Monday, 5 June 2017

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: கோபாலகிருஷ்ண காந்தியின் புது மந்திரம் - காக்க காக்க, முத்துவேல் காக்க!


கோபாலகிருஷ்ண காந்தியைப் பத்தி கேள்விப் பட்டிருப்பேள். சோனியா காந்தி, ராகுல் காந்தி மாதிரி சாதாரண காந்தி இல்லை அந்த மாமா. அவர் மஹாத்மா காந்தியோட பேரன். ராஜாஜிக்கும் பேரன். முன்னாள் ஐ.ஏ.எஸ், முன்னாள் மாநில கவர்னர்ங்கற பேரும் இருக்கு. அப்டின்னா மாமாக்கு மனசுக்குள்ள எவ்வளவு பெருமையா இருக்கும்? அதெல்லாம்  இருக்கவேண்டியதுதான்.

முத்துவேல் கருணாநிதிக்கு – நம்ம கலைஞருக்குத்தான் - மத்த கட்சி அரசியல் சகாக்கள்ளாம் கூடி ரண்டு நாளைக்கு முன்னால ஒரு பாராட்டு விழா நடத்தினா. அவரோட 94-வது பொறந்த நாளுக்கும், அவர் சட்டசபை எம்.எல்.ஏ-வா அறுபது வருஷம் பூர்த்தி பண்ணினதுக்கும் சேர்த்து கொண்டாடின விழா. நான் இப்ப ஜீவிச்சு இருந்தேன்னா, வயசுல கருணாநிதிக்கும் பெரியவளாத்தான் இருப்பேன். அதுனால அவருக்கு என்னோட மனமார்ந்த ஆசிகள் உண்டுன்னு சொல்லிப்பேன்.

அந்த பாராட்டு விழா நடந்த அன்னிக்கு கோபாலகிருஷ்ண காந்தி ஹிண்டு இங்கிலிஷ் பேப்பர்ல ஒரு கட்டுரை எழுதி இருந்தார், நீங்களும் படிச்சிருப்பேள். அதுல அவர் கருணாநிதியோட அருமை பெருமைன்னு விவரிக்கறார். சில சில வாக்கியங்கள்ள, அவர் என்ன சொல்றார்னு அவருக்கே தெரிஞ்சா சரின்னு வச்சுக்கலாம். அதுக்கு உச்சமா அவர் கட்டுரைலேர்ந்து ஒரு உதாரணம் சொல்றேன். கருணாநிதிக்குள் ”மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் தெய்வம்-நோக்கிய தன்மை” (”his alleged ‘hidden’ godward-ness”) அப்டின்னு ஏதோ எழுதி கருணாநிதியை என்னவோ சிலாகிக்கறார்.  பகவானுக்குத் தான் புரியணும்!  எழுதினவர் செயின்ட் ஸ்டீபன் காலேஜ்ல எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிச்சிருக்கார். கொஞ்சம் தெளிவும் சேர்ந்து அவரோட ஆங்கிலப் புலமை சிறக்கட்டும்னு நான் வாழ்த்தினா தப்பில்லை. சரி, இதெல்லாம் போகட்டும்னு விட்டுடலாம். ஆனா வேற ஒண்ணும் அவர் எழுதினதுல இருக்கு. அதை சொல்லியே ஆகணும்.

கருணாநிதியோட வெளிப்படைத் தன்மை-னு ஒரு விஷயத்தை கோபலகிருஷ்ண மாமா ரொம்பவே உசத்திச் சொல்றார். அவர் எழுதினதை அப்டியே இங்க தமிழ்ல தரேன். என்னை மாதிரி மூச்சைப் பிடிச்சுண்டுதான் நீங்களும் படிக்கணும். ரெடியா? இதோ படிங்கோ: “அவரது மகளின் தாயை அவர் அங்கீகரித்தாரே, அது மாதிரி அசாத்தியமான வெளிப்படைத் தன்மை பொது வாழ்வில் எத்தனை பேரிடம் இருந்தது?”

   ஒரு வேண்டாத  விஷயத்தை,  கூடாத விதத்துல முழங்கறது எப்டின்னு காட்டிருக்கார் கோபாலகிருஷ்ண காந்தி.   அவர் என்ன சொல்றார்ங்கறதை, பின்னணி விவரங்களோட இப்டி விளக்கிச் சொன்னா நன்னா புரியும். ”கருணாநிதியோட மனைவி இருக்கறபோதே அவர் வேற ஒரு பொண்ணையும் துணைவியா சேத்துண்டார். அந்தத் துணைவியோட குடும்பம் நடத்தி அவாளுக்கு ஒரு பொண் குழந்தையும் பொறந்தது. அந்தப் பொண் குழந்தை இப்போ பெரிசா வளர்ந்து அதைக் கட்சிலயும் கருணாநிதி ஒரு தலைவரா ஆக்கிட்டார். அந்தப் பொண் குழந்தையோட அம்மாவை, அதாவது தன்னோட  துணைவியை, கருணாநிதி மறைச்சு வைக்கல.  தைரியாமா, எல்லார்க்கும் தெரியறா மாதிரித்தான் அந்தத் துணைவியோடயும் அவர் வாழ்க்கை நடத்தினார்.  அந்த ரண்டாவது வாழ்க்கையையும் வெளிப்படையா வாழணும்னா, மனுஷருக்கு என்ன அசாத்தியத் துணிச்சல்! அந்த மாதிரித் துணிச்சல் வேற யார்கிட்ட இருந்தது?”

இது மட்டும் இல்லை. மத்த தலைவர்களோட ஒப்பிட்டுத்தான இப்டி ஒரு பாராட்டை அவர் கருணாநிதிக்கு சமர்ப்பணம் பண்றார்? அப்டின்னா கோபாலகிருஷ்ண காந்தி மத்தவாளுக்கும் ஒண்ணு சொல்றார்னு அர்த்தம்: ”பொது வாழ்க்கைல இருக்கற ஆண்கள் பல பேருக்கு, வேற ஒரு பொண்ணோடயும் வாழ்க்கை அமைஞ்சிருக்கும்.  அதெல்லாம் வெளில சொல்லிக்காம மறைச்சு மறைச்சு ரகசியமா வச்சுக்கறா.  அப்டில்லாம் அவா இருக்கப் படாது.  தமிழ்நாட்டுத் தலைவர் மாதிரி மஹா தைரியமா உலகத்துக்குத் தெரியப்படுத்தி உலா வரணும்” அப்டின்னு, சொல்லாம சொல்றார்.  சிரிப்பைத்தான் அடக்கிக்கணும்.

பாருங்கோ, பாராட்டு விழா நடந்தது கருணாநிதியோட பொது வாழ்க்கை சிறப்புக்காக. இள வயசுலேர்ந்து 94 வயசு நெருங்கற வரைக்கும் பொது வாழ்க்கைலயும் வேற துறைகள்ளயும் கொடிகட்டிப் பறந்தவர்னு, கூட்டம் கூட்டி அவரை கௌரவிச்சா. அயராத உழைப்பு, தமிழறிவு, மேடைப் பேச்சு, எழுத்து, அரசியல் சாமர்த்தியம்னு அவருக்கு உண்டான சிறப்பை சொல்லிண்டே போகலாம். ஒரு விமரிசகரா இருந்து நடுநிலையா பேசணும்னா அவரோட அரசியல் மைனஸ் பாயிண்டையும் தொட்டுட்டுப் போகலாம்.  இந்த நேரத்துல கோபாலகிருஷ்ண காந்தி அப்டி நடுநிலையா இல்லாட்டாலும் பரவாயில்லை. ஆனா, மனைவி இருந்தும் இன்னொரு பொண்ணை தன்னோட வாழ்க்கைத் துணைவின்னு அங்கீகரிச்சது கருணாநிதியோட அசாத்தியச் சிறப்பாக்கும், அப்டி இப்டின்னு எழுத வேண்டாம். 


கருணாநிதி அந்தக் காலத்து மனுஷர். எதோ இன்னொரு பொண்ணோடயும் வாழ்க்கை நடத்தினார், அவ்வளவுதான்னு அதை ஒதுக்கிட்டு கருணாநிதியோட பொது வாழ்க்கையை மட்டும் விமரிசனம் பண்றதுதான் சரி, நாகரிகம்.  அந்த விஷயத்துக்கு கிரெடிட் குடுத்து பேசணும்னா, குடும்ப அமைதிக்காக சாந்தமா இருக்காளே கருணாநிதியாட சட்டபூர்வமான மனைவி, அவாளுக்குத்தான் அந்த கிரெடிட் சேரணும்.   இதுக்கு மேல, கருணாநிதியைப் பாராட்டறதுக்கோ, அவரைப் பிலு பிலுன்னு பிடிச்சு கண்டனம் பண்றதுக்கோ இதுல விஷயம் ஒண்ணும் இல்லை.  ஆனா கோபாலகிருஷ்ண காந்தி இதை அஹா ஒஹோன்னு இப்ப பேசினதுனால, நான் அவரைப் பத்தி மட்டும் ஒண்ணு சொல்றதுக்காகத் தான் இந்த விஷயத்தை – அதாவது கோபாலகிருஷ்ண காந்தி புகழ்ந்து எழுதினதை – எடுத்துக்கறேன்.

ஒரு ஹிந்து மத ஆண்மகன், சட்டபூர்வ மனைவி இருக்கும்போது இன்னொரு பொண்ணோடயும் சேர்ந்து வாழறது சட்டப்படி தப்பு, மத்தபடியும் சரியில்லைன்னு எல்லார்க்கும் தெரியும். யார் அந்தத் தப்பை செஞ்சாலும் – அதுவும் பொது வாழ்க்கைல இருக்கறவர் செஞ்சா – ஒரு கட்டத்துக்கு மேல அந்த வாழ்க்கையையும் அங்கீகரிக்கறதுதான் விவேகம். அப்டித்தான் அதை சரி பண்ணமுடியும். அதைத்தான் கருணாநிதி பண்ணினார். இல்லாட்டி வேற புதுப் பிரச்சனைலாம் குடும்பத்துல பல பேருக்கு வருமே?  கருணாநிதியை அமோகமா பாராட்டணும்கற ஆசைலதான் கோபாலகிருஷ்ண மாமா தாட்பூட் இங்கிலிஷ்லயும் தத்துப் பித்துன்னு எழுதிட்டாரோ என்னமோ.  இதை நான் ஏன் மெனக்கெட்டு பேசறேன்னா, சொல் செயல் ரண்டுலயும் எளிமை, தெளிவு, நேர்மைன்னு இருந்தவா மஹாத்மா காந்தியும் ராஜாஜியும். அவாளோட பேரப் பிள்ளை இப்டிலாம் எழுதறதைப் பாத்தா கஷ்டமா இருக்கு. 

இன்னொரு விஷயம். எதிர்க் கட்சிகளோட அடுத்த ஜனாதிபதி வேட்பாளரா கோபாலகிருஷ்ண காந்தி இருக்கலாம்னு பரவலா இப்ப நியூஸ் வரது. அவரும் அதை மறுக்கலை. ஜனாதிபதியா வந்தாலும் வரலாம்னு இருக்கறவர் இப்டி அசட்டுத்தனமா பேசப்படாதேன்னு நினைச்சுக்கறேன். ஆனா அவரைப் பொறுத்தவரை, பதவி ஆசைன்னு வந்தா அசட்டுத்தனம், அது இதுன்னு பாக்க முடியாதுன்னு நினைச்சிருக்கலாம். ஜனாதிபதி வேட்பாளார் ஆக தி.மு.க-வோட ஆதரவு வேணும்னா, யாரும் நினைச்சுப் பாக்காத வகைல முத்துவேல் கருணாநிதியை துதி பாடினாத்தான் அது சாத்தியம்னு இப்டில்லாம் எழுதிட்டாரோ?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017

8 comments:

 1. Great is the alasal of Ambujam patti.It is indeed unfortunate that so much is spoken about the CK- who institutionslized the demon Corruption. We need hundreds of Ambujam pattis at this juncture. Thanks.

  ReplyDelete
 2. I am remembered of an advice, if you do not have anything good to say don't open your mouth. You will only expose your ideocity !
  He has proved the saying right !

  ReplyDelete
 3. fantastic analysis. Since you claim copyright, can I have the permission to share in face book

  ReplyDelete
 4. When reading the article in Hindu I was shocked by the very traits or acts glorified and pointed out by you! I made a note never to read GG articles again. Good analysis

  ReplyDelete
 5. the art of survival, alien to the grand parents, seem to be the pet-theory of the illustrious grand son! The aim is high , the target is far off and the preparations for achieving the same needs to be more methodical and the writer is at t in his best!!
  -Badri

  ReplyDelete
 6. you dont expect sense from politicians?

  ReplyDelete