Thursday 16 February 2017

ஜனநாயகத்தின் பாட்டைப் பாருங்கள்!


     எம்.ஜி.ஆர் முன்னிருத்தி அவர் பெயரை உச்சரித்துக்கொண்டு அரசியலில் வளர்ந்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

   ஜெயலலிதாவை ’அக்கா’ ’அம்மா’  என்று போற்றி, தானும் ‘சின்னம்மா’ என்று போற்றப்பட்டு, அரசியலில் இப்போது பெரிதாக வளர முனைகிறவர் சசிகலா. இவர்கள் இருவருக்கும் எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை முறையாக முடிப்பது நீதிபதிகளுக்கே பெரிய சவாலாக இருந்தது. கடைசியில் இந்த இருவரும், இன்னும் வேறு இருவரும், சொத்துக் குவிப்பு என்னும் ஊழல் குற்றத்தைச் செய்தவர்கள், ஆதற்காகக் கூட்டு சதி செய்தவர்கள், உடந்தையானவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால் சசிகலாவோ, அல்லது அவரிடம் பயத்தையும் பவ்யத்தையும் தொடர்ந்து காட்டும் பெருவாரியான அதிமுக எம்.எல்.ஏக்களோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கூட அங்கீகாரமும் மதிப்பும் காட்டியதாக ஒரு அறிகுறியும் இல்லை. மாறாக, பொதுவாழ்வில் ஒழுக்கமும் தூய்மையும் தேவையே இல்லை என்கிற தோற்றம்தான் தந்திருக்கிறார்கள். இது சரியான செயல் என்றால், எதிர்க் கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வேறொரு ஊழல் வழக்கில் தீர்ப்பளித்து, அந்தக் கட்சியினரும் அப்படியான தீர்ப்பை உதாசீனம் செய்து குற்றவாளித் தலைவரைக் கொண்டாடினால் அதையும் அதிமுக-வினர் நியாயம் என்பார்களா? மாட்டார்கள்.


      சாதாரண  செருப்புத்  திருடன் கூட,  பிடிபட்டால் அவமானம் அடைகிறான். ஆனால் ஜெயலலிதாவும் அவர் தோழி சசிகலாவும் முறையற்ற வகையில் பெரும் சொத்து சேர்த்த குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றமே ஊர்ஜிதம் செய்த பின்னும், சசிகலா எந்தக் குற்ற உணர்வும் இல்லாது பவனி வந்தார். ’உச்ச நீதிமன்றம்தான் ஏதோ தப்பு செய்துவிட்டது, நீதிமன்றத்தை மன்னித்துவிடலாம்’ என்பது போல்தான் அவரும் அவரைச் சார்ந்த அதிமுக-வினரும் காட்சி தந்தனர். ஜெயில் தண்டனையை அனுபவிக்க சசிகலா பெங்களூருவுக்குச் செல்லும்போதும், அவர் காசிக்குப் புண்ணிய யாத்திரை போவது மாதிரியான சில வழிபாடுகளை இரண்டு நினைவிடங்களில் ஆதரவாளர்கள் புடைசூழ நிதானமாகச் சென்னையில் நிகழ்த்திவிட்டுப் புறப்பட்டார். அவர் ஜெயிலுக்குப் போன பின், ‘தியாகத் தாய் சின்னம்மா’ என்ற கோஷமும் எழுப்பி அவர் கட்சியினர் அவரைப் புகழ்கிறார்கள்.  இன்னும் என்னவெல்லாம் காணக் கிடைக்குமோ?

    எம்.ஜி.ஆர் திரையில்  பாடிய ஒரு பிரபலமான பாட்டின் முதல் இரண்டு வரிகள் இப்போது ஞாபகத்துக்கு வருகின்றன. அவை: “நான்……… செத்துப் பொழச்சவண்டா. எமனை, பாத்து சிரிச்சவண்டா”.  மறைந்தவர் என்பதால் ஜெயலலிதாவை இந்த விஷயத்தில் விட்டுவிட்டு, சசிகலா இந்தப் பாட்டை எப்படி ஆரம்பிப்பார் என்று கேட்டால், இப்படிச் சொல்லலாம்: “நான் ……… சொத்துக் குவிச்சவடா! கோர்ட்டை, பாத்து சிரிச்சவடா!” 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017



9 comments:

  1. கேவலமான தமிழக அரசியலைப் பார்த்து ச்நில்னர் அழுவார், சிலர் சிரிப்பார், நான் அழுதுகொண்டே யிருக்கின்றேன்.

    ReplyDelete
  2. சிலர் என்று கொள்ளவும்.

    ReplyDelete
  3. Crisp, pointed remarks. The last few words in Para 1 absolutely right. Same fishes in the dirty pond.

    ReplyDelete
  4. Well said. The pity is even honest people are mute spectator.Feel guilty that not able to do anything. But can create awareness and slowly build

    ReplyDelete
  5. Whatever is happening is sheer madness. We are helpless and cant do anything other than share our feelings thus. Tamils have become laughing stock in front of the others. What a fall ! What a pity !

    ReplyDelete
  6. எம்.ஜி.ஆர். சினிமாவில் வரும் இந்த பாடல் சசிக்கு தெரியாதா என்ன?
    "தப்பு என்பது தவறிச் செய்வது ; தவறு என்பது தெரிந்து செய்வது
    தப்பு செய்தவன் திருந்தி வாழணும் ; தவறு செய்தவன் வருந்தி வாழணும்"

    ReplyDelete
  7. Such a mockery of the democratic system we have in place. Tamizhanai pola Keanaiyan yaarum errukka mudiyaathu!!! Tamils all over have become a laughing stock....If all these youngster who fought for Jallikattu can come together to fight it out in the name of Tamil Pride they should do now...at each of these MLAs constituency and block them from entering & filing a complaint that all these fellow thieves are party to their party leader(s) - dead & alive....

    ReplyDelete
  8. I was bemused by the attitude displayed by Sasikala in the wake of SC decision. This perception is brought out by you succinctly. Sasi was broken, not feeling guilty, but due to her inability to assume the office of CM. ADMK celebrates SC decision when it is favourable to it (eg. in Cauvery issue)but imprecates it when it disfavours it. Icing of the cake is the failure of the opposition parties to explain the SC decision to the general public. I bet it is because major opposition parties (DMK, Congress & PMK) are awaiting similar blow from Supreme Court shortly.

    ReplyDelete
  9. திட்டம் போட்டுத் திருடுறகூட்டங்கள் திருடிக் கொண்டே இருக்கின்றன தமிழ் நாட்டில். ஊழல்களை சட்டம் பின்னர்தான் தண்டிக்க வேண்டிய ஒரு தலை விதி. ஊழல் தடுப்புச் சட்ட அமலாக்கம் முற்கூட்டியே செயல்படாததால் அவர்கள் பலகொள்ளைகளில் வெற்றி பெற்று ஆட்சியும் தொடர்கிறார்கள். இது போன்ற அரசியல் வேண்டாம் என தமிழ் மக்கள் அறிந்து இந்த அரசியல் அமைப்பினை உடைத்தெறிந்து உடனேசெயலுற்றால்தான் தமிழ் நாடு இனி நமது வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழவழிகோலும.

    ReplyDelete