Monday 25 December 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: அசுரனுக்கு அரோகரா!


நேற்றைய ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு என்ன சொல்கிறது?

நீங்கள் டி.டி.வி. தினகரனின் விசுவாசியாக இருந்தால் அவர்தான் “எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்பது மக்களின் தீர்ப்பு” என்று மார் தட்டலாம். தி.மு.க அனுதாபி என்றால் “100 கோடி ரூபாய்க்கு கிடைத்த வெற்றி” என்று சலிக்கலாம். அதிகாரபூர்வ அதிமுக-காரர் என்றால் - அதுவும் முன்பு ரத்தான இடைத் தேர்தலில் தினகரனுக்கு 'வேலை' பார்த்தவர் என்றால் - "விரைவில் நிச்சயம் மக்கள் புரிந்து கொள்வார்கள்" என்று கூறி காற்று எந்தப் பக்கம் பலமாக வீசுகிறது என்று நோட்டம் விடலாம். பா.ஜ.க ஆதரவாளர் என்றால் திகைப்பில் சில கணங்கள் வாய் பேச முடியாமல் போகலாம்.  இந்த ஒரு வகையிலும் நீங்கள் சேராதவர் என்றால், தினகரனின் அமோக வெற்றி சில அடிப்படை உண்மைகளை பறை சாற்றுகிறது என்று உடனே உணரலாம்.

ஆட்சியில், அரசியலில் நேர்மையும் திறமையும் உயர வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தினகரன் வெற்றியை ரசிக்க மாட்டார்கள். அவரது வெற்றிக்கு மூன்று நாட்கள் முன்னதாக திமுக-வின் ஆ.ராசா சி.பி.ஐ வழக்கிலிருந்து  விடுதலை ஆனபோது எப்படி மனம் கலங்கினார்களோ, அதே நிலையில்தான் இப்போதும் இருப்பார்கள்.  தினகரனும் ராசாவும் ஒன்றை சத்தம் போட்டு சொல்லலாம்: "சட்டப்படி நான் ஜெயித்திருக்கிறேன்". மற்றவர்கள் இதற்கு எளிதாக பதில் சொல்ல முடியாது.  ராசா விஷயத்திலாவது அப்பீல் கோர்ட்டுகள் உண்டு.  தினகரனின் இடைத் தேர்தல் வெற்றிக்கு  எளிதான அப்பீல் கிடையாது.

'ஓட்டுக்கு ஐயாயிரம் பத்தாயிரம் என்று ஆர்.கே. நகர் தொகுதியில் விநியோகம் நடந்தது. மக்களும் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள்' என்று பலர் விமரிசனம் செய்வதில் உண்மை இருக்கும்.  இதை கண் கூடாகப் பார்த்துத் தான் அறிய முடியும் என்பதில்லை. காரண காரியமாக வாரி வாரிக் கொடுக்கும் சக்தி மிகுந்த வேட்பாளர்களும் கட்சிகளும் உண்டு என்பதால், அந்த அரிய சக்தியை அவர்கள் விரயம் செய்ய மாட்டார்கள்.  சாதாரண மக்கள் ஏழைகளாகவே பிடித்துவைக்கப் பட்டிருப்பதால், கிடைக்கும் பணத்தை அவர்கள் வாழ்க்கை நிவாரணமாக வாங்கிக் கொள்ளத்தான் செய்வார்கள். மக்களின் பரிதாப நிலையைப் பயன்படுத்தி அவர்களை மேலும் அவலத்தில் வீழ்த்தும் அசுரர்களின் முயற்சி ஆர்.கே. நகரில் மீண்டும் அரங்கேறி இருக்கிறது. பலியாகும் அப்பாவி மக்கள் மீது நாம் அனுதாபப் படலாம்.  அசுரர்கள் மீது கோபம் கொள்ளலாம் அவர்களை இன்னும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை யோசிக்கலாம். 

'காசு வாங்கிக் கொண்டு அதற்காக மக்கள் ஓட்டு போட்டால் நாடு எப்படி உருப்படும்?' என்று ஜனநாயக கோபத்தில் கேட்பவரா நீங்கள்? அப்படியானால் இன்னும் சில விஷயங்களை பார்க்கலாம்.

ஓட்டுக்கு என்று நோட்டுக்கள் கொடுத்தால் அதை மகிழ்ச்சியோடு வாங்குபவர்கள் பணத்தேவை அதிகம் உள்ள சாதாரண மக்களாக இருப்பார்கள். உதாரணமாக, ஸ்டாலின், டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய சிலரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.  இவர்கள் அரசியலில் இல்லாமல், இதே பணவசதி படைத்தவர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள் (”இது எப்படி? லாஜிக் உதைக்கிறதே!” என்று கேட்காதீர்கள். இது கற்பனையான உதாரணம்தான்). அப்போது யாராவது ஓட்டுக்கு என்று ஐயாயிரம் பத்தாயிரம் கொடுத்தால் இவர்கள் அதை வாங்குவார்களா?  மாட்டார்கள் என்றுதான் நியாயமாகச் சொல்ல வேண்டும். இவர்களை விடப் பல படிகள் பண வசதி குறைந்தவர்கள், ஆனாலும் ஓரளவு வசதி உள்ளவர்களும் வாங்க மாட்டார்கள்.  ஆனால் சுதந்திரம் அடைந்து எழுபது வருஷம் ஆன பின்னும் பெருவாரியான சாதாரண மனிதர்கள் பிச்சைக்காரர்கள் நிலையை விட அரை எட்டு முன்னால்  நிற்பது அவர்கள் தவறா, ஆட்சி செய்தவர்களின் மஹா பாதகமா?

தமிழ் நாட்டைப் பொறுத்த வரை, சாதாரண மக்களுக்கு 'சுய சம்பாத்தியம் இல்லாவிட்டாலும் கவலைப் படாதீர்கள். இதோ இலவசங்கள்!' என்று குடம், குத்துவிளக்கு, சைக்கிள், லாப்டாப் என்று வருடக் கணக்கில் ஏதாவது வழங்கி மாநில பொருளாதார முன்னேற்றத்தை  மிதித்து, மக்களின் சுய மரியாதையையும் நசுக்கியவர்கள் யார்?  தேர்தல்களுக்கு முன்னால் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தது யார்? முன்னணி அரசியல் தலைவர்கள் தானே? தினகரனை முந்தி ஆர்.கே. நகரில் ஜெயிக்க கடும் போட்டி போட்ட திமுக-வும் அதிமுக-வும், மக்கள் பிச்சைக்காரர்கள் நிலையில் இருக்க காரணமானவர்கள் தானே? 'நான் உருவாக்கிய பிச்சைக்காரர்கள் என்னிடம் மட்டும் பிச்சை எடுக்கவேண்டும். நான் கொடுக்கும் அளவிற்கு மேல் எங்கும் எதிர்பார்க்கக் கூடாது' என்று  எவரும், எந்தக் கட்சியும், நினைப்பது மனித இயல்புக்கு எதிரானது. நீங்கள் ஒருவருக்கு தன்னம்பிக்கை, சுயமரியாதை போன்ற நல்ல பண்புகளை ஊட்டி வளர்த்தால், அவர் அந்தப் பண்புகளை உங்களிடம் காட்டுவார், மற்றவர்களிடமும் வெளிப்படுத்துவார். அவரை வெறும் பிச்சைக்காரராக நீங்கள் வைத்திருந்தால் அவர் உங்களிடம் மட்டும் இல்லாமல் எல்லாரிடமும் பிச்சைக்காரராகவே   இருப்பார். உங்களை  விட உங்கள் விரோதி தாராளமாக பிச்சை அளித்தால் அவரிடம்தான் முதலில் போவார் – அதோடு உங்களிடமும் வாங்கிக் கொள்வார். இதே ரீதியில் சில ஆர்.கே. நகர் உண்மைகள் அனைவர் மனக்கண்ணிலும் பளிச்சிட வேண்டும்.  ஆர்.கே. நகரின் வெற்றி நாயகன் இவற்றை உணர்த்துகிறார் அல்லவா?

இன்னொரு விஷயம். தமிழ் நாட்டில் மதுக்கடைகள் வேண்டாம் என்று பல ஊர்களில் போராட்டம் செய்த பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காகத்தான் வீதியில் இறங்கினார்கள். ஆர்.கே. நகரில் விநியோகம் செய்யப் பட்ட பணத்தை பெண்கள் ஆர்வமாக வாங்கினார்கள் என்றால் அதே குடும்ப நலன்தான் காரணம். குடும்ப நலனுக்காக பெண்களின் அளவுக்கு ஆண்களின் அர்ப்பணிப்பு உலகில் எங்கும் கிடையாது என்பதால் ஆண் வாக்காளரகள் பெற்ற பணத்தை வேறு  கோணத்தில் பார்க்க வேண்டும் - அதாவது பிச்சைக்காரர்களாக வைக்கப் பட்டவர்கள் என்று மட்டும்.  கிடைத்த பணத்தை அவர்கள் எப்படியும் செலவு செய்திருக்கலாம். 

”ஒரு சாதாரண அரசு ஊழியர் தனது வேலையில் லஞ்சம் வாங்கி தன் குடும்ப நலனுக்கு செலவு செய்தால் அதுவும் இயற்கையான மனித சுபாவமா? அதற்கும் அனுதாபம் கொள்ள வேண்டுமா?” என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.  இந்த உதாரணத்தில் லஞ்சம் வாங்குபவர் அரசாங்க வேலை ஒழுங்காக நடுநிலையாக நடக்க விடாமல் செய்கிறார். லஞ்சம் தராத பொது மக்களுக்கு இன்னல் செய்கிறார். அதாவது மற்ற சாதாரண மனிதர்களும் பாதிக்கப் படுகிறார்கள். அரசாங்கத்திற்கும் பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்படுத்துகிறார். இந்தக் கேடுகள், சாதாரண மனிதர்கள் ஓட்டுக்குப் பணம் பெற்றுக் கொள்வதில் இல்லை. ஆகையால் ஓட்டுக்கு பணம்  வாங்கும் அப்பாவி வாக்காளர்கள் மீது சற்று அனுதாபம் கொள்ளலாம் - இது அவர்களைப்  பாராட்டுவது அல்ல. 


’அரசாங்கத்தின் ஆட்சி பீடத் தலைவர்கள் பொதுப்பணத்தில் முறைகேடாக மலையளவு கோடிகள் சம்பாதிக்கிறார்கள், அதுதான் ஓட்டுக்கு பணமாக சொட்டு சொட்டாக வெளி வருகிறது’ என்றும் வாக்காளர்கள் நினைப்பார்களோ? இந்த வழியில் தமிழ் நாட்டில் மிகப் பெரும்  கோடிகள் சேர்க்கப் படுவதால் இந்த மாநிலத் தேர்தல்களில் மட்டும் கோடி கோடியாக ஓட்டுக்கு பணம் கொட்டுகிறதோ? ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி அடைய பெரிதும் ஆசைப்பட்டவர்களுக்கு கடந்தகால ரகசிய உண்மைகள் நன்றாகத் தெரியும். நீங்களும் சரியாக ஊகிப்பீர்களே!

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017

5 comments:

  1. most shameful and dangerous trend ..
    Both the 2G verdict and this fellow's victory !!
    Ah!! Krishna..
    ParithraaNaaya saadhoonaam vinaasaaya cyha dusshkrithaam endru sonnaaye!! Enge irukkiRaay nee? Sathre veLiye vaa :)))

    ReplyDelete
  2. I am remembered of a speech by late Sri Rajaji . He said in a public meeting that if Politicians offer money don’t refuse , take it because it is illegal money taken as bribe from genuine people. But when it comes to voting , your vote should be to a honest person . Only he will give a honest Govt. There is no Papam or Punyam in these things. He has surplus and he gives it to you - think like that and act as per conscience!
    That is what RK Nagar people should have done to get rid of corrupt people in Politics.

    ReplyDelete
  3. But is this trend new at all?.. Afterall this is only a reiteration of India is Indira and INdira is India days.(recall the infamous remarks during the Emergency).
    I am not sure how many of you have seen Priyanka Gandhis Photos in the rooms of most COngress Spokesmen who come on TV

    ReplyDelete
  4. No where else in India do we find money distribution before elections as rampant as in Tamil Nadu.

    ReplyDelete