Wednesday 4 November 2015

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : முஸ்லிம் மாமாக்கு வந்தனம்

     நீங்கதான மௌலானா கலீத் ரஷீத் ஃபரங்கிமஹ்லி? நீங்க லக்னோல ஒரு நல்ல காரியம் பண்ணினேள்னு பேப்பர்ல படிச்சேன். அதாவது முஸ்லிம்கள்ள பசு மாட்டு மாமிசப் பழக்கம் இருக்கறவா அதை விட்டுடலாமேன்னு ஒரு கூட்டத்துல மேடை ஏறி வேண்டுகோள் வச்சு சுத்தி இருந்தவாளோட பசும்பால் சாப்பிட்டேளாம். நீங்க பண்ணினது ரைட்டா தப்பான்னு உங்க மனுஷா நிறைய பேர் அபிப்ராயம் சொல்லி இருப்பா.  இந்தப் பக்கத்துலேர்ந்து சில பேர் ”இந்தியாவுல இருந்தா இப்படிச் செய்யறதுதான் சரி”ன்னு இதைப் பத்தி சாதாரணமாவும் பேசி இருக்கலாம்.  ஆனா நான் உங்களப் பத்தி பெரிசாத்தான் நினைக்கறேன்.  இந்து முஸ்லிம் இணக்கத்துக்கு நீங்க பெரிய தொண்டு பண்ணிருக்கேள்னு சொல்லணும். ஏதோ ’இந்துக்களுக்கு ஆதரவா பேசறதுக்கு ஒரு முஸ்லிம் கிடைச்சா அடிச்சது லக்கி பிரைஸ்’ங்கறா மாதிரி நான் பேச வரலை.

   எல்லாத்துக்கும் ”இது ரைட்டு அது ராங்கு – நான் சரி நீ தப்பு”ன்னே பேசிண்டிருந்தா பேச்சுதான் மிஞ்சும், பேதம்தான் வளரும். ஆயுசு வரைக்கும் நிம்மதியப் பாக்கமுடியாது, வாழ்க்கைய ரசிக்க முடியாது. எங்க விட்டுக் குடுக்கணும், எதுக்கு தாராள சிந்தனை வேணுங்கற உள்ளுணர்வு கணவன் மனைவியா குடும்பம் நடத்தறதுக்கே வேண்டிருக்கு. அண்ணன் தம்பி, அக்கா தங்கை ஒத்துமைக்கும் வேணும். அது இல்லன்னா ஃபிரண்டாக்கூட இருக்க முடில. ஏன், இந்திய அம்மா அப்பாக்கள் இன்னும் அதிகமாவே அவா குழந்தைகளுக்கு விட்டுக் குடுத்திண்டிருக்கா – அவாள்ள பல பேர் ஆறு ஆறு மாசம் அமெரிக்காவுக்குப் போயும் கடமையா அல்லல் படறா.  இதான நிதர்சனம்? அப்ப இந்துக்களும் முஸ்லிம்களும் ஒவ்வொரு விஷயத்துக்கும் தப்பு ரைட்டு பாக்காம, சில இடங்கள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் வழி விடறதும் விட்டுக் கொடுக்கறதும் எவ்வளவு விவேகம், புத்திசாலித்தனம்?

     எந்த நாடோ என்ன மதமோ, அதிகமான மனுஷா மனசுக்குள்ள பாதுகாப்பா, த்ருப்தியா நினைச்சுக்கற உறவு அவா அவா அம்மா அப்பாவாத்தான் இருப்பா. அதுக்குக் காரணம், அம்மா அப்பா குழந்தைகள்ட்ட குத்தம் பாக்காம விட்டுக் குடுக்கறா. அதுனால அம்மா அப்பா மேல நமக்கெல்லாம் ஒரு நன்றி கலந்த பிடிப்பு இருக்கு. ஒருத்தர் இன்னொருத்தருக்கு பொறுப்பா விட்டுக் குடுத்தா அது மத்தவாள்ட்ட எப்பிடி நல்ல எண்ணத்தை விதைக்கும்னு வீட்டுக்குள்ளயே தெரிஞ்சுக்கலாம், பாத்தேளா?

     ”இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையா இருக்கணும்”னு மந்திரிமார்கள் விடற அறிக்கைகள்ள சம்பிரதாயம்தான் இருக்கும், ஜீவன் இருக்காது. அரசாங்கத்துல இருக்கறவா அப்பிடித்தான் பொம்மையாப் பேசணும், அவாளால வேற மாதிரி வார்த்தைகள் பொதுவுல சொல்ல முடியாது.  உங்க செயல் அப்பிடி இல்லை. உங்ககிட்டேர்ந்து இப்பிடி ஒரு பேச்சை யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது.  நீங்க மந்திரியா இல்லாததுனால உங்க நல்ல பேச்சுக்கும் செயலுக்கும் பத்திரிகைல முதல் பக்கத்துல இடம் கிடைக்கல – உள் பக்கத்துல ஓரமா சின்னதாத்தான் நீங்க கிடந்தேள்.  ஆனா நினைச்சுப் பாக்கறேன் – உங்க கூட்டத்தை அமைச்சவா பசு மாட்டு மாமிசம் தவிருங்கோன்னு கேட்டுண்டது மட்டுமில்லாம அதுக்கு எப்பிடிப் பொருத்தமா பசும் பாலயும் கூட்டத்துல வினியோகம் பண்ணிருக்கா! ஜோர்!.
  
   பசு மாட்டு மாமிசம் சாப்பிடறதுக்கு உங்க மதத்துல தடை இல்லை.  இந்துக்கள்ள நிறையப் பேர் அதை சாப்பிடறது பாவம்னு நினைக்கற அளவுக்குத் தள்ளி வச்சுருக்கா. அதே நேரத்துல இந்துக்கள்ள சில பேர் அதை சாப்பிடறதும் உண்டுன்னு நீங்களே கேள்விப் பட்டிருப்பேள் – இதைச் சொல்லியே பசு மாமிசம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்னு நீங்க வாதம் பண்ணிருந்தா அதுக்கு யாரும் பதில் சொல்லிருக்க முடியாது.  உங்க பெரிய மனசுக்கு இதான் ப்ரூஃப். வந்தனம்.

   ”நம்ம நாடு உணவுக்காக இழக்கற பசு மாடுகள்ள முஸ்லிம்கள் வீட்டு சாப்பாட்டு இலைக்குப் போறது சின்ன எண்ணிக்கைதான் - இந்துக்கள்ள சில வகுப்பைச் சேர்ந்தவா, மலை வாழ் மக்கள், கிறிஸ்தவா, புத்த மதத்துக்காரா, பார்சிக்கள், கூர்க்கா, நேபாளிகள்னு இருக்கறவாள்ள பல பேர் சாப்பிடறதுக்கும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாற மாமிசத்துக்கும் உயிரைக் குடுக்கற பசுக்கள்தான் ரொம்ப அதிகம் - பாகிஸ்தான் பங்களா தேஷ் நாடுகளுக்கு கடத்தல்ல போற பசுக்களும் ஏராளம்” - இப்பிடில்லாம் விலாவாரியா வந்ததைப் படிக்கறேன். ஆனா இதைப் பத்தி பேசி தர்க்கத்தை வளர்க்காம, முஸ்லிம்கள் பேர் சந்தேகத்துல விழ வேண்டாம், கெடவும் வேண்டாம்னு நீங்க அமெரிக்கையா பெருந்தன்மையா பேசிருக்கேள்.  வந்தனம்.

 பசுவைத் துதிக்கற  இந்துக்கள்  உங்களைப்  பாராட்டாம இருக்க முடியாது. அதே ரீதில நீங்கள்ளாம் நன்றியோட பாக்கறா மாதிரி, பரஸ்பரமா விட்டுக்குடுக்கற ஒரு அறிவிப்பு மத்த மதக்காராள்டேருந்து வரட்டுமேன்னு நினைச்சுப் பாத்தாலே நன்னா இருக்கு. மத்தவாளோட அந்தச் செய்கை – அந்தத் தவிர்த்தல் – உங்க சமூகத்துக்கு அவ்வளவு பெரிய அவசியமா இல்லாட்டாலும், உங்களுக்குன்னே காட்டப் படற பதில் மரியாதையா வரும்போது அதுக்கு உங்க சமூகத்துல மதிப்பு நிச்சயமாக் கூடும். பரஸ்பர அவநம்பிக்கையை விலக்கி சினேகத்தை வளர்த்து தேசத்தை உயர்த்தரதை எண்ணிப் பாக்கறது தப்பில்லையே!

     பசு மாமிசம் வேண்டாம்னு சொன்னதால நீங்க பணிஞ்சு போனதா வெளிப் பார்வைக்குத் தெரியலாம். ஆனா நீங்க நிமிர்ந்துதான் நிக்கறேள்.  ரொம்ப தேங்க்ஸ்! 


* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

4 comments:

  1. A very forceful article on cow slaughter,full of logic and common sense.I hope our secular politicos will see reaso and change their attitude on this issue.
    S.D.Sankaralingam

    ReplyDelete
  2. Beautifully written article. Unfortunately the "Sickular" media, parties & their members will NOT read such articles nor highlight such incidents. It falls on us to spread this. Again unfortunately the anti-Brahmins will only make fun of the language used & miss the message like missing the wood for the trees. Happy to see Mr. D. Sankaralingam's comments.

    ReplyDelete
  3. Very good !! Keep doing the Great Job!!!

    ReplyDelete