Tuesday 10 April 2018

சூரப்பா ஒரு வீரப்பா அல்ல!



எம். கே. சூரப்பா - இவர்தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர். மீடியாக்களில் இவர் பெயர் இப்போது அடிபடுவதற்குக் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இவரது நியமனத்தை எதிர்ப்பதுதான். 

பி.எஸ். வீரப்பா - இவர் அந்தக் கால தமிழ் சினிமாக்களின் பிரபல வில்லன்.  அதனாலேயெ  மக்களால் வெள்ளித் திரைகளில்  வெறுக்கப்பட்டவர்.

சூரப்பாவை ஒருவித வீரப்பாவாக கணித்து தமிழக அரசியல் தலைவர்கள் அவரை எதிர்க்க என்ன காரணம்? தமிழகத்தின் ஒரு முக்கிய கல்வி கேந்திரத்தின் தலைவர் ஆவதற்கான  சிறந்த படிப்போ அனுபவமோ நேர்மைப் போக்கோ அவரிடம்  இல்லை என்கிறார்களா? இல்லை.  போயும் போயும் இந்த சில்லறை  அம்சங்கள் பற்றி அக்கறைப்படும் அளவிற்கு வேலையற்றவர்கள் அல்ல நம் தலைவர்கள்!

          தமிழகமும் கர்நாடகமும் பெற வேண்டிய காவிரி நதிநீர்ப் பங்கீட்டு அளவை தீர்மானித்து உச்ச நீதிமன்றம் சென்ற பிப்ரவரி 16-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.  ’அதன்படி மத்திய அரசு ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யாமல் தவிர்க்கிறது’ என்று கண்டனம் செய்து, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும்  உண்ணா விரதம், மறியல், கடையடைப்பு என்று போராடுகின்றன. பா.ஜ.க இதில் சேரவில்லை.  இந்த சூழ்நிலையில், சூரப்பா கர்நாடகத்திலிருந்து வந்தவர் என்பதால் போராட்டம் செய்யும் எல்லா அரசியல் தலைவர்களும் அவரது துணைவேந்தர் நியமனத்தை எதிர்க்கிறார்கள்.

          காவிரி நீர்ப் பிரச்சனை என்பது தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலத்து மக்கள் உருவாக்கியதல்ல. இது குறிப்பாகத் தமிழ்நாடு அரசு காவிரி நீரில் தனது நியாயமான உரிமைகளையும் நீர்த்  தேவைகளையும் முன்பே நிலை நாட்டாமல் பல ஆண்டுகள் தூங்கியதால் பூதமாய் வளர்ந்த பிரச்சனை. இப்போது இரு மாநிலங்களிலும் உள்ள சாதாரண மக்களின் நிலை என்ன? இரு வேறு குடும்பத் தலைவர்களின் சண்டையில், குடும்ப உறுப்பினர்கள் அவரவர் குடும்பத் தலைவர்களை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டிய நிலைதான் இரு மாநில மக்களுக்கும்.  ஆனால் தமிழக மக்களும் கர்நாடக மக்களும் மனதிற்குள் அடுத்த மாநிலத்தவரை எதிரியாகப் பார்ப்பதில்லை.

கோர்ட் முடிவுகள் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை இந்தியர்களுக்கு உண்டு.  ஆகையால் காவிரி நீர்ப் பங்கீடு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் கொடுத்த  இறுதித் தீர்ப்பையும், அது கோர்ட் சொல்படி அமல் செய்யப் படுவதையும் அவர்கள் சமாதானமாக ஏற்பார்கள்  என்று எதிர்பார்க்கலாம்.   இது இரு மாநில அரசியல்வாதிகளுக்கும் தெரிந்ததுதான்.  இருந்தாலும், காவிரி நீர் பிரச்சனையின் கடைசிக் கட்டமான இந்த நேரத்தில் ஏதாவது அமளி  ஆர்ப்பாட்டம் செய்வது முக்கியம் – அப்போதுதான் நமது அரசியல் மார்க் ஷீட்டில் நல்ல மதிப்பெண்கள் வரச் செய்து, சிலர் வாங்கி இருந்த பழைய முட்டை மார்க்குகளையும்  மக்கள் மறக்கச் செய்து,  ”காவிரிப் போராட்டத்தில் நான்தான் முதல் ரேங்க்!” என்று மார் தட்டலாம் என்று எல்லா கட்சித் தலைவர்களும் நினைக்கிறார்கள்.  அதன் ஒரு பகுதியாகத் தமிழக தலைவர்கள் சூரப்பாவின் துணைவேந்தர் நியமனத்தையும் எதிர்க்கிறார்கள். அதுதான் விஷயம். 

தமிழ்நாட்டில், காவிரி நதிநீர் சட்டப் போராட்ட வெற்றியில்  ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கிய அதிமுக-வுக்கு  மிக அதிகமான பங்கு உண்டு. இந்தப் பெருமையை தூக்கிப் பிடிக்க இயலாத இப்போதைய அதிமுக, ஆட்சியில் இருந்தாலும் எதிர்க் கட்சிக்காரர்களைப் போலவே மக்கள் கவனத்திற்கு அலையவேண்டி இருக்கிறது.  ஆகவே அவர்களும் சேர்ந்து “பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது” என்று நழுவுகிறார்கள்.

சூரப்பா என்ன குற்றம் செய்தார்? கர்நாடகத்தில் காவிரி நீரைப் பிடித்து வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு  போதிய அளவு கிடைக்காமல் செய்தது சூரப்பாவா? இல்லையே?  தமிழகத்துக்கு குறைந்த அளவுதான் நீர் திறந்துவிட முடியும் என்று அந்த மாநிலத்தில் அவ்வப்போது முடிவு செய்தது யார்? அங்கு ஆட்சி செய்த கட்சிகளின் தலைவர்கள் தானே? அதற்கும் சூரப்பாவிற்கும் என்ன சம்பந்தம்? வேலை தேடி கர்நாடகம் சென்று அங்கே நிரந்தரமாகத் தங்கி அச்சத்தில் இருக்கிறார்களே தமிழர்கள், அவர்களும் சூரப்பாவும் ஒன்றுதானே இந்த விஷயத்தில்? சூரப்பா கர்நாடகத்தவர் என்பதால் அவரது துணைவேந்தர் நியமனத்தை தமிழ் நாட்டுத் தலைவர்கள் எதிர்த்தால் – அதுவும் இந்த நேரத்தில் – அது தமக்கு எதிர்வினைகள் ஏற்படுத்தலாம் என்று கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் இன்னும் அச்சம் அடையலாம் அல்லவா? தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் அது பற்றிக் கவலை இல்லை? ஏனென்றால் அந்தத் தமிழர்கள் தமிழ் நாட்டில் ஓட்டுப் போட மாட்டார்கள்.

காவிரி நீர்ப் பிரச்சனையோ இல்லையோ, தமிழ் நாட்டின் எந்த பல்கலைக் கழகத்திலும் ஒரு தமிழர்தான் துணைவேந்தராக வரவேண்டும் என்று முழங்குகிற கட்சிகளும் பிரபலஸ்தர்களும் இந்த மாநிலத்தில் உண்டு.  அவர்களின் சிந்தனை இப்படித்தான் இருக்கும்: ’தமிழக மக்களின் வேலை வாய்ப்புத் திறனை நம்மால் வளர்க்க முடியவில்லையா? அதனால் நமக்கு பாதகமில்லை. எப்படியோ தானாக முயன்று அதை வளர்த்துக் கொண்டவர்கள் நல்ல வேலை தேடி தமிழகம் தாண்டிப் போனாலும் பரவாயில்லை. கெட்டிக்காரத் தமிழர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் நமக்கு தடைகள் சிலவும் அகன்றன என்று அர்த்தம். முடிந்தவரை தமிழ் நாட்டு வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே என்று கூக்குரல் எழுப்பினால், சரியான வேலை இல்லாமல் இருக்கும் எண்ணற்ற தமிழர்களின் ஆதரவு நமது கட்சிக்கும் தொழிலுக்கும் கிடைக்குமே! அது மட்டுமல்ல.  விசேஷத்  திறமையாளர் ஒருவரின் சேவை நமக்கு தேவைப்பட்டால் – உதாரணம் மருத்துவ சேவை – லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா என்று நாம் போய் வருவோம். நமது மக்களுக்கு கிடைக்கும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள், தகுதி குறைந்த தமிழர்கள் தலைமை தாங்கும் பல்கலைக் கழகங்களிலோ மருத்துவ மனைகளிலோ கிடைக்கிற தரத்தில் இருந்தால் போதுமே!'

கடைசியாக ஒரு மிக முக்கிய விஷயம். தமிழகத்தின் பல பல்கலைக் கழக துணைவேந்தர்களின் அருமை பெருமைகள் இப்போது மேலும் தெரிய வருகின்றன. யார் கண்டது?  ’சூரப்பா  போன்றவர்கள்  தமிழ் நாட்டு பல்கலைக் கழக துணைவேந்தர்களானால், நமது வாழ்க்கை வளம் பெறுவது எப்படி?’ என்ற சோகக் கவலைகளும் சில எதிர்ப்பாளர்களுக்கு இருக்கலாம். தமிழக கல்விக் கடலில் கிடைக்கும் முத்துக்கள் எவை எவை என்பது ஏற்கனவே அவற்றை எடுத்தவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும்!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

4 comments:

  1. vedikkaiyaana thamizagamum thamiz makkaLum. muzangkaalukkum mottaiththalaikkum mutichchup poattu kuttaiayik kuzappum thiRamai padaiththavarkaL naam. vaazga thamizakgam!

    ReplyDelete

  2. திராவிட நாட்டிற்க்காக குரல் எழுப்பும் இவர்கள் ஒரு கன்னடத்தவரை பல்கலை கழக துணை வேந்தராக ஏற்றுக கொள்ள முடியாமல் போராட்டம் நடத்தினால் எப்படி இவர்கள் நான்கு மாநிலத்தவருடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டு அமைதியாஹ மக்களுக்கு தொண்டு ஆற்ற முடியும்? இது மக்களை முட்டாள்கள் என்று அரசியல் வாதிகள் நினைப்பதினால் ஏற்படும் ஒரு கூத்து. மக்கள் தான் இதற்கு ஒரு முடிவை காண வேண்டும். விழித்தெழு தமிழா.

    ReplyDelete
  3. All the three or four previous VCs of Anna University have been charged with corruption.Some got away. Same situation with most other State Universities. I was actually praying that a Tamizh should not become a VC just 'cos he cannot but be corrupt under DrsviDrav dispensation.

    ReplyDelete
  4. This situation is specific to Tamil Nadu.The dravidian parties are experts in converting everything into a controversry and target the Central Government. What is conveniently hidden by these elements is the posts held by tamilians at other Univerisites all over the country. For fifty years these shameless culture has been assiduously developed by all dravidian parties. IT IS TIME FOR ALL LIKE MINDED PEOPLE TO COME TOGETHER AND EXPOSE THESE MISDEEDS WHICH ARE NOT HELPING TN people in any way.

    ReplyDelete