Saturday, 16 April 2016

காதணி, காலணி, கூட்டணி


விஜயகாந்த், தி.மு.க.வோடு அணி சேராமல் மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்று பலர் நினைத்திருக்க மாட்டார்கள்.  ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறாமல் மக்கள் நலக் கூட்டணியைப் பற்றிக் கொள்ளும் என்றும் அனேகர் எதிர்பார்திருக்க மாட்டார்கள். விஜயகாந்தும் வாசனும்கூட அவர்களின் கூட்டணி முடிவைக் கடைசிவரை எண்ணியிருக்க மாட்டார்களோ என்னவோ!

ஒரே சமயத்தில் தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுடன் தே.மு.தி.க. பல நாட்கள் பேச்சுவார்த்தையும் பேரமும் மேற்கொண்டு அந்தக் கட்சிகளைப் பெரும் எதிர்பார்ப்பில் வைத்துப் பின்னர் அவைகள் அனைத்தையும் அம்போ என்று நன்றி கூறிக் கைவிட்டது - பிறகு அதிலிருந்தும் பின்வாங்கி மக்கள் நலக் கூட்டணியில் ஐந்தாவது கட்சியாக இணைந்தது - விஜயகாந்தின் குயுக்தி அல்லது முதிர்ச்சியின்மை என்கிற விமரிசனமும் வந்தது.

பல அரசியல் கட்சிகள் தமக்கு விழும் ஓட்டுகளை அதிகப்படுத்தவும் சட்டசபையில் கூட்டாக மெஜாரிடியை எட்டுவதற்கும் தமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் தொகுதி உடன்பாடுதான் தேர்தல் கூட்டணி.  சேர்ந்தால், சேரும் எல்லாக் கட்சிகளுக்கும் ஆதாயம், தனியாகப் போட்டியிட்டால் அவை அனைத்திற்கும் பலம் குறைந்து ஓட்டிழப்பு ஏற்படும் என்பதால் தேர்தல் கூட்டணிகள் அமைகின்றன.  இந்தத் தேர்தல் கணக்குகள் சாதாரண கூட்டல் கழித்தல் ரகம்தான்.  இவை கட்சிகளுக்குத் தெரிந்தாலும் பெருவாரியான அப்பாவி இந்திய மக்களுக்குப் புரிபடாமல் அவர்கள் தேர்தலையே சர்க்கஸ் மாதிரி பார்க்கிறார்கள். மக்களைப் புரிந்துகொண்ட அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அப்போது அந்தர் பல்டிகள், ஆகாசத் தாவல்கள் என்று வகை வகையான காட்சிகள் தருகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளில் கோமாளி்த்தனங்கள் காட்டி மக்களை மயக்கி மகிழ்விப்பதும் உண்டு. இவை அனைத்தும் தமிழக சட்டசபைத் தேர்தல்களுக்காக அமர்க்களமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

குடியுரிமை பெற்று 25 வயது கடந்த யார் வேண்டுமானாலும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெல்லலாம். பின்னர் மெஜாரிடி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருவர் மாநில ஆட்சிக்கு முதல் அமைச்சராகத் தலைமை ஏற்கலாம். இந்த சட்டம் மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கும்  உரிமைக்கும் தரப்படும் அங்கீகாரம்.  அதன் தொடர்ச்சியாக வருவது தேர்தலில் போட்டியிடுவோரின் சுதந்திரம். அதாவது சுயேச்சையாகவோ ஒரு கட்சியின் பிரதிநிதியாகவோ ஒருவர் எந்தத் தொகுதியிலும் நிற்கலாம். தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் மெஜாரிடி தரவில்லை என்றால் ஜெயித்த உறுப்பினர்கள் கொண்ட கட்சிகள் திடீர்க் கூட்டணி அமைத்து மெஜாரிடி ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம்.

ஆட்சிக்காகத்தான் தேர்தல். வெல்பவர்களுக்குத்தான் ஆட்சி. எவர் வேண்டுமானாலும் வெல்லலாம்.  ஆகையால் எந்த ஒரு கூட்டணியும் எந்தக் கட்சிகளைக் கொண்டும் அமையலாம். மூன்று கட்சி அமைப்புகளோடு ஒரே நேரத்தில் விஜயகாந்தின் தே.மு.தி.க. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது சரியல்ல என்றால் அந்த மூன்றும் ஒரே சமயத்தில் தே.மு.தி.க.வுடன் பேசியபடி விஜயகாந்தைத் தன் பக்கம் இழுத்து மற்ற இரண்டையும் பலவீனமாக்க முயற்சித்ததும் சரியாகாதே?  அவருடன் கைகோர்க்க முயன்ற பிற கட்சித் தலைவர்கள் கூட்டணி பேரக் கில்லாடிகள். ஒரே நேரத்தில் அவர்களிடம் கூட்டணிக்காக தே.மு.தி.க. தொடர்பு கொண்டது அக்கட்சி சில பாடங்கள் பயிலவும் அதன் நிபந்தனைகளைப் பெரிதும் தளர்த்தாமல் வைத்துக் கொள்ளவும் உதவி செய்திருக்கும். 

பெண்களின் காதணி நாளுக்கொரு விதமாக மாறலாம்.  எவரும் உடைக்கேற்றபடி  காலணியையும் அவ்வப்போது மாற்றலாம். அதுபோலத்தான் தேர்தல் கூட்டணியும்! தேவைக்கு ஏற்றபடி கட்சிகள் எப்படி வெண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம், கூட்டணியை மாற்றி மாற்றியும் வைத்துக் கொள்ளலாம் என்று எல்லாக் கட்சிகளும் பழகிவிட்டன. இருந்தாலும், கூட்டணி முயற்சிகளில் விஜயகாந்த் ஒரு ஏல வியாபாரியைப் போல் அதிக பட்ச ஆதாயம்தான் தனது ஒரே குறிக்கோள் என்கிற தோற்றத்தைக் கொடுத்துவிட்டார். இது ஒரு குறை. அரசியல் தலைவர் எவருக்கும் அவரது செயலும் முக்கியம், அவர் தரும் தோற்றமும் முக்கியம் என்பதை விஜயகாந்த் உணரவேண்டும்.

சுதந்திரமாக வாக்களிக்கும் மக்கள், சுதந்திரமாகப் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஜனநாயகத்தின் முக்கிய அடையாளங்கள். மக்கள் அனைவரையும் ஓட்டுப்போட அனுமதித்து, ஆனால் போட்டியிட நினைக்கும் நபர்களுக்கு சுதந்திர வாய்ப்புக் கொடுக்காமல் ஒப்புக்கு பொம்மைத் தேர்தல் நடத்தும் நாடுகள் உண்டு. இந்தியாவில் மத்திய தேர்தல் கமிஷன் நடத்தும் தேர்தல்களில் பொதுவாக வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் உள்ள சுதந்திரம் ஜனநாயகத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்.  ஆனால் கிடைத்த சுதந்திரத்தைத் தெளிவுடனும் பொறுப்புடனும் அனுபவித்து நமது வாக்காளர்களும் வேட்பாளர்களும் ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்க்கும் காலம்தான் வெகு தூரத்தில் உள்ளது.

* * * * * 

Copyright © R. Veera Raghavan 2016