Thursday 12 January 2017

அதிமுக-வில் சசிகலாவின் உயர்வு: யார் தருவார் இந்த, ஜனநாயகம்!


     தலைப்பைப் பார்த்துவிட்டு, சசிகலா அதிமுக-வில் பொதுச் செயலாளராக உயர்ந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப் படுகிறது என்று தப்பாக நினைக்காதீர்கள். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் குரலுமல்ல இது. குறிப்பான அவரது பின்னணியில், இந்திய அரசியல் கட்சிகளின் தலைமை மாற்றம் பற்றிய பொதுவான ஓரு பார்வை இக் கட்டுரை.

     ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளராக நியமனம் ஆனதை எதிர்ப்பவர்கள் கூறும் முதல் காரணம்: அவர் ஜெயலலிதாவின் தனி உதவியாளரகத்தான் முப்பது வருடங்களுக்கு மேலாக இருந்தார், மற்றபடி அவர் தீவிர அரசியலில் இருந்ததே இல்லை.  மேலும், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அதிமுக-வில் சேரவைத்து, பதவிகள் கொடுத்து அடையாளம் காட்டியமாதிரி, ஜெயலலிதா எப்போதும் சசிகலாவை அவ்விதம் கட்சிக்குள் பிரதானமாக முன் நிறுத்தவில்லை என்பதும் ஒரு வாதமாக இருக்கிறது. அதிமுக-வின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் தங்களின் பதவியைக் காக்க சசிகலாவை ஆதரிக்கிறார்கள், ஆனால் பெருவாரியான தொண்டர்களின் ஆதரவு அவருக்குக் கிடையாது, என்பதும் சசிகலா எதிர்ப்பாளர்களின் பேச்சு.

          ஜனநாயக ரீதியில் இயங்க வேண்டிய ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தனது மறைவுக்குப் பின்னால் இன்னார்தான் அவர் இருந்த இடத்தில் வரவேண்டும் என்று கட்டளை இடுவது பொருந்தாது. ஆகையால் ஜெயலலிதா இருந்தபோதே அவர் சசிகலாவைக் கட்சியில் அதிகாரபூர்வமாக பிரபலப் படுத்தவில்லை, தனக்குப் பின் சசிகலாதான் கட்சியை வழிநடத்துவார் என்று சுட்டிக் காட்டியதில்லை என்றெல்லாம் பேச முடியாது. ’எதுவானாலும் சரி, அரசியலில் பெரிதாக ஈடுபடாமல், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் திடீரென்று சசிகலா மாதிரி ஒருவர் கட்சியின் மிக உயர்ந்த பொதுச் செயலாளர் பொறுப்பைப் பெறுவது எப்படிச் சரியாகும்?’ என்பதும் ஒரு கேள்வி. இது சரியான கேள்விதான். ஆனால் இதற்கான பதில் ஜெயலலிதாவிடமிருந்தே வருகிறது.

    ஜெயலலிதா இருந்தவரை, சசிகலா  ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி, ஜெயலலிதா வீட்டிலேயே வசிப்பவர் என்று மட்டும் பொதுவில் அறியப் பட்டவர். கட்சித் தலைவர்களும் பிற மனிதர்களும் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்திக்கச் சென்ற போது அவர்கள் ஜெயலலிதாவின் விருப்பப்படி சசிகலாவை மட்டும் சந்தித்தார்களா, இருவரையும் சந்தித்தார்களா, எந்த அளவுக்கு அவர்களின் விவகாரங்களில் சசிகலா ஈடுபாடும் ஆதிக்கமும் செலுத்தினார் என்பது மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவை ஜெயலலிதாவும், சம்பத்தப் பட்ட அந்த மனிதர்களும், சசிகலாவும் மட்டும் அறிந்தவை. அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்கள் இது பற்றி ஊகிக்கலாம், புரிந்து கொள்ளலாம்.

        நீண்ட காலமாக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்து, பல மனிதர்களிடம் முக்கிய விஷயங்கள் பேசி, சசிகலா பெற்ற அனுபவம் அதிமுக-வில் வேறு எவருக்கும் கிட்டியிருக்காது. அதோடு, அதிமுக-வின் உள் கட்சி விஷயங்கள், ரகசியங்கள், மற்றும் அதிகார விளையாட்டுக்களில் சசிகலா பெற்ற தேர்ச்சி, பிறகு அவரது புத்திசாலித்தனம் மற்றும் சாதுரியம் பற்றி பல மட்டத்திலும் உள்ள அந்தக் கட்சித் தலைவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.  அவரோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களைவிட சசிகலா சில படிகள் மேலானவர், சக தலைவர்களின் நிறை குறைகளை அதிகம் தெரிந்தவர், அவர் தலைமையை ஏற்றால் தங்கள் பதவிகளுக்கும் இப்போதைக்கு ஆபத்தில்லை என்று அந்தத் தலைவர்கள் முடிவு செய்துதான் இப்போது சசிகலாவின் பின் நிற்கிறார்கள்.  பல முன்னணிக் கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகள் பதவிக்காகத்தான் அங்கிருக்கிறார்கள் என்பது சாதாரண உண்மை.  இதில் அதிமுக தலைவர்களை மட்டும் தனியாகக் குறை சொல்வது பாரபட்சமானது.

        சசிகலா இன்றைய சூழ்நிலையில் அதிமுக-வின் பொதுச் செயலாளர் ஆவதற்கு, தான் அறியாமலேயே வித்திட்டவர் ஜெயலலிதாதான். சசிகலாவை, அனைத்தும் அறிகிற சக்தி வாய்ந்த உதவியாளராக ஜெயலலிதா திரைமறைவில் வைத்திருந்தார். மற்றவர்களுக்கு, கட்சிக்குள் உண்மையான ஜனநாயக ரீதியில் பதவி நியமனங்களும் தேர்வுகளும் நடக்கவில்லை, மரியாதையான அங்கீகாரமும் கிடையாது. வா என்றால் வருவது, நில் என்றால் நிற்பது, போ என்றால் போய் விடுவது என்பதை ஏற்றவர்கள்தான் கட்சிக்குள் தவழ்ந்து மேலே வந்தார்கள். ஜெயலலிதா ஏற்படுத்தி விட்டுச் சென்ற இந்த நிலையில் சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளரானது அதிர்ச்சி தருவதல்ல.  

       அடுத்ததாக, பன்னீர் செல்வத்தை விலகச் சொல்லி சசிகலா தமிழக முதல்வர் ஆனாலும் வியப்பல்ல. பணிவுடன் பன்னீர் செல்வம் அதற்காக வழிவிட்டு நின்றாலும் ஆச்சரியமல்ல.  சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் சொல்லப் போகும் தீர்ப்பு சசிகலாவின் எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் வாய்ப்பைத் தடுக்குமா என்று பார்த்த பிறகு இதை முடிவு செய்துகொள்ளலாம் என்றுகூட அவரும் பிற கட்சித் தலைவர்களும் காத்திருக்கலாம்.  நாமும் காத்திருந்துதான் நடக்கப் போவதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், நமது நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெறுவதுகூட ஒரு அரசியல் தலைவருக்கு நிரந்தர வீழ்ச்சியல்ல. அவர் மிகப் பெரிய தலைவராக இருந்தால், கண்டிப்பாக அவர் செல்வாக்கு சரியாது. தண்டனையிலிருந்து மீண்டு வர அவருக்கு வயதும் தெம்பும் இருக்கவேண்டும்.  அதுதான் நமது இப்போதைய ஜனநாயகம்.

        கட்சிக்குள் முறையான சுதந்திரமான வளர்ச்சிக்கும் தலைமை மாற்றத்திற்கும் வழி இல்லை என்கிற நிலையில், சசிகலாவுக்குப் பதில் வேறு யார் அதிமுக-வின் பொதுச் செயலாளராக வந்திருந்தாலும், எதிர்ப்புகளும் சலசலப்புகளும் பரவலாக எழுந்திருக்கும்.  இப்போது சசிகலாவுக்கு வரும் உள் கட்சி எதிர்ப்புகளை விட அவை அதிமாகக் கூட இருக்கலாம் – நமக்குத் தெரியாது.  போகப் போகத்தான் கட்சித் தொண்டர்கள் சசிகலாவை எதிர்ப்பது வலுவானதா, பரவலானதா என்பதும் தெரிய வரும்.    

       காங்கிரஸ்  கட்சியில் சேர்ந்து  நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் ராஜீவ் காந்தி அவரது அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு திடீரென்றுதான் பிரதம மந்திரி ஆனார்.  அவர் கொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேலாகவும், காங்கிரஸ் கட்சியில் சேராதிருந்த அவர் மனைவி சோனியா காந்தி, பின்னர் அக் கட்சியில் உறுப்பினாராகி சில மாதங்களிலேயே அதன் தலைவரானார். இதே மாதிரித்தான் சசிகலா அவர் கட்சியில் முக்கியத்துவம் பெறுவதும் இப்போது நடக்கிறது.  

       ஒரு கட்சியின் பெரிய தலைவர் மறைந்த பிறகு ரத்த பந்தம், நெருங்கிய நட்பு, அவரே சுட்டிக் காட்டியவர் போன்ற காரணங்களினால் கட்சியிலோ ஆட்சியிலோ அவர் இடத்திற்கு வரும் மற்றவர் திறமை உள்ளவராக அமையலாம், சாதாரணமானவராகவும் இருக்கலாம்.  அவரால் கட்சி நடக்கும், ஆட்சியும் நகரும். ஆனால் அப்படிப் பட்டவர் முறையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏனென்றால் முறையாகவும் நேர்மையாகவும் செயல்பட விரும்புகிறவர்கள் இந்த வழிகளில் கட்சித் தலைமைக்கு வரத் தயங்குவார்கள். இதில் விதிவிலக்குகள் மிகவும் அரிது.  ஆக இது போன்ற தலைமை மாற்றம் வருவது கட்சிக்கும் ஆட்சிக்கும் நாட்டுக்கும் பெரிய தீங்கு செய்யும்.   

     அடுத்தபடியாக,  பல  கட்சிகளிலும்  பாசக்கார  அப்பாவோ அம்மாவோ தலைவராக இருப்பதால், பின்னர் ஒரு நாள் அவர் இடத்தில் வருவதற்கு அவரின் மகனையோ மகளையோ, அல்லது எல்லாக் குழந்தைகளையும், கட்சிக்குள் முன்கூட்டியே தயார் செய்து முன்னிலைப் படுத்துகிறார். இதற்கு உதாரணமே வேண்டாம் - இது தவறாமல் அனேகமாக எல்லா பெரிய கட்சிகளிலும் நடக்கிறது. இது தூய்மையான ஜனநாயக முறை அல்ல. ஆட்சி செய்பவர்களை மன்னர்களாகவே பார்க்கும் நமது மக்களும் அறியாமையினால் வாரிசு அரசியலை ஆமோதித்து வரவேற்கிறார்கள். இந்த வழியிலான தலைமை மாற்றமும் தலைவர்களின் குடும்பத்தில் வேலை வாய்ப்பு உண்டாக்குமே தவிர ஆட்சிக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யாது.

        குறுக்கு வழியில் கட்சித் தலைமைக்கும் ஆட்சித் தலைமைக்கும் வருபவர்களை சர்வ சாதாரணமாக ஏற்கும் மக்களைக் கொண்ட இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி அடையக் காத்திருக்கிறது. அது நடக்கும் வரை நமது ஜனநாயகத்தை மக்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளே அதிகம் கொண்டாடுவார்கள். பிறகென்ன, “யார் தருவார் இந்த, ஜனநாயகம்!” என்றுதானே அவர்கள் ஆனந்தமாகப் பாடுவார்கள்?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2017

3 comments:

  1. A very balaced analysis. But the author has omitted to mention that cpi (m) and BJP are two parties which do not follow the course lineage by ancestry .P R IYER

    ReplyDelete
  2. இது தான்
    Rvr
    ஆனால்
    யாருமே
    சசிகலா மாதிரி
    இஷ்ட மித்ர பந்துக்கள்
    அநித்யய சூரிகளுடன்
    நுழைய வில்லை யே

    ReplyDelete
  3. but we cannot digest this. Overall tamilnadu dont have a good leader to lead us. Things are not clear . we need to wait and watch. on top of everthng even BJP is keeping silent in this case. we dont know what is the game plan of bjp also. Only time can give answer

    ReplyDelete