Monday 16 April 2018

ஐ.பி.எல்-லும் அருகம் புல்லும்!



எல்லா அரசியல்வாதிகளும் சேர்ந்து சென்னையில் ஒரு காரியத்தை ஆட்டம் பாட்டம் வன்முறையோடு முடித்து விட்டார்கள். அதாவது,  பொதுமக்களின்  கிரிக்கெட் ஆர்வத்தை காலால் மிதித்து, சில கிரிக்கெட் ரசிகர்களையும் பிடித்து உதைத்து,  சீசனில் மீதம் இருந்த  ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை சென்னையில் இருந்து விரட்டி விட்டார்கள். பாஜக இந்த நடவடிக்கைகளில் சேரவில்லை.

கவனித்தீர்களா? பெருவாரியான அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்தால் அது நல்ல காரியத்திற்காக இருப்பதில்லை!

பல வருடங்கள் நடந்த காவிரி நதிநீர் வழக்கில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் நீர்ப் பங்கீட்டு அளவைத் தீர்மானித்து, சென்ற பிப்ரவரியில்  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. முதல் இரண்டு மாநிலங்களுக்கான பங்கீடுதான் இந்த வழக்கில் கசப்பான சச்சரவாக இருந்தது.

தனது தீர்ப்பை அமல்படுத்த,  ஆறு வாரத்தில் மத்திய அரசு ஒரு ’ஸ்கீம்’ – ஒரு செயல் திட்டம் – ஏற்படுத்தவேண்டும்  என்றும்  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.  பின்னர் மத்திய அரசு இதுபற்றி நான்கு மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்தது. ஆனாலும் நான்கு மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு  செயல் திட்டத்தை அது உருவாக்க முடியவில்லை.  ஆகையால் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டிடம் சில விளக்கங்கள் கேட்டு கால அவகாசத்தையும் நீட்டிக்கக் கோரியபோது, கோர்ட் ஒருசில அபிபிராயங்கள் சொல்லி, வரும் மே 3-ஆம் தேதிக்குள் மத்திய அரசு ஒரு வரைவு செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தனது காலக் கெடுவை நீடித்தது.  

          வரும் மே மாத நடுவில் கர்நாடகத்தில் நடக்கப் போகும் சட்டசபைத் தேர்தல்களை மனதில் வைத்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ’காவிரி மேலாண்மை ஆணையம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்காமல்  காலம்    தாழ்த்துகிறது என்று தமிழகத்தின் மற்ற எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இப்போது அந்த ஆணையம் உடனடியாக அமைக்கப் படவேண்டும் என்று கோரி பல வழிகளில் அவை போராடுகின்றன.  இதில் திமுக பிரதானமாக முன் நிற்கிறது.

இந்த நிலையில், ஏற்கனவே சென்னையில் நடக்க ஏற்பாடாகி இருந்த பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளும் நடக்கக் கூடாது, நடத்த விடமாட்டோம், என்று எல்லா தமிழக எதிர்க் கட்சிகளும் மிரட்டல்கள் விட்டன.  மத்திய அரசுக்கான தனது காலக் கெடுவை சுப்ரீம் கோர்ட் நீட்டிய பின்னரும், ஐ.பி.எல் போட்டிக்கான எதிர்ப்பு குறையவில்லை. ஆக்ரோஷமும் வன்முறையும் கலந்த ஆர்ப்பாட்டங்கள் மறியல்கள், அத்துமீறல்கள்  அந்த அரசியல் கட்சிகள் தலைமையில் நடந்தன. குழம்பிய அதிமுக-வின் மாநில அரசு, ”ஐ.பி.எல் போட்டிகள் சென்னையில் நடக்காமல் இருந்தால் நல்லது. நடந்தால் பாதுகாப்பு தருவோம்” என்று சொல்லி எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கும் பணிந்து சட்டத்துக்கும் சல்யூட் வைத்தது.

       இந்த ஐ.பி.எல் சீசனின் சென்னை கிரிக்கெட் போட்டிகளில் முதல் விளையாட்டு ஏப்ரல் 10-ம் தேதி சேப்பாக்கத்தில் நடந்தது. போராடும் கட்சிக்காரர்கள் அன்று போலீஸ் தடைகளை மீறி அரங்கிற்கு அருகில் வந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அநாரிகப் பேச்சு மற்றும் அடி உதைகளை வழங்கி ரௌடித்தனம் செய்தார்கள். கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த நகரில் பாதுகாப்பு கிடைக்காது என்றாகி, மீதமிருக்கும் ஆறு ஐ.பி.எல் போட்டிகளும் சென்னையை விட்டு வேறு நகருக்கு மாற்றப் பட்டுவிட்டன.   

சென்னையில் அரங்கேறிய அராஜகச் செயல்களுக்குப் பின்னால் உள்ள தமிழக எதிர்க்கட்சிகளின் உள்நோக்கம் என்ன? அவர்களது மனதின் குரல் அதைச் சொல்லும். அந்தக் குரல் இப்படியாக இருக்குமோ?: ”மத்திய பாஜக அரசு மார்ச் இறுதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் என்று அமைத்திருந்தால், கர்நாடகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒதுக்கிவிட்டு ’மத்தியில் ஆளும் பாஜகதான் ஆணையத்தை அமைத்து கர்நாடகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது’ என்று பிரசாரம் செய்யும். அதுவே கர்நாடகத்தின் மே மாதத் தேர்தல்களில் பாஜக தோற்பதுக்கு பெரிதும் உதவும்.  இதனால் மோடிக்கே அரசியல் பலம் குறையும். மோடி எங்கு தோற்றாலும் நாம் தமிழகத்திலிருந்து அவரை இன்னும் தள்ளி வைக்கலாம். தமிழ்நாட்டுக்கு அடுத்த மாநிலத்திலேயே மோடி நன்றாகத் தோற்றால் இங்கு அவரை இன்னும் தள்ளிவைத்து நாம் பிரசாரம் செய்யலாம். அது மட்டுமா?  ’காவிரி மேலாண்மை ஆணையம் வந்து காவிரி நீர் கர்நாடகத்துக்கு குறைவாகக் கிடைப்பதற்கு காரணம் மோடிதான்’ என்று நிரந்தரமாக அவரையும் பாஜக-வையும் எதிர்த்து கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யட்டும். தமிழ் நாட்டிலோ, அந்த ஆணையத்தைக் கொண்டு வந்து தமிழக விவசாயிகளைக் காத்து அருளியது திமுக-வின் ஸ்டாலினும் அவரோடு கைகோர்த்தவர்களும்தான் என்று எதிர்காலம் முழுக்க நாம் பிரசாரம் செய்யலாம். காவிரி நீருக்காக சட்டப் போராட்டத்தில் அசாத்தியத் தீவிரமும் தைரியமும் வெளிப்படுத்திய அதிமுக-வின் ஜெயலலிதா, அநியாய மந்தமும் அலட்சியமும் காட்டிய திமுக-வின் கருணாநிதி,  சமமான தீர்ப்பு கொடுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆகிய அனைவரையும் மக்கள் மறக்கச் செய்து, நமக்கு இல்லாத பெருமையைப் பெற்று மற்றதையும் அடைவோம்!”

தமிழக கர்நாடக எதிர்க்கட்சிகளின் உள்நோக்கத்தை ஊகிக்கத் தெரியாத பால் பாட்டில் குழந்தையாக இருக்க மாட்டார் மோடி. தேவையான கோர்ட் உத்தரவுகளைப் பெற்று தெளிவாக செயல்படுவதுதான் அனைவருக்கும் எப்போதும் நல்லது என்பதை அவர் உணர்ந்திருப்பார்.  இரு மாநிலத்திலும் மக்களின் உண்ர்ச்சிகள் கிளரப்பட்ட காவிரி நீர்ப் போராட்டத்தின் கோர்ட் தீர்வு,  ஒரு மாநிலத்தின் தேர்தல்களுக்கு மிக முன்பாக ஏனோதானோ என்று அமல் செய்யப்பட்டு எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் மீண்டும் பலி ஆகாமலும் சிரமப் படாமலும் இருப்பதும் நல்லதுதானே?

கிரிக்கெட் இந்தியா பூராவும் ரசிக்கப்படும் மிகப் பெரிய விளையாட்டு. அதில் மிகப் பெரிய வியாபாரமும்  சேர்ந்தது. சென்னை நகரம் கிரிக்கெட் பித்து. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் படும் வரை தமிழ்நாட்டில் விளையாட்டு கூடாது, பொழுதுபோக்கு கூடாது, வியாபாரமும் கூடாதா? யாரும் கோலிகுண்டு, கபடி கூட ஆடக் கூடாதா? சினிமா டிராமா பீச் பட்டாணி சுண்டல்?  தாங்கள் கேட்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்காக – அதுவும் இப்போது சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை அமல் செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் – சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்கக் கூடாது என்று போராடுவது பைத்தியக்காரத்தனம், பித்துக்குளித்தனம், குடாக்குத்தனம் என்று அவரவர் மனம் போல் நினைத்துக் கொள்ளலாம். இப்போது ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. அவை ’சென்னையில் நடக்கவில்லையே, நமது உடல் ஆரோக்கியத்துக்கும் சேதம் இல்லையே’ என்று அங்கு விளையாடும் வீரர்களும் நேரடியாகப் பார்ப்பவர்களும் மகிழ்ச்சி அடையலாம்.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரிடம் இருந்து  நமக்கு சுதந்திரம் வேண்டும் என்று அந்த நாள் மஹாத்மா காந்தி தலைமையில் நாடு தழுவிய போராட்டம் எழுந்தது. அந்த சுதந்திரப் போராட்டம், ’காவிரி மேலாண்மை ஆணையம் உடனே வேண்டும்’ என்ற இந்த நாள் கோரிக்கைக்கு சற்றும் மதிப்புக் குறைந்ததல்ல என்பதை திமுக-வின் ஸ்டாலினே ஏற்றுக் கொள்வார். ஆனால் நல்ல வேளை – ஸ்டாலினும் அவரோடு சேர்ந்து போராடும் மற்ற தலைவர்களும் சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரியவர்களாக  இருந்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? ”நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரின் கிரிக்கெட்டை இந்தியர்கள் யாரும் கற்றுக் கொள்ளக் கூடாது, கிரிக்கெட் மட்டைகள், ஸ்டம்புகள், பந்துகள் எல்லாவறையும்  தீயிலிட்டுக் கொளுத்துவோம்!” என்று கோஷம் போட்டிருப்பார்கள். அதோடு விட்டிருக்கவும் மாட்டார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்து அந்த ஸ்டாலினும் அவரோடு சேர்ந்தவர்களும் நம் தேசத் தலைவர்கள் எவரும் நினைத்துப் பார்க்காத ஒரு புது போராட்டமும் நடத்தி இருப்பார்கள். என்ன அது? இன்னுமா நீங்கள் ஊகிக்கவில்லை?  அதான், 1934-ஆம் வருடம் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் சென்னை சேப்பாக்கத்தில்  முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்ததே, அதையே நடக்கவிடாமால் மறியல் செய்து தடுத்து நிறுத்தி காந்தி, காமராஜ், ராஜாஜி போன்ற தலைவர்களை மூக்கில் விரல் வைக்கச் செய்திருப்பார்கள்! இன்றைய தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் அன்று இல்லாததால் நமது சுதந்திரப் போராட்டமே எப்படி களையும் கண்ணியமும் இழந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்!

கடைசியாக, ஐ.பி.எல்-லுக்கும்  அருகம் புல்லுக்கும் என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்கள்? இது நுணுக்கமான விஷயம். தமிழக மக்களுக்கு சுருக்கமாகச் சொல்கிறேன். நம்மூரில் நீங்கள் கிரிக்கெட் பார்ப்பதற்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கும் உள்ள நெருங்கிய தொடர்புதான் இங்கும் இருக்கிறது. புரிந்திருக்குமே!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

3 comments:

  1. Kaveri water is flowing like Thames!!!!!

    ReplyDelete
  2. Chennai people and cricket lovers should teach a lesson to DMK and allied parties in the coming elections in 2019 . Will they remember this event till then ? None should forget the rowdy behaviour to innocent girls and boys using filthy language. We should continue this propaganda till next election and these people are uprooted from political scene once in for all .
    Any entrepreneur will be afraid to start any industry here in TN. Sterelite is a very good example . These days many chemical plants operate on Zero discharge to atmosphere through modern equipments . It is unfair to talk of Bhopal incident in modern days.
    Unfortunate that mis representation and wrong information is spread on Nutrino project. Several Million Nutrinos reach earth everyday from Sun . What harm people experience? Why unnecessary mis communication about a subject they do not know or qualified to talk ?
    It is a pity we live at a time when these people are ruling us !

    ReplyDelete
  3. Their idea id not to achieve anything, but just to project themselves. This is how anti-Hindi agitation was conducted in 1965. DMK is really consistent. The common people are taken for a ride again

    ReplyDelete