Monday, 13 February 2017

சசிகலாவா பன்னீர்செல்வமா?


       சசிகலாவா பன்னீர்செல்வமா? யார் ஜெயலலிதாவுக்குப் பின் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வர வேண்டும்? இப்போது மாநிலம் தீர்வு தேடும் பிரச்சனை இது.

        பன்னீர்செல்வமே    முதல்     அமைச்சராகத்    தொடரவேண்டும்,  சசிகலா வேண்டாம், என்பவர்கள் பிரதானமாகச் சொல்வது: ”சசிகலா அரசியல் அனுபவம் இல்லாதவர். அவர் வந்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அரசாங்க முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி அதன் பயன்கள் எங்கோ போகும். பன்னீர்செல்வத்திடம் அந்தக் குறையோ ஆபத்தோ இல்லை. தவிர, பன்னீர்செல்வம் எளிமையானவர். சசிகலா மாதிரி, கும்பிடு போடுபவர்களை எதிர்பார்க்கும் தலைக்கனம் கொண்டவர் அல்ல. அது மட்டுமல்ல, சசிகலா எதிரியாக உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வரப்போகிறது, அதில் அவர் குற்றவாளி என்றாகித் தண்டனை அடைந்தால் அவர் உடனே பதவி விலகவும் ஏற்படும். ஆகையால் சசிகலா முதல் அமைச்சராகக் கூடாது, பன்னீர்செல்வம்தான் வரவேண்டும்.”

      சசிகலா முதல் அமைச்சராகப் பதவி ஏற்கவேண்டும் என்பவர்களின் வாதம்: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை எட்டுவதற்கான ஆதரவு, அதிமுக எம்.எல்.ஏக்கள் வாயிலாக அவருக்கு இப்போதுவரை உள்ளது.  இது வலிமையான வாதம். ஆனால் அந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் சுதந்திரமாக வாக்களிக்கும்போது பன்னீர்செல்வம் ஜெயிக்கிற அளவுக்கு அவருக்கே ஆதரவு தந்தால் அவர்தான் முதல்வர். ஆக இதெல்லாம் வெறும் எண்ணிக்கை விவகாரம். சட்டசபையில்  ஓட்டெடுப்பு நடந்தால் இது தெளிவாகும். அதில் வெல்கிறவர் முதல்வர் ஆவார். இருவருக்குமே எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு சட்டசபையில் கிடைக்காமல் போனால் சட்டம் வேறு தீர்வை வைத்திருக்கிறது.  இது போக,  பரவலாகப் பேசப்படாத விஷயங்கள் சிலவும் இதில் முக்கியமானவை. அதற்கு முன் சில சங்கதிகளைப் பார்க்கலாம்.   

        ’அண்ணாவின் ஆட்சியை நாங்கள்தான் அமைத்தோம், அல்லது அமைப்போம்’ என்று திமுக-வும் சொன்னது, அதிமுக-வும் சொன்னது. ஆனால் அண்ணா வேறு, கருணாநிதி வேறு, எம்.ஜி.ஆர் வேறுதான். இப்போது ’அம்மாவின் ஆட்சியை நாங்கள்தான் நிறுவுவோம்’ என்று சசிகலாவும் பன்னீர்செல்வமும் சொல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா வேறு, சசிகலா வேறு, பன்னீர்செல்வம் வேறுதான். மறைந்தவரின் பெயரைச் சொல்லி, ’அவரது ஆட்சியை நான் தருவேன்’ என்று எந்த அரசியல்வாதி சொன்னாலும் அந்தப் பேச்சில் உண்மை இருக்காது, தந்திரம்தான் இருக்கும். அரசியலிலும் ஆட்சியிலும் தந்திரம் தேவைதான்.  ஆனால் அதையும் தாண்டி, செயல் பேசவேண்டும். அதுதான் முக்கியம்.  ஆனால் பேசுவதுதான் பெரிய செயல் என்று தமிழ்நாட்டில் ஆகிவிட்டது.

       தீவிர  அரசியலுக்குப்  புதியவரானாலும்,  தனது 70-வது வயதில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகிறார். அதுவே ஜனநாயகத்தில் சாத்தியமாகிறது. அப்படி என்றால் 30 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவின் உதவியாளராக அவருக்கு மிக நெருக்கமாக இருந்து, கொல்லைபுற அரசியலில் காதோ காலோ வைத்திருந்த சசிகலா தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக நினைப்பது ஜனநாயகத்திற்கு முரண்பட்டதல்ல.  ஆனால் அந்தப் பதவியை அடைந்து  மாநில அரசாங்கத்தை வழி நடத்த இவர் சிறந்தவரா என்பது வேறு விஷயம்.  இந்தக் கேள்வி பன்னீர்செல்வத்தை நோக்கியும் வரும்.

        ’சசிகலா    முதல்வராக   வந்தால்   அவர்    குடும்பத்தினர்   சிலர் அரசாங்க முடிவுகளில் – அரசு ஒப்பந்தங்கள் உட்பட – மூக்கை நுழைத்து அது இது செய்வார்கள், தமிழக அரசின் வருவாய் பெரிதும் குறையும்’ என்கிற எதிர் அணியின் குற்றச்சாட்டு, பொதுமக்கள் பலரின் மனதிலும் எதிரொலிக்கலாம்.  ஆனால் பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர்ந்தால் அந்த ஆட்சி சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை நமக்குக் கிடைக்காது.  இதை மேலும் விளக்கலாம்.

  தற்போதுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள்  அனைவரும்  சடாரென்று பன்னீர்செல்வத்துக்குத் தங்கள் ஆதரவை அளித்து அவரை முதல்வர் ஆக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பன்னீர்செல்வத்தின் கீழ் யார் யார் அமைச்சர்கள் ஆவார்கள்?  அந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவையே முதல்வர் ஆக்கியிருந்தால், அப்போது சசிகலா ஆட்சியில் எந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ஆவார்களோ, அவர்கள்தான் அனேகமாகப் பன்னீர்செல்வம் ஆட்சி அமைத்தாலும் அமைச்சர்களாக இருப்பார்கள்.   இருவரில் ஒருவர் முதல்வராக ஆனால் அந்த அமைச்சர்கள் ஊழல் அமைச்சர்களாக இருப்பார்கள், மற்றவர் தலைமை ஏற்றால் அதே அமைச்சர்கள் மிகச் சரியாக, நேர்மை தவறாமல் வேலை செய்வார்கள் என்று வராதே?   இருவரின் ஆட்சியிலும் அமைச்சர்கள் பெரிதும் வேறு வேறானவர்கள் ஆனாலும், தமிழ்நாடு பல வருடங்களாகப் பழக்கப் பட்ட அடிப்படை அமைச்சர் குணம் மாறாது.  இருவரில் யார் ஆட்சி அமைத்தாலும் அதில் நேர்மை ஓங்கி நிற்கும் என்ற தோற்றம் நமக்குக் கிடைக்கவில்லை.

     பன்னீர்செல்வம்  ஏன் சசிகலாவை எதிர்க்கிறார்? தான் முதல் அமைச்சர் ஆவதற்குத் தடையாக சசிகலா திடீரென்று வந்துவிட்டாரே என்று அவருக்குத் தாமதமாகத் தோன்றியதுதான் காரணம்.  சசிகலாவின் குடும்ப சொந்தங்கள் அவரிடம் இருந்து ஏற்கனவே விலகிப் போயிருந்தால், அப்போது பன்னீர்செல்வம் சசிகலாவைக் கடைசிவரை எதிர்க்காமல் சசிகலாவே மீதமுள்ள நாலரை ஆண்டுகளும் முதல்வராக இருக்க ஆதரவு கொடுப்பார் என்பது நிச்சயமா? இல்லை. பன்னீர்செல்வத்தின் முதல்வர் ஆசை தவறானதும் அல்ல.   ஆனால் அது நிறைவேறினாலும், தமிழ் நாட்டு ஆட்சியில் நேர்மையும் திறமையும் எழுந்து நிற்கும் என்பதற்கான தெளிவான அறிகுறி இல்லை.

           தமிழக ஆளுனர் எவரையும் ஆட்சி அழைப்பதற்கு முன்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து அது சசிகலா முதல்வராகத் தடையாக இருந்தால், பன்னீர்செல்வத்திற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இன்னும் கூடி சசிகலா தரப்பை மிகவும் பலவீனப் படுத்தும்.  அது எப்படி அமைந்தாலும் இதைச் சொல்ல வேண்டும்.

     அதிமுக-வில் சசிகலா பெற்ற எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவர்மேல் உள்ள நம்பிக்கையினாலோ மரியாதையினாலோ ஏற்பட்டதில்லை.  ’கட்சிக்குள் யாருமே எதிர்க்காமல் இருக்கும் இவரை நாம் ஆதரிக்காவிட்டால் நம் கதி என்னாகுமோ’ என்கிற கிலியில்தான் பலர் அவரை ஆதரித்திருப்பார்கள்.  எம்.ஜி.ஆர் இருந்தபோது, அதிமுக எம்.எல்.ஏக்களும் கட்சித் தலைவர்களும் கடவுளைக் காண்கிற பரவசத்தொடு அவரை அணுகினார்கள். ஜெயலலிதா தலைமை ஏற்றபிறகு அவர் மறையும் வரை அவரிடம் எம பயம் காட்டி வளைந்தார்கள்.  பின்னர் சசிகலா கட்சியில் தலை எடுத்தவுடன் அவரை எம துதராகப் பாவித்துக் கைகூப்பி அவரிடம் நடுக்கம் கொள்கிறார்கள்.  இப்போது பன்னீர்செல்வம் தனி அணியாக நின்ற பின் அவரிடம் வந்து சேரும் கட்சித் தலைவர்களும் எம்.எல்.ஏ-எம்.பிக்களும் அவர் பக்கம் தலை நிமிர்ந்து நின்று அவரிடம் பொன்னாடை வாங்கிக் கொள்கிறார்கள். பன்னீர்செல்வம் பரவலான ஒரு அனுதாபத்தை ஈர்க்கிறார்.  

       தான் முதல் அமைச்சராக இருக்கும்போது கூட, கட்சியில் இருக்கும் அடுத்த கட்டத் தலைவரை, மனிதனாக மதிக்கும் பன்னீர்செல்வத்தின் பண்பு அதிமுக-வில் பல வருடங்கள் தென்படாத ஒன்று. அத்தகைய பண்பு கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரையும் கவர்ந்து, அதன் விளைவாக சசிகலா தரப்பிலிருந்து பலர் பன்னீர்செல்வத்திடம் வந்து சேர்ந்திருப்பது அதிமுக-வில் ஒரு நல்ல அரசியல் பண்புக்குக் கிடைத்த வெற்றி.  இது சசிகலாவிடமிருக்கும் செருக்கையும் சற்றுக் குறைத்து அவர் பக்கமிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் முதுகையும் ஓரளவு நிமிர்த்தும்.

    ஜெயலலிதாவின்  மறைவுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராகச் சிறப்பாகவும் கண்ணியமாகவும் செயல்பட்டிருக்கிறார். இப்போது சசிகலாவுடன் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது அணிக்கு வரும் கட்சியினரைப் பணிவாகக் கனிவுடன் நடத்துகிறார்.  இதெல்லாம் டெலிவிஷனில் தமிழ்நாடே பார்த்தது. மாநிலம் முழுவதும் மக்கள் பன்னீர்செல்வத்தை விரும்புவது முன்னைவிடவும் – அதாவது ஜெயலலிதா காலத்தை விடவும் - அதிகமாகிறது. ஆகையால் அவருக்கு அதிமுக-வின் எம்.எல்.ஏக்கள்-எம்.பிக்கள் ஆதரவு கொடுத்தால் அவர்களுக்குத் தொகுதிகளில் மக்கள் ஆதரவு இன்னும் கூடும் என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் கவிஞனின் கற்பனையாக ஒன்றை நாம் ஆனந்தமாக நினைத்துப் பார்க்கலாம்.   அது இதோ.

        அதிமுக எம்.எல்.ஏக்கள்  ஆதரவுடன் பன்னீர்செல்வம் ஆட்சி அமைக்கிறார். அதில் பங்கு பெறும் அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து, ”நீங்கள் நேர்மை தவறக்கூடாது. உங்கள் துறைகளில் முறைகேடுகள் எதுவும் நேராமல் விழிப்புடன் கவனியுங்கள். தவறினால் என்னிடமிருந்து நடவடிக்கை வரும். இந்த நல் நடத்தையை உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று எச்சரிக்கை சொல்கிறார். அதோடு, “நேர்மையான ஆட்சியைக் கொடுப்பேன்” என்று மக்களிடமும் பகிரங்கமாகப் பேசி அமைச்சர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் லஞ்ச-ஊழல் எண்ணத்தை மட்டுப் படுத்துகிறார். தமிழகத்தின் சில பல்கலைக் கழகங்களிலாவது அறிவில் சிறந்த நேர்மையானவர்களைத் துணைவேந்தர்களாக நியமிக்கிறார். இவையெல்லாம் ஆட்சியில் பலனும் தருகின்றன. . . . . . .

         அரசாங்கத்தில் அசாதாரணத் திறமையைக் கொண்டு வர முடியாவிட்டாலும் நேர்மையைப் புகுத்துவதே பொது நலனைப் பெரிதும் உயர்த்தும்.  இதைச் செய்ய முடியும் என்பதைக் கூட, சசிகலாவை விடப் பன்னீர்செல்வத்திடம் தான் நினைத்தாவது பார்க்க முடியும். பன்னீர்செல்வம் முதல்வராக வருகிறாரோ இல்லையோ, வந்தாலும் இவ்வகையில் செயல்படுவாரோ இல்லையோ, இப்படிக் கவிஞனின் கற்பனையாக நம் மனம் சிறகு விறித்து மகிழ்வது என்ன ஒரு இனிமை! இன்றைய ஜனநாயகத்தில் இப்படித்தான் நமக்கு ஆனந்தம் வாய்க்குமோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2017


6 comments:

 1. உங்கள் கவிஞர் ஆசை நிறைவேறட்டும்; நிறை வேறலாம்; நிறை வேறும். வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. You have critically analyzed the competitiveness of the two CM candidates. You have liked OPS. I agree. In the three majors issues (Vaarda, Jallikattu & Water from AP) OPS has demonstrated that he is a hands-on CM. This plus his humbleness to mix with other as one among equals (which is so scarce in TN politics) has endeared him to the public. These are striking qualities viz-a-viz that of Sasikala who wants to perpetuate the conventional style of rule in TN which we despise.

  ReplyDelete
 3. Yes your observation is correct! We do agree that Mr. O. Pannerselvam is liked by the electorate because of his "First among equals" has endeared him to the general public. Let us hope the other politicians start behave like him instead of the existing "AIADMK" culture!
  Arumugam

  ReplyDelete
 4. I agree with the views of the gentlemen
  who have made very sensible points on the two contestants.

  ReplyDelete
 5. When time creates gap no new party comes in (with good intent). This is the time we get good people forming party and washing out existing polluted Parties....

  ReplyDelete
 6. ஒரு நடு நிலைமையான கட்டுரை. பன்னீர்செல்வம் உத்தமர் அல்ல. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவை விட பன்னீர் செல்வம் மேல் என்ற கருத்தில் தற்போது அவரை ஆதரிக்கலாம். தூய்மையான அரசியல் தலைவர்களை உருவாக்காதது மக்களின் குற்றமே. 500/1000 வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டால் அதற்கேற்ற தலைவர்கள் தான் கிடைப்பார்கள். இனிமேலாவது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வருமா என்று பார்ப்போம்.

  ReplyDelete