வாகவில்லை என்று ஆகிவிடுகிறது. ஆனால் தேர்தலின் நோக்கம் என்ன? யார் ஒருவர் தேர்வாகிப் பதவிக்கு வந்து செய்யலாற்ற வேண்டும் என்பதா? அல்லது ஸ்டாலின் சொல்ல வருவது போல், எந்தப் போட்டியாளர் தோற்றுப் போகவேண்டும் என்று முதலில் தீர்மானிக்கப் பட்டு, எஞ்சியவர்களில் ஒருவர் – அந்த மனிதர் எப்படியானவராக இருந்தாலும் – ஜம்மென்று பதவி நாற்காலியில் அமர்ந்து அவருக்குத் தோன்றுகிற, அவரால் முடிகிற, வேலைகளைப் பார்க்கட்டும் என்பதா?

 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இன்னும் புரியவில்லையா? சரி, அவருக்காகத் தேர்தலின் நோக்கத்தை இப்படி விளக்கலாம்.    

 

தேர்தல் என்பது ஒரு வகையில் ஓட்டப் பந்தயம் மாதிரி. ஓட்டப் பந்தயத்திற்கு ஒரு நடுவர் உண்டு. அவர் என்ன செய்வார்? ஓடும் விளையாட்டு வீரர்களில் யார் முதலில் எல்லைக் கோட்டைக் கடந்தார் என்று பார்த்து, எந்த விளையாட்டு வீரர் ஜெயித்தார், இரண்டாவதாக, மூன்றாவதாக வந்த வீரர்கள் யார் யார் என்றும் பார்த்து, போட்டியின் முடிவுகளை நடுவர் அறிவிப்பார்.  

 

எந்த ஓட்டப் பந்தயமும் நடப்பது எதற்கு? தோற்பவர் யார், அதுவும் மிகக் கடைசியில் வருபவர் யார், என்று தீர்மானித்து அதை அனைவரும் தெரிந்துகொள்ளவா? அல்லது, எந்த விளையாட்டு வீரர் முதலாவதாக வரப் போகிறார் என்று பார்த்து அவருக்குத் தங்கப் பதக்கம் அளித்து கவுரவிப்பதா? 

 

முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாதா? அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் காரண காரியமாகத் தனது பேட்டியில் இப்போது பிதற்றி இருக்கிறார். இதே பிதற்றலை அவரது ‘இண்டி’ கூட்டணியின் மற்ற தலைவர்களும்  வேறு வழியில்லாமல் பல சமயங்களில் பேசி இருக்கிறார்கள்.

 

நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறை மத்தியில் ஆட்சி அமைக்கும், பாஜக-வின் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆவார் என்பது நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பு மற்றும் கணிப்பு.  தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றிருக்கின்றன. மோடியை எதிர்த்து, பாஜக-வை வென்று, மத்தியில் தாங்கள் கூட்டாக ஆட்சி அமைக்க முடியும் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூட நம்பவில்லை.

 

திமுக, காங்கிரஸ் என்று ‘இண்டி’ கூட்டணியில் 28 கட்சிகளோ என்னவோ இருக்கின்றனவாம். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்தால், அதன் சிறந்த நடவடிக்கைகளால்,  பத்து வருடங்களாக எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. கஷ்டத்தையாவது தாங்கலாம், நஷ்டத்தைச் சொல்லவும் முடியவில்லை, நீண்ட காலம் தாங்கவும் முடியவில்லை. அவர்களின் நஷ்டம், அவர்களின் வேதனை, அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

 

தனித் தனியாக மோடியை எதிர்த்து மாளவில்லை என்பதால் கூட்டுசேர்ந்து, கசப்புடன் தமக்குள் தொகுதிகளைப் பங்கீடு செய்துகொண்டு, பாஜக-வை இந்தத் தேர்தலில் எதிர்க்கின்றன ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள். ஆனாலும், இந்தத் தேர்தலில் தங்கள் கூட்டணி ஜெயித்தால் தமக்குள் இன்ன கட்சியின் இன்ன தலைவர்தான் பிரதமராக வருவார் என்று இந்தக் கூட்டணிக் கட்சிகள் எதையும் தங்களுக்குள் ஏற்றுக் கொண்டு அறிவிக்கத் தயாரில்லை. காரணம்: தான் பிரதமராக வந்தால் தனக்கு அதிக லாபம், தனக்கு அதிகப் பயன், என்று அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். பிறகு அந்த மகா பெரிய அனுகூலத்தைக் கூட்டணியில் உள்ள மற்ற ஒரு கட்சியின் தலைவருக்கு முன்னதாகவே தாரை வார்த்துவிட அந்தக் கூட்டணித் தலைவர்கள் என்ன மக்குகளா? இப்போது விட்டுக் கொடுத்தால் அடுத்த சான்ஸ் கிடைக்குமா, எப்போது கிடைக்கும் என்று யாருக்குத் தெரியும்?

 

தமக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவிக்க முடியாததால், அதை நேரடியாகச் சொல்லவும் முடியாமல், ‘இந்தத் தேர்தல் நடப்பது, யார் ஜெயித்து வரக் கூடாது என்பதற்காக’ என்று அந்தக் கூட்டணித் தலைவர்கள் ஏதோ பிதற்றி மகிழ்கிறார்கள். அப்படிப் பேசி, தங்களின் தீராத பரஸ்பரப் போட்டியையும் பொறாமையையும் மறைக்க  முனைகிறார்கள். அதுதான் விஷயம்.

 

‘நமது கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை, நமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. நம்மில் எவரும் பிரதமர் ஆகப் போவதில்லை. நம்மில் எவருக்கும் கிடைக்க முடியாத வெற்றிப் பழத்திற்கு நாம் ஏன் முன்னதாக அடித்துக்கொள்ள வேண்டும்?’ என்ற நடைமுறை சிந்தனைதான், ஸ்டாலினும் மற்ற ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாக ஒரே மாதிரிப் பிதற்றி வருவதின் காரணம்.  

 

ஏதோ இந்த வரையிலாவது ‘இண்டி’ கூட்டணித் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்று நினைத்து நாம் மீண்டும் ஒரு முறை சிரித்துக் கொள்ளலாம்.  வேறென்ன?

* * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai