Friday 11 December 2015

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : யாருக்கு மருமகள் யாரோ - எந்த நாட்டினில் பிறந்திருப்பாரோ!

”என்னை யாருன்னு நினைச்சேள்? நான் இந்திரா காந்தியோட மாட்டுப் பொண்ணாக்கும். யார் கிட்டயும் எனக்கு பயம் கிடையாது”ன்னு பேசிருக்கையேம்மா சோனியா.  எந்த சந்தர்ப்பத்துல இப்படிப் பேசிருக்க, இது என்னென்ன அர்தங்களை உண்டாக்கறதுன்னு நினைச்சுப் பார்த்தையா? நானே விளக்கமா சொல்லிடறேன்.

கஷ்டத்துலயும் மனசுல பயமில்லாத நிலைக்கு தைரியம்னு பேர்.  இந்திரா காந்தி மாதிரி நீயும் தைரியசாலின்னு சொல்ல வந்திருக்க. சரி, தைரியம்னா என்னன்னு விலாவாரியா பாக்கலாம்.

’ஒரு காரியத்தை மத்தவா யாருக்கும் பயப்படாம, எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாம துணிஞ்சு செய்யறதுதான் தைரியம்’னு பொதுப்படையா பல பேர் சொல்லுவா.  அப்படின்னா காட்டுல ராஜாங்கம் பண்ணிண்டு 2000 யானைகளை வைகுண்டத்துக்கு அனுப்பிட்டு  போலிசுக்கும் சிம்ம சொப்பனமா இருந்தானே சந்தன வீரப்பன், அவன் தைரியசாலி. மும்பை வி.டி ரயில்வே ஸ்டேஷன்லயும் தெருக்கள்ளயும் டப்பு டப்புனு அப்பாவி ஜனங்களை சுட்டுக் கொன்னானே பயங்கரவாதி கசாப், அவனும் தைரியசாலிதான். இவா ரண்டு பேர் செஞ்ச காரியங்கள் பயமின்மைலயோ தைரியத்துலயோ சேர்த்தி இல்லை.  அதெல்லாம் அடாவடி, அக்கிரமம்.  அதாவது தப்புக் காரியத்தோட சேர்ந்த பயமின்மை, துணிவு.  அதுக்கு மரியாதை கிடையாது.  ரைட்டுக் காரியாத்தோட சேர்ந்த துணிவுக்குத்தான் தைரியம்கற கௌரதையான பேர் உண்டு.  அகிம்சைய ஆயுதமாப் பண்ணி வெள்ளக்காரனோட அதர்ம அரசாங்கத்தை எதிர்த்தாரே காந்தி, அவருக்கு இருந்தது தைரியம்.

ரண்டாவது, நீ எந்த சமயத்துல பேசிருக்க?  உன்னோட, உன் பையனோட நிர்வாக ஒழுக்கம் சம்பத்தப்பட்ட ஒரு கேஸ் கோர்டுல நடக்கறதே அநியாயம்கறா மாதிரி உங்க கட்சி அமளி பண்றபோது நீ பேசின பேச்சு அது.  நிர்வாக ஒழுக்கத்துல நேரு பெரிய குணவான்.  அவர் பொண்ணு இந்திரா காந்தி அந்த விஷயத்துல பெரிசா பேர் வாங்கினது இல்லை.  உங்க கேஸ் சூழ்நிலைல ”நான் நேரு குடும்பம். கட்சிப் பணத்தையோ மத்தவா பணத்தையோ ஏப்பம் விட மாட்டேன். கேஸை கோர்ட்டுல சந்திச்சு தூள் பண்ணிடறேன். அந்த தைரியம் எனக்கு இருக்கு" அப்படிங்கற ரீதில நீ சொல்லிருந்தா பொருத்தமா இருக்கும். இல்லை, ஒரு வகைல பொருத்தமா இருக்காதுன்னு நினைச்சு நீ இந்திரா காந்தி உறவை மட்டும் பிரதானமா பேசிட்டையோன்னும் தெரியலை.

எனக்குப் படற இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். நீங்க எப்படிப் பட்டவா, எதை சிலாகிப்பேள், எதைத் தள்ளுவேள்னு நீங்க குடுக்கற சிக்னல்படிதான் உங்களுக்கு ஆலோசகர்களும் வந்து சேருவா.  நீயோ உன் பிள்ளையோ உங்க ஆலோசகர்களைக் கூப்பிட்டு “ஆட்டைத் தூக்கி மாட்டுல போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டுல போட்டு கொழிக்கற லாபம் வர்ர மாதிரி ஒரு சூப்பர் பிளான் போடுங்கோ”ன்னு சொல்லிருக்க மாட்டேள்.  ஆனா, நீங்க எதை பேஷ் பேஷ்னு பாராட்டி ஏத்துப்பேள்னு உங்க ஆலோசகர்கள் கணிச்சு அதுக்கேத்தா மாதிரி ஏதோ பிளான் போட்டுக் குடுத்து உங்ககிட்ட பாராட்டையும் ஆதாயத்தையும் வாங்கிண்டு உங்களுக்கு சிக்கலைக் குடுத்துட்டா. இல்லாட்டி, கடனைக் கைமாத்தி விடறதையும், கம்பெனி ஆரம்பிக்கறதையும் ஷேர் வாங்கிண்டு கடனைக் கழிக்கறதைப் பத்தியும் உங்களுக்கா எப்படித் தெரியும்?  ’யதா ராஜா, ததா மந்திரி’ன்னு ஒரு இந்திய அரசியல் சூத்திரம் எழுதலாம்னு தோண்றது.

பயமின்மைக்கு உதாரணமாச் சொன்னயே உன் மாமியார் இந்திரா காந்தி – அவா கூட இந்த மாதிரி கன்னா பின்னா காரியங்கள்ளாம் பண்ண மாட்டாளேம்மா?
* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

5 comments:

  1. சொல்லவேண்டிய அவ்வளவையும் சொல்லிவிட்டாள் அம்புஜம் பாட்டி. கோபம் ஓங்க, வீரப்பனுடனும் ஒப்பிட்டுவிட்டாள்.

    ReplyDelete
  2. டோக்ராஜீ நுட்பங்கள் தெரிந்த மனிதர். அம்புஜம் பாட்டிக்கு ஆமாம் போட்டு விட்டார். அருமையா எழுதியிருக்கும் பாட்டிக்குத்தான் தகரியம்.
    My comment in the Hindu: "Nehru was lofty. Indira was despotic. Rajeev was a misfit. Sonia is crafty. Rahul is nearly moronic.

    ReplyDelete
  3. அதாவது தப்புக் காரியத்தோட சேர்ந்த பயமின்மை, துணிவு. அதுக்கு மரியாதை கிடையாது. ரைட்டுக் காரியாத்தோட சேர்ந்த துணிவுக்குத்தான் தைரியம்கற கௌரதையான பேர் உண்டு. Nicely written piece, Raghavan! Keep 'em coming!

    ReplyDelete