Wednesday 4 March 2015

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : முப்தி! உங்க நிதானம் ஜப்தி!

      
இந்த முப்தி முகமது சயீதை நெனைச்சா அழறதா சிரிக்கறதா சொல்லுங்கோ.  ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்பவும் முதல் மந்திரியா வந்திருக்கமே, நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு வேலைய ஆரம்பிப்போம்னு தோணினதோ? ஊஹூம். நாட்டுல நெறையப் பேர் கதி கலங்கறா மாதிரி ஒரு வேட்டப் போடறார்.

என்ன சொன்னார் தெரியுமொல்யோ? ஜம்மு-காஷ்மீர்ல தேர்தல் அமைதியா நடந்து முடிஞ்சதுக்குக் காரணம் அங்க இருக்கற ஹுரியத்-காராளும் கத்தி-துப்பாக்கி-குண்டடோட அலையற தீவிரவாதிகளும்தானாம்.  அதாவது அவாள்ளாம் பெரிய மனசு பண்ணி கையக் கட்டிண்டு தேமேன்னு இருந்தாளாம், அதான் காரணமாம். போதாக்குறைக்கு பாகிஸ்தானுக்கும் நமஸ்காரத்தப் பண்ணி ”ஹி ஹி, ஒங்க ஆசீர்வாதத்துல எங்க ஸ்டேட்டுக்குள்ள கலவரம் இல்லாம தேர்தல் முடிஞ்சது. ரொம்ப தேங்ஸ் பாஸ்!”ங்கறா மாதிரிப் பேசி வழிஞ்சிருக்கார்.  பகவானே பகவானே!

அவா அவா விஷயத்துல அவா அவா சமத்தா சூட்டிக்கா இருக்க வேண்டியதுதான்.  அரசியல்னா ஜாஸ்தியாவே கெட்டிக்காரத்தனம் வேணும்தான். ஒரு வேளை இப்பிடி நெனைச்சுத்தான் பாவம் முப்தி பேசிட்டாரோ? தோண்றதச் சொல்றேன். 

ஏற்கனவே முப்தி டெல்லில மத்திய உள்துறை அமைச்சரா இருந்தப்போ இவர் பொண் ஒருத்திய தீவிரவாதிகள் கடத்தி வச்சுண்டு “எங்க கூட்டாளிகள் அஞ்சு பேர அரசாங்கம் பிடிச்சு ஜெயில்ல வச்சிண்டிருக்கே, அவாள வெளில விட்டாத்தான் நாங்க இவர் பொண்ணை விடுவிப்போம்”னு அடம் பண்ணினா.  உடனே முப்தியோட அரசாங்கம் சரின்னு சொல்லி ரண்டு தரப்புக்கும் விடுதலை கிடைக்கறா மாதிரி ஏற்பாடு பண்ணிடுத்து.   இது நடந்தது 1989-ல.  அது பழைய சமசாரம்கறதுனால அதைப் பத்தி இப்ப வேண்டாம்.

2014 எலக்‌ஷன்ல ஜெயிச்சு பி.ஜே.பி கட்சி இன்னிக்கு மத்திய அரசங்கத்த மெயினா நடத்தறது. அந்தக் கட்சி அரசாங்கமோ தீவிரவாதிகளக் கண்டும் காணாததுமா இருக்காது. அவா கைவரிசையக் காட்டினா ஸ்ட்ராங்கா எதிர் நடவடிக்கை எடுக்கத் துணியும். இது எந்தத் தீவிரவாதிக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கோ? இந்த சூழ்நிலைல ’பிரிவினை, தனி நாடு, பாகிஸ்தானோட இணப்பு’ன்னு சொல்லி காஷ்மீர்ல கத்தி கபடாவோட போராட்டம் பண்றவாளுக்கும், அவாளத் தாங்கி, தூண்டி விடற பாகிஸ்தானுக்கும் என்ன தோணும்? ‘ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கம்கறதே இன்னிக்கு இருக்கற கெடுபிடி இந்திய தேசத்தோட அமைப்புதான். அதுனால நம்ம நோக்கத்துக்காக இந்தியாவுக்கு எதிரா பண்ணவேண்டிய கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பிணையக் கைதி வேலைகள்ளாம் காஷ்மீர்லயும் இனிமே ஜரூரா பண்ண வேண்டியதுதான்.  இதுக்கு முப்தியே முதல் அமைச்சரா இருக்கறது சௌரியந்தான். அவர் நம்ம பழைய க்ஸ்டமர் வேற. நம்மள ரொம்பத் தடுக்க மாட்டார்.  வெளையாடுவோம்’னு நெனைப்பா இல்லயா?  அப்படீன்னா முப்தி மாதிரி தந்தை ஸ்னானத்துல முதல் அமைச்சராவும் இருக்கறவரோட இக்கட்டு அவருக்குத்தான் தெரியும்.  காஷ்மீர் தீவிரவாதிகள்ள பழைய மாதிரி முப்தி குடும்பத்துக்குத் தீங்கு பண்ண நெனைக்கறவா இருந்தா அவாளப் ப்ரீதி பண்ணினா தேவலைன்னு அவர் நெனைக்கலாம். அதுக்காக அந்த டேஞ்சர் பார்ட்டிகள்ட இப்பிடி சொல்லிக்கறது நல்லதுன்னு அவருக்குத் தோணலாம்: ‘ஒங்க சகாயத்துலதான் எலக்‌ஷனே நடந்தது. அதுலதான் நான் இப்ப முதல் அமைச்சரா ஆயிருக்கேன். எல்லாம் நீங்க போட்ட பிச்சைதான்.  ஒங்க காலப் பிடிச்சுக்கறேன்.  நீங்கதான் என் குடும்பத்த ரக்‌ஷிக்கணும்’ன்னு அந்த ஆசாமிகளுக்குப் புரியரா மாதிரி நைஸா ஏதாவது சொல்லிடறதுன்னு தீர்மானம் பண்ணிப் பேசிட்டாரோ என்னவோ?  

எதுவானாலும் இருக்கட்டும்.  ஒரு ஊர்ல ஜனங்கள்ளாம் பெரிசா கூடறா மாதிரி எதோ ஊர்வலமோ பொதுக்கூட்டமோ கேளிக்கையோ அமைதியா நடந்ததுன்னு வச்சுக்கலாம்.  அப்ப அந்த ஊர் போலீஸ் கமிஷனர் மறு நாள் இப்பிடிப் பேசலாமா?: “ஊரில் உள்ள பிக் பாக்கெட்டுகளே, ரௌடிகளே, கேடிகளே மற்றும் அடுத்த ஊர் அடாவடி அண்ணன்களே, நீங்கள் காட்டிய கருணையும் ஒத்துழைப்பும் தான் நேற்று ஊருக்குள் பொது அமைதி காக்க உதவியது. உங்களுக்கு நன்றி” இந்தப் பேச்சைக் கேட்டா ஊர் உலகத்துல அந்த போலீஸ் கமிஷனரப் பத்தி என்ன நெனைப்பா? லோகல் ரௌடிக்குஞ்சுகள் கூட நமட்டுச்சிரிப்பு சிரிப்பாளே?

இல்ல, அமெரிக்காவ எடுத்துக்குங்கோ. ஆஃப்கானிஸ்தான்ல ப்ளான் போட்டு தீவிரவாதிகள் 2001-ல ரெட்டை கோபுரங்கள சாய்ச்சதுக்கப்புறம் யூ.எஸ்-ல தீவிரவாதம்  பெரிசா தலை எடுக்கல. இதுக்குக் காரணம் அமெரிக்கா தீவிரவாதத்த நன்னா கண்காணிக்கறது, தடுப்பு நடவடிக்கைகள எடுக்கறது, நாட்டுக்குள்ள தீவிரவாதம் கொஞ்சம் எட்டிப் பாத்தாலும் அதுமேல கடுமையாப் பாய்ஞ்சு நசுக்கறதுன்னு அங்க நிம்மதியா வாழ்க்கை நடத்தறவாளுக்குத் தெரியும். இந்த நிலமைல ஒபாமா இப்படிப் பேசிடறார்னு வச்சுக்குங்கோ: “ஐயா அகில உலகத் தீவிரவாதிகளே!  2001-க்கு அப்பறம் உங்க தயவுலதான் எங்க நாட்டுல குண்டு வெடிப்பு, நாசவேலை, உயிர்ச்சேதம்னு பெரிசா நடக்காம இருக்கு.  எங்க உள்நாட்டு அமைதி உங்க கடாட்சம்தான். உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!”. இப்பிடி ஒபாமா பேசினார்னா அதுக்கப்பறம் அந்த நாட்டு ஜனநாயகத்துல அவரை யாராவது சீந்துவாளா?

ஆனா முப்தியோட ஜாதகம் வேற மாதிரி. அவர் இப்பிடியும் பேசலாம்.  ஹாயா முதல் அமைச்சராவும் இருந்திண்டிருக்கலாம்.  அதான் நம்ம நாட்டு ஜனநாயகம்கறது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

4 comments:

  1. பாட்டி இவ்ளோ அப்டுடேட்டா இருக்கேளே!

    ReplyDelete
    Replies
    1. என்னடாப்பா பண்றது. பப்ளிக்கா பேச வந்துட்டா நம்மள தயார் பண்ணிக்கணுமே!

      Delete
  2. And over and above all this, he has now released a dreaded separatist also, all the while talking about integrating kashmir with mainstream.

    ReplyDelete