Thursday 26 July 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ராகுல் மோடியை அணைக்கப் பார்க்கிறார்!



ராக்கெட் விஞ்ஞானம் கூட ஈஸியா புரிஞ்சுக்கலாம். ஆனா ராகுல் காந்தியை புரிஞ்சுக்கணும்னா தலையைப் பிச்சுக்கணும். சரி, முயற்சி பண்றேன்.

லோக் சபாவுல ராகுல் காந்தி பரபரப்பா பேசினார் இல்லையா? அதான், மோடி அரசாங்கத்துக்கு எதிரா  வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிச்சு பேசினாரே, அதைச் சொல்றேன்.  டக்குனு ஞாபகம் வரா மாதிரி சொல்லட்டா? லோக் சபாவுல ராகுல் திடுதிப்னு பிரதம மந்திரி நாற்காலி கிட்ட போய், உக்காந்து இருந்த மோடிக்கு ஜிப்பா அளவு எடுக்கற டெய்லர் மாதிரி ரண்டு கையாலும் மோடியோட மார்பைக் கட்டிண்டாரே, அதுக்கு முன்னால ராகுல் பேசினதைச் சொல்றேன். ராகுல் பேசினதை விட, மோடியைக் கட்டிண்டதுதான எல்லார்க்கும் ஞாபகம் இருக்கு?

மத்திய அரசங்கத்துக்கு எதிரா ஒரு எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தினா என்ன அர்த்தம்? அதுவும் லோக் சபாவுல தன் கட்சிக்கே மெஜாரிட்டி உள்ள ஒரு பிரதம மந்திரி இருக்கும் போது? அந்த எதிர்க்கட்சி இப்படி நினைக்கறதுன்னு அர்த்தம்: 'இந்த அரசாங்கமும் இந்த பிரதம மந்திரியும் நாட்டுக்கு கெடுதல் பண்றா. இந்த அரசாங்கம் ஒழியணும். லோக் சபாவுல நம்ம பேசறதை கேட்டுட்டு அடுத்த தேர்தல்ல மக்கள் நம்ம கட்சிக்கோ நம்ம கூட்டணிக்கோ மெஜாரிட்டி குடுப்பா. அதுனால, இப்ப சபைல இருக்கற எதிர்க்கட்சி தலைவர்கள் முடிஞ்ச வரைக்கும் மக்கள் மனசை அப்படியே புரட்டிப் போடறா மாதிரி பேசிடணும்.'  இந்த ஆசையோட ஒரு எதிர்க்கட்சித் தலைவர், சபைல பேசிட்டு எதிர்கால முடிவை மக்கள் கிட்ட விட்டா பரவால்ல. அதுக்கு மாறா அவர் லோக் சபாவுல மத்த எதைப் பண்ணினாலும் அசட்டுத்தனம்னுதான் அர்த்தம். ஆனா ராகுல் காந்தி வெறும் அசடா இல்லை. அசல் அச்சுப்பிச்சுதான்.

ராகுல் காந்தி நாட்டு மக்களை கவர்ற மாதிரி பேஷ் பேஷ்னு லோக் சபாவுல பேசலை. காங்கிரஸ் கட்சி வெளில என்ன  சொல்றதோ, அதை ராகுல் அவர் பாணில பேசினார். அந்த அளவுக்கு சரின்னு விடலாம். ஆனா அதோடு அவர் நிக்கலை. "மோடிஜி, நீங்க என்னை வெறுங்கோ. குட்டிப் பையன்னு கூட கிண்டலா கூப்பிடுங்கோ. ஆனா நான் உங்களை நேசிக்கறேன். ஏன்னா நான்தான் காங்கிரஸ்," அப்படி இப்படின்னு சினிமா டயலாக்ல உளறலும் உருகலுமா பேசினார்.

"உங்களால நாட்டுக்கு நல்லதில்லை.  உங்க கட்சியோட ஆட்சியும் இருக்கக் கூடாது. அப்பத்தான் நாட்டுக்கே விமோசனம்"னு ஒரு பிரதம மந்திரியைப் பாத்து குத்தம் சொல்ற எதிர்க்கட்சி தலைவர், "நான் உங்களை ரொம்ப நேசிக்கறேன்"னு  சேர்த்துச் சொன்னா அது வெத்துப் பேச்சு, வெறும் புளுகு.  ஒரு அரசியல் தலைவருக்கு, முக்கியமான ஜனநாயகப் போர்க்களத்துல காட்டவேண்டிய உறுதியும் முதிர்ச்சியும் இல்லாத அசட்டுத்தனம்.  

"அரசாங்கத்தை விட்டு இறங்கிப் போ"ன்னு மோடியைப் பாத்து அரசியல் பாஷைல சொல்லிட்டு, அதே நிமிஷம் ஓடிப் போய் அவரை கட்டித் தழுவிக்கறது, தன் நாற்காலிக்கு  திரும்பி வந்து தன் கட்சிக்காராளைப்  பாத்து "எப்பிடி என் சேஷ்டை"ங்கற அர்த்தத்துல கண்ணடிக்கறது, இதெல்லாம் லோக் சபாவுலயே பண்ணினார் ராகுல் காந்தி. அவரை அச்சுப் பிச்சுன்னு சொல்லாம வேற என்ன சொல்றது?  1947-லேர்ந்து பதினேழு வருஷமா இவர் கொள்ளுத் தாத்தா நேரு பிரதம மாதிரியா இருந்தார். அவர் லோக் சபாவுல காத்த கண்ணியம் என்ன,  வெளிப்படுத்தின கம்பீரம் என்ன, இப்ப காங்கிரஸ் தலைவராவும் இருந்து ராகுல் காட்டற அச்சுப்பிச்சுத்தனம் என்ன?  மேலோகத்துல இருக்கற நேரு நினைச்சுப் பாத்தா வருத்தப் படுவார்.

மனுஷாளுக்குள்ள ஒரு நாகரிகம் இருக்கு. ஒருத்தரோட அனுமதி இல்லாம, அதாவது மறைமுக அனுமதியாவது இல்லாம, அவரை இன்னொருத்தர் தொடக்கூடாது. ரண்டு பேர் சந்திச்சா, அந்த ரண்டு பேரும் விருப்பப் பட்டாதான் அவா கையைக் கூட குலுக்கிக்கலாம். இஷ்டம் இல்லாத ஒருத்தரோட கையை இன்னொருத்தர் பிடிச்சு இழுத்து குலுக்கக் கூடாது.  அது மாதிரித்தான் ரண்டு பேர் பரஸ்பர அபிமானத்துலயோ மரியாதைலயோ ஒருத்தரை ஒருத்தர் ஆலிங்கனம் பண்றது. ரண்டு பேருக்கும் அதுல நாட்டம் இருக்கணும். அனா ராகுல் என்ன நினைச்சார்? ’நாற்காலில உக்காந்து இருக்கற மோடியை அவர் மேலயே  விழுந்து கட்டிப்பேன். அவர் சம்மதம் யாருக்கு வேணும்? டி.வி-லயும் பேப்பர்லயும் படம் வந்தா போதும்’னு ராகுல் பண்ணின கூத்து இருக்கே, அது விஷமத்தனம், அநாகரிகம்.  அது மட்டுமில்லை. ’மோடியைக் கட்டிக்கறா மாதிரி போட்டோ வெளிவந்தா, ரொம்ப நல்லவன்னு னக்கு மக்கள்ட்ட பேர் கிடைக்கும், அதுலயே மோடி கொஞ்சம் அடங்குவார்,’ இப்பிடில்லாம் கூட ராகுல் நினைக்கறவர்தான்.  அவரோட அச்சுப்பிச்சு சிரிப்பே சொல்லலை?

இன்னொண்ணு பாருங்கோ. பாதுகாப்பு அதிகம் தேவைப் படற ஒரு பிரதம மந்திரியை, இப்படி திடீர்னு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மார்போடு மார்பா கட்டிண்டு எதிராளிக்கு திகில் குடுத்தா, பயத்துல ஒருத்தரை ஒருத்தர் தாக்கற விபரீதம் கூட ஏற்படலாம்.  ஆனா நாகரிகம், ஒழுங்கு, கண்ணியம், இதெல்லாம் ஒரு அச்சுப்பிச்சுக்கு எப்படித் தெரியும்? இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு தோண்றது. விமானத்துக்குள்ள தகராறு பண்ற பயணிகளை இனிமே விமானத்துல ஏத்தறதில்லைன்னு ஒரு ரூல் வச்சிருக்கால்யா? அந்த ரீதில, சட்டசபைல மத்தவாளுக்கு திகில் குடுக்கற உறுப்பினரை சபை நடக்கும்போது அவா நாற்காலியோட மாட்டைக் கட்டறா மாதிரி தாம்புக் கயத்துல கட்டி வச்சா என்ன?

ஏதோ அரசியல்ல  ஜென்ம எதிரி ஒருத்தர் இருந்தாலும் அவர் மேல அன்பை பொழியறவர் ராகுல் காந்தின்னு யாரும் நினைக்க வேண்டாம். 2013-ல மன்மோகன் மாமா பிரதரமா இருந்தபோது, பிஹார் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன வழக்குல தண்டனை கிடைக்கலாம்னு நிலைமை இருந்தது. அப்ப லாலு பிரசாத் அடுத்த தேர்தல்ல நிக்கறதுக்கு வரக்கூடிய தடையை நீக்கிடணும்னு, மத்திய அரசு ஒரு அவசரச் சட்ட வரைவைக் கொண்டுவந்தது. அது ஜனாதிபதி ஒப்புதலுக்கும் போயிருந்தது. அந்த நேரத்துல, அந்த சட்டத்தைப் பத்தி ஒரு பத்திரிகை நிருபர்கள் கூட்டத்துல டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் பேசிண்டிருந்தா. ராகுல் காந்தி அந்த அவசரச் சட்டம் தேவை இல்லைன்னு  நினைச்சார். அதை யார் கிட்ட எவ்வளவு அன்பா எப்பிடி சொன்னார் தெரியுமா? விறு விறுன்னு அந்த நிருபர்கள் கூட்டத்துக்கு வந்தவர், "இந்த அவசர சட்டம் சுத்த நான்சென்ஸ். இதைக் கிழிச்சு தூர எறியணும்”னு  கத்திட்டு, அந்த சட்ட வரைவு நகலை அப்பவே கிழிச்சு சூரை விட்டார். நிருபர்கள் கூட்டத்துல அவசர சட்டத்தை விளக்கிப் பேச வந்த காங்கிரஸ் தலைவர் அஜய் மாகென், “ராகுல் காந்தி எங்க தலைவர். அவர் கருத்துதான் கட்சியோட கருத்து”ன்னு பல்டி அடிச்சார். அதுக்கப்பறம் அந்த அவசர சட்டம் வரவே இல்லை. அதை மந்திரி சபைக் கூட்டத்துல முன்னாடி ஆமோதிச்ச மன்மோஹன் மாமாவும் ஈஸ்வரோ ரக்ஷதுன்னு எல்லா அவமானத்தையும் சிரிச்ச முகமா சகிச்சுண்டார்.

தன்னோட கட்சி பிரதம மந்திரி மன்மோகன் மாமாக்கு அப்பிடி செயல் மூலமா அன்பு காட்டினார் ராகுல். இப்ப எதிர்க்கட்சி பிரதமர் மோடிக்கு வாய் வார்த்தைல அன்பு காட்டறார். இவரோட துதி பாடிகள் அப்பவும் இவருக்கு கை தட்டினா. இப்பவும் இவரோட லோக் சபா பேச்சு, ஆலிங்கனம் எல்லாத்துக்கும் கர கோஷம் பண்றா. மும்பைல ஒரு காங்கிரஸ் தலைவர்,  மோடியை  ராகுல் கட்டிப் பிடிச்ச போட்டோவை தெருக்கள்ள பெரிசா வச்சுட்டார். அச்சுவோ பிச்சுவோ, ராகுலை அண்டி இருக்கறவாளுக்கு தனக்கு எது அனுகூலம்னு தெரியும்.

பல அரசியல் கட்சிகள்ள, மேல் மட்டத்துலயும் அடுத்த மட்டத்துலயும் இருக்கற தலைவர்கள் சாதாரண மக்களை முட்டாள்களாவே வச்சு பொழைக்கறா. அது தெரிஞ்சதுதான். ஆனா, ஒரு அரசியல் கட்சித் தலைவரையே அதோட ரண்டாம் கட்டத் தலைவர்கள் அச்சுப்பிச்சுவா வச்சு "இப்போதைக்கு இவர்தான் நமக்கு நல்ல சான்ஸ்"னு பொழைக்க வழி தேடறா.  மேலோகத்துல இருக்கற நேரு நினைச்சுப் பாத்தா அழுவாரோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018



Friday 20 July 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: அயனாவரத்து அரக்கர்கள்



வயத்தைப் பிசையறது.

பதினோரு வயசுப் பொண்ணு. அதுக்கு காதும் சரியா கேக்காது. அந்தக் குழந்தைய பதினேழு ராட்சச மனுஷா ஆறு மாசமா சீரழிச்சிருக்கா. எங்க, காட்டுலயா? இல்லை, சென்னை மாநகரம் அயனாவரத்துல, 300 குடியிருப்புகள் உள்ள ஒரு பில்டிங்ல. அதுல ஒரு குடியிருப்புலதான், அந்தக் குழந்தையும் அதோட அப்பா அம்மாவும் வசிக்கறா.

அந்த ராட்சசாள்ளாம் யூனிபார்ம் போட்டுண்டு லிஃப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன்,  ப்ளம்பர், தோட்டக்காரன்னு அந்த பில்டிங்லேயே வேலை பாத்துண்டு இந்தக் கிராதகத்தை பண்ணிருக்கா.  அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரத்துக்கு அந்தப் பதினேழு பேர்தான் காரணம்னு உலகம் தெரியாதவாதான் நினைப்பா. அந்தக் குழந்தையும் நினைக்கலாம். ஆனா அதோட அப்பா அம்மாவையும்  குத்தவாளின்னு ஒரு பிடி பிடிக்கணும். அவா முதுகுலயே வச்சாலும் சரிதான்.

பள்ளிக்கூடத்துக்கு போயிருந்த குழந்தையை யாராவது தலைல லேசா குட்டினாலும் அது அம்மாட்ட வந்து சொல்லுமே? அப்படி சொல்லலைன்னா அது குழந்தையோட தப்பு இல்லை. தனக்கு வந்த வலியை அம்மாட்ட சொன்னாலும் ஆறுதலாான அரவணைப்பு அம்மாட்ட கிடைக்காதுன்னு அந்தக் குழந்தை சரியா நினைச்சிருக்கும். தன் குழந்தைட்ட பிரியமும் வாஞ்சையும் காட்டாத் தெரியாத அப்பா அம்மாதான் அப்படி ஒரு நினைப்பை குழந்தைக்கு குடுப்பா. ஒரு நாள்ள மறக்கற குட்டு வலியை குழந்தை பெத்தவாட்ட சொல்லலைன்னா போறது, பரவால்ல. ஆனா அயனாவரம் குழந்தைக்கு ஏற்பட்ட கொடுமையை அதுவே அப்பா அம்மாட்ட தெரிவிக்கலைன்னா, பெத்தவாளை என்னன்னு சொல்றது?  ஆறு மாசமா நடந்ததைக் கூட அந்த அப்பா அம்மா தெரிஞ்சுக்க முடியலையா? 

குழந்தை ஸ்கூல்லேர்ந்து சரியான டயத்துக்கு வீட்டுக்கு வராளா, மத்த நேரத்துல எங்க போறா, என்ன பண்றா, யாரைப் பாக்கறா, எதுக்குப் பாக்கறான்னு அப்பா அம்மா கவனிக்கணும்னு யாரும் சொல்லித் தரவேண்டாம். வீட்டுல இருக்கற  அம்மாக்கு அந்த கவனிப்பு இல்லைன்னா அதுக்கு மன்னிப்பே கிடையாது - அதுவும் பதினொரு வயசு பொண் குழந்தைன்னா. 

இப்படி ஒரு அராஜகத்தைத் தாங்கிண்டு எந்தப் பொண் குழந்தையும் சாதாரண முகத்தோட வீட்டுக்குள்ள திரும்பி வராது. வர்ற குழந்தையோட நடையையும் முகத்தையும் பார்த்து அம்மாக்காரி, "என்னடி கண்ணு"ன்னு குழந்தையை அணைச்சாலே அது அழுதுண்டே யார் தப்பு பண்ணினான்னு சொல்லிடுமே? அயனாவரம் வீட்டுல அதெல்லாம் நடக்கலை. அம்மாக்காரி சுவத்தொட சுவரா வீட்டுலயே இருக்கா. அப்பா ஏதோ பிசினஸ் பண்றார். குழந்தைக்கு சம்பளம் குடுத்து வேலைக்கு வச்சுக்கலைன்னு, அது மேல பொறுப்பா கண் வச்சுக்க வேண்டாம்னு இருந்துட்டார். கடைசில, குழந்தையோட அக்கா வெளியூர்லேர்ந்து வந்தபோது அது அக்காட்ட தெரிவிச்சு போலீசுக்கு விஷயம் போனது. இப்ப சொல்லுங்கோ, ஆறு  மாசம் பதினேழு பேர்னு சேர்ந்த இந்த பாதகத்துல  அப்பா அம்மாவோட அலட்சியத்துக்கும் பங்கு உண்டா இல்லையா?

சரி, கோர்ட்டுல கேஸ் நடக்கும். போலீஸ் கேஸை ஒழுங்கா நடத்தி சட்டப்படி தண்டனை வாங்கி குடுக்கட்டும். ஆனா அந்தப் பதினேழு பேரைப் பத்தி ஒண்ணு சொல்லணும்.  தான் பண்ற காரியம் மஹா தப்பு, பிடிபட்டா ஜெயில் தண்டனை அனுபவிக்கற குற்றம்னு அவா எல்லாருக்கும் தெரியும். அப்பறம் ஏன் துணிஞ்சு பண்ணினா?  'ஜெயிலுக்கு போனாலும் பரவால்ல. பாத்துக்கலாம்'ன்னு நினைக்கற ஊறின குற்றவாளிகள் இல்லை அவா. பல தேசத்து சராசரி ஆண்களை விட, இந்திய ஆண்கள் பாலியல் குற்றம் அதிகமா பண்ணுவான்னும் அர்த்தம் இல்லை. இதுல வேற ஒரு விஷயம் இருக்கு.

எல்லா நாட்டுலயும் திருத்தவே முடியாத பலதரப்பட்ட  குற்றவாளிகள் இருப்பா. அவாளைப் பிடிச்சு தண்டனை குடுத்தே ஆகணும். வேற சில குற்றவாளிகள் இருக்கா. அவா இஷ்டப்படி குற்றம் பண்றதுக்கு மானசீக தெம்பு குடுக்கறவா இருந்தா அதிகம் பண்ணுவா. இல்லாட்டி குறைச்சு பண்ணுவா, இல்லை அடங்கி இருப்பா. அப்படி ஒரு தெம்பு குடுக்கறவாளோ குடுக்காதவாளோ யாருன்னு கேக்கறேளா?  நம்மளை ஆள்ற அரசியல் தலைவர்கள் இருக்காளே, அவாதான்.

ஆட்சி அதிகாரத்துல நமக்கு வாச்ச தலைவர்கள் நேர்மையாளர்களா இருக்காளா, கயவர்களா இருக்காளான்னு எல்லா மக்களுக்கும் உணர்ந்திருப்பா. அந்த மனுஷா உத்தமார்களா இருந்தா சாதாரண மக்களுக்கும் அது நல்ல சிந்தனைகளை மேம்படுத்தும், நல்ல செயல்களை ஊக்கப்படுத்தும். லட்சக்கணக்கான இந்தியர்களை தேச விடுதலையைப் பத்தி நினைக்க வச்சு, அதுல எத்தனையோ பேரை தியாகிகளா ஆக்கி விடுதலைப் போராட்டத்துக்கு வரவழைச்சாரே மஹாத்மா காந்தி, அவர் ஒரு உதாரணம் போதும். அதுக்கு மாறா, தேசத்துல ஆட்சி பண்ற தலைவர்களோட லட்சணம் அவலட்சணமா இருந்தா, 'அவன் பங்குக்கு அவன் பண்றான். என் பங்குக்கு நான் பண்றேன்'னு சமூகத்துல இருக்கற அரை கிளாஸ் கயவர்களும்  தீய வழில தெம்பா நடப்பா. இந்த மாதிரி தலைவர்கள்தான் இப்ப நாட்டுல ஏராளமா இருக்காளே?

தலைவர்கள் போக்குனால மக்களும் பாதிக்கப் படற மன நிலையைத்தான், 'யதா ராஜா, ததா பிரஜா'ன்னு ஒரு பழமொழியா சொல்றோம். இது வாழ்க்கையோட யதார்த்தம். அதைப் புரிஞ்சுண்டு நல்ல தலைவர்கள் கிடைக்கணுமேன்னு பிரார்திச்சா சரிதான். அதை விட்டுட்டு, தலைவர்களோட ரௌடியிஸம், பித்தலாட்டம், சொத்துக் குவிப்புனால பொது மக்கள் எந்த எந்த நடவடிக்கைல எத்தனை பெர்சன்டேஜ் பாதிக்கப் படுவான்னு விவாதிக்கறது வெட்டிப் பேச்சு. நம்ம என்ன டி.வி நிகழ்ச்சியா நடத்தறோம்?

இன்னொண்ணும் சொல்லணும். இந்த 'யதா ராஜா ததா பிரஜா' பழமொழி இருக்கே, அது இந்தியாவுக்கு பாதி உண்மையைத்தான் சொல்றது. ராஜாக்கள் தப்பாவே இருந்தா, ஜனங்களும் அந்த வழில போவாங்கறது சரி. ஆனா ராஜாக்கள் சட்டத்துக்கும் தண்டனைக்கும் சுலபமா டேக்கா குடுக்கலாம். அதுவே ஜனங்கள் பண்ற குற்றம்னா, அதுவும் வெளில வந்த குற்றம்னா, ராஜாக்கள் சும்மா இருக்க மாட்டா. இந்தக் கால ராஜாக்கள் லேசுப்பட்டவா இல்லை. பாதிக்கப் பட்டவாளுக்கு கஜானாலேர்ந்து  நிவாரணம்  அள்ளிக் குடுப்பா. 'குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கணும்'னு அந்த நாள், இந்த நாள், அடுத்த நாள் ராஜாக்கள் எல்லாரும் சேர்ந்து குரல் குடுப்பா. ஒரு கணத்துல அவா எல்லாரும் நீதி தேவதைகளா காட்சி அளிப்பா. அதுவே அவாளுக்கு ஒரு கவசம். 'யதா ராஜா'ன்னு இருக்கற ஜனங்களுக்கு, அதுவும் பாரத நாட்டு ஜனங்களுக்கு, இந்த சௌகரியம் கிடையாது. அவா வெறுமனே ஓட்டுப் போடற  பிசாத்து பிரஜாதான். அயனாவரம் அரக்கர்களும் இந்தப் பழமொழி சொல்ற பாதி உண்மைக்கு சாட்சியான்னு யோசிக்கணும். நீங்க என்ன நினைக்கறேள்?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018



Thursday 5 July 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: கமல் ஹாசனின் பூணூல் தத்துவம்



கமல் ஹாசன் நல்ல நடிகர்தான்.  தசாவதாரம்னு ஒரு படத்துல பத்து கேரக்டர்ல நடிச்சிருந்தார். அதுல பல கேரக்டர்கள் என்னன்னு தெளிவா ஞாபகம் வச்சுக்க முடியலை. ஒரு  பித்துக்குளி கேரக்டர் இருந்தா, பளிச்னு  கமல் ஞாபகத்துக்கு வருவாரோ? காரணத்தோடதான் நினைச்சுக்கறேன்.

ஒருத்தர்  தன்னோட மனைவிட்ட "சாப்பாடு போடறயா"ன்னு சாதாரணமா கேக்கும்போது, "என்னால முடியாது. எனக்கு கூப்பாடு போடறதுல இஷ்டம் இல்லை"ன்னு மனைவி பதில் சொன்னா, என்ன நினைப்பேள்? 'இது  என்ன பித்துக்குளித்தனமா இருக்கு? அவர் சாப்பாட்டைப் பத்திக் கேட்டா இந்தம்மா கூப்பாட்டைப் பத்தி பேசறாளே'ன்னு நினைப்பேளா இல்லையா? கமல் ஹாசனும் அப்படித்தான் பேசிருக்கார். அவர் கிட்ட ஒருத்தர், "நீங்கள் படித்த நூலில் உங்களுக்கு மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது?"ன்னு டவிட்டர்ல கேட்டுட்டார். உடனே கமல் ஹாசன் "நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், பூணூல்“. அதனாலேயே அதை தவிர்த்தேன்"னு ஒரு கெக்கே பிக்கே பதிலை எடுத்து விட்டிருக்கார். "தமிழ் நாட்டு முதல் அமைச்சரா வரத் தயார்"னு முன்னாலயே வேற பேசிருக்கார். பகவானே!

பாருங்கோ, நீங்க பூணல் போட்டுக்கற ஜாதில பிறந்தாலும், அதைப் போட்டுக்காம இருக்கறது உங்க இஷ்டம்.  போட்டுக்கறவாளை நீங்க எப்படி சட்டை பண்ணலையோ, அதே மாதிரி உங்களையும் அவா சட்டை பண்ண மாட்டா. அவ்வளவுதான? இதுக்கு மேல ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கறதுக்கு இதுல என்ன இருக்கு? 

சரி, கஷ்டப்பட்டு கமல் ஹாசன் வழிக்கே வந்து அவரைப் புரிஞ்சுக்க பாக்கறேன். எதையோ கேட்டதுக்கு பூணலைப் பத்தி பேசினவர், அது அவரை "ரொம்ப பாதிச்சது"ன்னு சொல்லிருக்கார். தலையும் புரியலை, காலும் புரியலை. அதான் கமல் ஹாசன். என்ன சொல்ல வரார் இவர்? மத்தவா பூணல் போட்டுக்கறது இவரை பாதிக்கறதாமா? இவர் அப்பா சீனிவாச அய்யங்கார் அந்த நாள் காங்கிரஸ்காரர், சுதந்திர போராட்ட வீரர். ராஜாஜி, காமராஜுக்கு கூட நெருக்கமா இருந்தவர். இவர் அப்பாவும் பூணல் போட்டுண்டவர்தான். அது இவரை பாதிச்சதுன்னு சொல்றாரா? இல்லை, தான் பூணல் போட்டுக்கறது தன்னை பாதிக்கும்னு சொல்றாரா? சரி, தான் போட்டுக்கறது பாதிச்சா போட்டுக்க வேண்டாம். இவரும் இப்ப போட்டுக்கலை. யாராவது கத்தியைக் காட்டி 'போட்டுக்கோ'ன்னு மிரட்டினாளா? கேக்காத கேள்விக்கு வேண்டாத பதிலை புரியாத அர்த்தத்துல சொல்றாரே!

ஒரு மதத்துல, ஜாதில இருக்கறவா மனமுவந்து அனுஷ்டிக்கற சடங்குகள், சம்பிரதாயங்கள் சட்டத்தையோ மனித உரிமைகளையோ மீறினா மத்தவா அதை விமரிசிக்கலாம். இல்லைன்னா பேசாம இருக்கறதுதான் நாகரிகம். கமல் ஹாசனுக்கும் இது தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும், பிராமண பழக்க வழக்கங்களை கேலி பேசினா மத்த ஜாதிக்காராளோட ஆதரவு தன்னோட கட்சிக்கு அதிகமா கிடைக்கும்னு தப்புக் கணக்கு போட்டிருக்கார். அதாவது கருணாநிதி நினைச்ச மாதிரி. ஆனா கருணாநிதிக்கு பேச்சுல, எழுத்துல,  சாமர்த்தியத்துல இருந்த அசாத்திய வல்லமைதான் அவருக்கு மக்கள் ஆதரவைக் கொண்டு வந்தது - அவரோட பிராமண எதிர்ப்பு இல்லை. கருணாநிதி அளவுக்கு திறமைகள் இல்லாத ஸ்டாலினுக்கு இது புரிஞ்சிருக்கு, இந்தக் கால மக்கள் மனோபாவமும் தெரிஞ்சிருக்கு.  பாவம், கமலுக்கு புரியலை.

எல்லா மனுஷாளும் பேச்சுல கவனிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. கமல் ஹாசன் மாதிரி அரசியல் தலைவர்னா அது கண்டிப்பா தெரியணும்.  அதாவது,  என்ன பேசணும்கறது மட்டுமில்லை, ஏன்ன பேசக் கூடாதுங்கறதும் முக்கியம். கமலுக்கு  ஒண்ணாவது தெரியுமாங்கறது சந்தேகம்தான். சினிமா, நடிப்பு வேற, மக்கள்ட்ட அரசியல் தலைவரா பேசறது வேறன்னு கமல் மாதிரி மேலயும் கீழையும் யார் நிரூபிச்சிருக்கா?

      எந்த  ஜாதி அரசியல்வாதின்னாலும்,  அவர் ஜாதிக்காரா அவரை முதல்ல இயற்கையான அனுசரணையோட பாக்க ஆரமிப்பா.  ஒரு அரசியல்வாதியும் அதைப் பயன்படுத்திண்டு அவா ஜாதிக்காராட்ட நல்லதனமா பேசணும், நடந்துக்கணும். மத்த மனுஷாளையும் சமமா அரவணைச்சு அவாளோட ஆதரவையும் சேர்த்துக்கணும். எதுவானாலும், எந்தத் தலைவரும் தன்னோட ஜாதிக்காராளை குட்டி, மட்டம் தட்டிப் பேசறதை நீங்க பாக்கவே முடியாது. கமல் ஹாசன் மட்டும்தான் இதுக்கு விதிவிலக்கு. கருணாநிதிகூட, தன்னோட மதத்தை  மட்டும்தான் இழிவு பண்ணினார்.  ஆனா கமல் ஹாசன் தன்னோட ஜாதியையும் கேலி பண்ணிக் குத்தலா பேசறார். எந்த அரசியல் தலைவருக்கு அவர் ஜாதிக்குள்ளயே அதிருப்தி பெர்சென்டேஜ் அதிகம்னு  பாத்தா, கமல் ஹாசன்தான் உச்சத்துல இருப்பார். மத்த தலைவர்கள்ளாம் கிட்ட நெருங்க முடியாது.

பிரதமர் நரேந்திர மோடிட்ட கமல் ஒண்ணு தெரிஞ்சுக்கலாம். கமலோட நன்மைக்குத்தான் இதையும் சொல்றேன். இந்தியாவுல பல மாநிலங்கள்ள பல மனுஷாளோட ஆதரவு மோடிக்கு உண்டு. அவர் பிராமணர் இல்லை. ஆனா நிறைய பிராமணர்களோட ஆதரவும் அவருக்கு கிடைச்சிருக்கு. அது மாதிரி, பிறப்புல பிராமணரான கமல் ஹாசனுக்கு எல்லா தரப்பினரோட ஆதரவும் கிடைக்கணும்னா, எந்த ஜாதியையும் அவர் வேணும்னே பழிக்கக் கூடாது.  அரசியல்ல இது பால பாடம். இது  பிறத்தியார் சொல்லித் தெரியற விஷயமும் இல்லை.

      சரி,  மோடி   கமலுக்கு  அரசியல்   எதிரி.  அதுனால  மோடி உதாரணத்தை விட்டுடலாம்.  கமலுக்கு எதிரி ஆக முடியாத ஒரு அரசியல் தலைவரை எடுத்துக்கலாம். அதாவது, மாஜி அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா. அவர் கறுப்பு இனத்தவர்லதான் சேர்த்தி. அவாள்ளாம் அமெரிக்க மக்கள் தொகைல நூத்துக்கு பன்னெண்டு பேர் இருக்கா.  அவா போக, மெஜாரிடியான வெள்ளைக்கார அமெரிக்கர்களோட (நூத்துக்கு எழுபத்திரண்டு பேர்) ஆதரவு இருந்தாத்தான் ஒபாமா ரண்டு தடவையும் ஜனாதிபதி தேர்தல்ல ஜெயிச்சிருக்க முடியும்.  அந்த ஊர் வெள்ளைக்காராளை, இல்லை கமல் ஸ்டைல்ல கறுப்பு இனத்தவரை, அவா மத சடங்குகளை, ஒபாமா மட்டம் தட்டிப் பேசியிருந்தா பலதரப்பட்ட மக்களோட ஆதரவு அவருக்கு கிடைச்சிருக்குமா?

       கடைசியா  ஒண்ணு சொல்லலாம்.  கமலுக்கு இன்னொரு விஷயம் பிடிபடணும்.  தத்துவம் சொல்றா மாதிரி பேசினா, நிறைய ஜனங்களுக்கு புரியாது. அதுவும் பேசறவருக்கே புரியாதுன்னா அது நிச்சயமா தத்துவமும் இல்லை.  தத்துப் பித்துவம்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018